Towards a just, equitable, humane and sustainable society

சாவித்திரிபாய் பூலே – முதல் பெண்ஆசிரியர்

0
No votes yet
0
Post a comment

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் பூலேவின் குறும்படம் தயாரித்தலும்...சிற்பிகள் உருவான கதையும்...படத்தின் வெற்றியும்....

குழந்தைகளின் கற்றலை எளிமையாக்க பல்வேறு கற்றல் கற்பித்தல் யுக்திகளை ஆசிரியர்கள் பலர் கையாண்டு வருகின்றனர். குழந்தைகளின் கற்பனை மற்றும் சிந்தனைத்திறனை மேலும் வளர்க்கும் விதமாக ஒரு புதிய கற்றல் - கற்பித்தல் யுக்தியைத் (Stop Motion Animation) தன் வகுப்பறையில் கையாண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளனர் பலர். இதை அனைத்துப் பள்ளி ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஓர் உயர் எண்ணத்தோடு இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலேவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு படமாக,  இந்த STOP MOTION ANIMATION APP மூலம் எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளை 13 பேர் கொண்ட ஆசிரியர் குழு செயலாற்றத் துவங்கினோம்.

காணொலி பதிவிற்காக நாங்கள் ஆயத்தமாகும் போதே, அதற்கான கலந்துரையாடலில் செய்ய வேண்டிய பணிகளை வரையறுத்துக் கொண்டோம். எங்களது பணிகளான பயிற்சி, திரைக்கதை, வசனம் எழுதுதல், ஒலிப்பதிவுகள்,  படங்களை வெட்டித் தயார்செய்தல், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு  என எங்கள் முன்னிருந்த பணிகளை நாங்கள் எங்களுக்குள் பிரித்துக்கொண்டு பதிமூன்று பேரும் (சசிக்குமார், கேசவர்த்தினி, ஜேம்ஸ், சுபாஷினி, பத்மினி, நாதன், சங்கரதேவி, ராஜேஷ், பச்சையம்மாள், பவானி, ராஜதிலகம், சண்முகப்ரியா மற்றும் ராஜேந்திரன்) மூன்றுகுழுக்களாகப் பிரிந்து செயல்படத்துவங்கினோம். தேவைப்படும் சமயங்களில் இணைந்தும் செயல்படதுவங்கினோம். ஒருங்கிணைந்து பேசுவது, வேலைகளைப்பற்றி உரையாடுவது எனச்செயல்பட்டோம். நாங்கள் எங்கள் சொந்த நேரத்தில் செயல்பட்டதால், பள்ளிநாட்களில் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களில் பகல்நேரம் என இயங்கினோம்.  படத்திற்கான ஆதாரமாக அசிம்ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட சாவித்ரிபாய்பூலே புத்தகம் தான் படத்திற்கான கதையும் படமும்.

அ) படத்திற்கான பயிற்சி:

‘Stop Motion Animation’ படத்தயாரிப்பிற்கான பயிற்சிக்காக, ஆசிரியர் சசிக்குமார் அவர்கள், திரு. சைமன் அவர்களின் பயிற்சி வகுப்பின் பொழுது  பயன்படுத்திய power point slides கொண்டு எங்களுக்கு எளிதாகப் புரியும்படியாகப் பயிற்சி அளித்தார்.

ஆ) திரைக்கதை மற்றும் வசனம் :

சாவித்திரிபாய்பூலே அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் துணை கொண்டு திரைக்கதைகளை உருவாக்கினோம். கதையை உருவாக்கினோம். கதைக்கேற்ப படங்களை முடிவு செய்தோம். கதையையும் படத்தையும் மனதில் கொண்டு வசனங்கள் எழுதினோம். மேலும், கதைக்கு ஏற்ற கதாப்பாத்திரங்களை முடிவுசெய்து, அக்கதாப்பாத்திரங்களுக்குப் பொருத்தமான வசனங்களை எழுதிக்கொண்டோம்.

இ) ஒலிப்பதிவு (Voice Record)

வசனங்களுக்குப் பொருத்தமான குரல்வளங்களைத் தேர்வு செய்து பதிவுசெய்ய ஆரம்பித்தோம். கதை கூறும் ஸ்க்ரிப்டை புரிந்து குரல்களைத் தேர்வு செய்தோம். தேர்ந்தேடுத்தவர்களைப் பயிற்சிக்குட்படுத்தினோம். குரலில் ஏற்ற இறக்கம், உணர்வுகள் உருவாக எனப்பயிற்சி தேவைப்பட்டது. ஒவ்வொரு குரலையும் கதைக்கேற்ப பதிவு செய்ய, அதற்கு மேலும் ஒலிப்பதிவு செய்து வைத்துக்கொண்டோம்.

ஈ) படங்களைத்தயாரித்தல் (Picture cut)

காணொளிக்குத் தேவையான காட்சிப்படங்கள் மற்றும் கதாப்பாத்திரங்களைப் பற்றி ஒரு கலந்துரையாடல் மேற்கொண்டோம். அப்பொழுது கதாப்பாத்திரங்களையும் காட்சிபடங்களையும் எவ்வாறு வரைதல் மற்றும் யார் யார் என்னென்ன படங்களை வரையப் போகிறோம் போன்ற தேர்வு நடந்தேறியது. அதன்படி படங்களை வரைதல், வெட்டுதல், மற்றும் வண்ணமிடுதல் என எங்கள் பணிகளை வீட்டிலும் மற்றும் APF வளாகத்திலும் செயல்படத் தொடங்கினோம். அதற்கான சந்தேகங்கள் மற்றும் கலந்துரையாடலையும் நாங்கள் தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்டு செயல்பட்ட பணிகுறிப்பிடத்தக்கது.

உ) புகைப்படஒளிப்பதிவு Photos &Dideco)

வசனம் மற்றும் படங்கள் தயார் செய்தபின் புகைப்பட ஒளிப்பதிவு ஆரம்பித்தோம்.  திரைக்கதைக்கு ஏற்ற படங்களைக்கொண்டு தொலைபேசியின் வாயிலாகப் புகைப்படம் எடுக்கப்பட்டது. ஒருநிமிடகாட்சிக்குக் குறைந்தது 150 புகைப்படங்களாவது தேவைப்படும். மிகப்பொறுமையாக ஒவ்வொரு காட்சிகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. நாங்கள் பணிசெய்யத் தொடங்கியதிலிருந்து APF – ல் எங்களுக்கென்று ஒளிப்பதிவு செய்துகொள்ள ஓர் அறை தயார் (( Light Setting)) செய்து கொடுத்தனர். பள்ளி வேலைநேரம் முடிந்த பிறகு மற்றும் விடுமுறை நாட்கள் எனத்தொடர்ந்து 15 நாட்கள் அவ்வறைக்குள்ளே புகைப்பட ஒளிப்பதிவு நடத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊ) படத்தொகுப்பு:

ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு முடிந்தபின், ஒலிஒளி இரண்டினையும் இணைத்து Stop Animation App - மூலம் காணொலி உருவாக்கி பணியை மிகச்செம்மையாகச் செய்து முடித்தோம்.

இவ்வாறு வரையறுக்கப்பட்ட பணிகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு குழுவாக இணைந்து முதல் பெண் ஆசிரியர் காணொளியை வடிவமைத்து எங்கள் குழுவிற்கு ‘சிற்பிகள் புரொக்டெஷன்’ எனப் பெயர் சூட்டப்பட்டு ICT அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. படத்திற்குப் பெயர் வைத்தல்,   ஸ்க்ரிப்டை மொழிபெயர்த்தல், இப்படியே வேலைகள் நீண்டு கொண்டிருந்தது. வேலைகளைச் சேர்ந்து செய்தோம், பிரிந்து செய்தோம், தனியாகச் செய்தோம், கூடிச் செய்தோம். சிலர் பல வேலைகளைச் செய்தோம். சிலர் சில வேலைகளை மட்டும் செய்தோம். சிறிது பெரிது என்றில்லாமல் ஒன்றிணைவை அடையாளப்படுத்தும் நோக்கில் அடுத்த வேலையான ICT மேளாவில் பங்கேற்றோம்.

Audio, Video and New Media or ICT யில் எல்லாப் பிரிவுகளிலும் மொத்தமாக 200 கலைப்படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் எங்களது படைப்பும் காணொளியாகக் காட்சிப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வந்ததும், எங்களது குழு அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது. ICT மேளாவில் மொத்தம் 35 பகுதிகள் இருந்தன. இயக்குநர் பிரதிநிகளாக ஆசிரியர்கள் சசிக்குமார் மற்றும் கேஷவர்த்தினி டெல்லியில் பங்கெடுத்தனர். 70 - க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களின் படைப்புகளோடு வருகை புரிந்திருந்தனர். விழாவின் முதல் நாள், முதல் காணொளியாக எங்களது படைப்பு காட்சி படுத்தப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. விழாவிற்கு வருகைப் புரிந்திருந்த அனைத்து கலைஞர்களின் படைப்புகளும் ஒளிபரப்பப்பட்டன. மேலும் அனைத்து மாநிலங்களைச் சார்ந்த RIE, CIET, SCERT, KVS மற்றும் சில கல்வி சார்ந்த NGO’S கலந்து கொண்டு தங்களின் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தகவல்கள், மற்றும் கற்றல் - கற்பித்தல் உக்திகளைப் பகிர்ந்து கொண்டனர். விழாவின் கடைசி நாளான நவம்பர் 29 அன்று மாலை 5 மணியளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது. கடைசியாக, எங்களது படைப்பும் ‘The First Female Teacher’ சிறந்த காணொளியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருது, சான்றிதழ் மற்றும் ரூபாய் 40,000 மதிப்புடைய காசோலையும் பரிசாக வழங்கப்பட்டது.

இப்படத்தினை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனச் சமூகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்கான முயற்சிகளைச் ‘சிற்பிகள் புரொடக்சன்’ மேற்கொண்டுள்ளது.  சிற்பிகள் புரொடக்சனின் பதிமூன்று பேரும் இப்பரிசுத்தொகையை ICT-யின் அடுத்தடுத்த படைப்புகளுக்குப் பயன்படுத்தலாம் என முடிவு செய்துள்ளோம்.

Teachers:

K. பத்மினி, தொ.ப.அ., அ.தொ.ப. தட்டாஞ்சாவடி.

இல. இராஜதிலகம், தொ.ப.அ, அ.தொ.ப. செம்பியப்பாளையம்.

 

 

 

Term:

0
No votes yet
0
Post a comment