Towards a just, equitable, humane and sustainable society

மாணவர்களின் சமூகப்பின்னணியை அறிந்துகொள்வதன் முக்கியத்துவம்

ஆசிரியர் பெயர்: ரோஸ்லின்

தலைப்பு: மாணவர்களின் சமூகப்பின்னணியை அறிந்துகொள்வதன் முக்கியத்துவம்

பள்ளியின் பெயர்: அரசுத்தொடக்கப்பள்ளி,வேல்ராம்பட்டு.

வகுப்பு : நான்காம் வகுப்பு

  1. மாணவர்களின் கற்றல் பிரச்சனைகளுக்கான தீர்வை உரையாடலின் மூலம் பெற னுடியும்.
  2. மாணவர்களின் சமூகம்  மற்றும் குடும்பம் சார்ந்த பிரச்சனைகளை, அவர்களுடைய பெற்றோருடன் கலந்தாலோசிப்பது அவசியம்.

வேல்ராம்பட்டு அரசுத் தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 15 மாணவர்களில் 60 % மாணவர்களைக் கற்றலடைவுகளைக் கடக்கும்படி இட்டுச்செல்ல முடிகிறது. மற்ற மாணவர்களிடம் நாம் எங்கே தோற்கிறோம்? ஏன் என்னால் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருந்தது.எனவே, இவ்வாண்டு சில முறையான செயல்பாடுகளில்  ஈடு படத் தொடங்கினேன்.

முந்தைய அனுபவம்:

நான் 2000 ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். கோர்க்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறு ஆண்டுகள்  பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அக்காலக்கட்டத்தில் மாணவர்-ஆசிரியர் உறவு மிகச்சிறப்பாக இருந்தது போன்று உணர்ந்தேன். மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள்;தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்;பள்ளிச்செயல்பாடுகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்; பணியை மகிழ்ச்சியாகச் செய்தது போன்று உணர்ந்தேன். வகுப்பறை முழுக்க மாணவர்கள் நிறைந்து இருந்தனர். வெவ்வேறு பட்ட  பின்னணியுடைய மாணவர்களால் வகுப்பறை நிறைந்திருந்தது.

இன்றைய அனுபவம்:

தனியார்பள்ளியின் வளர்ச்சி அரசுப்பள்ளிகளை முடக்கியுள்ளது. அரசுபள்ளியானது,ஏழைக் குழந்தைகள், தனியார் பள்ளியிலிருந்து கை விடப்பட்ட குழந்தைகள், சிறப்புத்திறனுடைய குழந்தைகள், அம்மா அப்பா இல்லாத குழந்தைகள், ஒற்றைப் பெற்றோருடைய குழந்தைகள்,   பெண்குழந்தைகள்… போன்ற குழந்தைகளுக்கானதாக உள்ளது.எங்கள் பள்ளி வறுமையான சூழலில் நகரத்திற்கு மத்தியிலுள்ளது.குழந்தைகள் நகர மற்றும் கிராமச் சூழலுக்கு மத்தியில், பணம் மற்றும் பணமின்மைக்கான இடைவெளியில் வாழ்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

என் வகுப்பறை:

ஏழைக் குழந்தைகள் -  15,

தனியார் பள்ளியிலிருந்து படிப்பு வராததால் கை விடப்பட்ட குழந்தைகள் - 3

சிறப்புத்திறனுடைய குழந்தைகள் - 2

ஒற்றைப் பெற்றோருடைய குழந்தைகள்- 3

பெண்குழந்தைகள் - 7

நான் சந்தித்த பிரச்சனைகளும் அதற்கான காரணங்களும்.

பாடம் மற்றும் வகுப்பறைச் செயல்பாடுகளைச்

சிறப்பாக செய்வது மட்டுமே செயல்பாடாகச் செய்து வந்த நான் மாணவர்களுடன் உரையாடத் தொடங்கினேன்.

அவர்கள் குடும்பச்சூழல் என்னை மிரட்டியது. குழந்தைக்கு என்ன செய்வது என்பதில் என் கவனம் திரும்பியது.

நான் மூன்றாம் வகுப்பாசிரியை.என் வகுப்பில் எழுதப் படிக்கத் தெரியாத நிலையில் ஒரு மாணவி இருந்தாள். அம்மாணவிக்குத் தன்னை அறியாமல் சிறு நீர் கழிக்கும் உடல் பிரச்சனையும் இருக்கிறது. இப்பிரச்சனைதான் அவளால் வகுப்பறையில் உட்காரமுடியாமலும் எதையும் கற்றுக்கொள்ள முடியாமலும் போனதற்குக் காரணம். இதனால்,எப்பொழுது வேண்டுமானாலும் வகுப்பறைக்கு வெளியே செல்வது, கழிவறையைப் பயன்படுத்துவது ஆகியவை நடைமுறையாகிப் போயின. எனவே, பெற்றோரை அழைத்து விவரங்களை அறிந்து மாணவியின் பயம் நீங்க உதவினேன். அதுவே அக்குழந்தை கல்வியில் ஈடுபடும்படியான பெரும் மாற்றத்தை உருவாக்க உதவியாக இருந்தது.இதைப் போலவே குழந்தைகள் மனநிலை, உடல்நிலை, திறன் நிலைக்குக் குடும்பமும் காரணமாக இருக்கலாம்.எனவே,அவற்றைக் கடக்க பள்ளி ஆசிரியரும் வகுப்பறையும் உதவ முடியும்.

இன்னும் ஒரு உதாரணத்தைக் குறிப்பிட வேண்டுமானால், என் வகுப்பில்,படிப்பில் பின்தங்கிய  நிலையில் ஒரு மாணவன் இ்ருந்தான். அவனுடைய  அம்மாவை அழைத்துப் பேசும்பொழுது, அவன் தன் அப்பாவைப் பிரிந்து இருப்பதால்  படிப்பில் பின்தங்கி இருக்கிறான் என்பது தெரிய வந்தது.ஆகவே,அவனிடம் "அப்பா வந்துவிடுவார்;வருவதற்குள் நீ நன்றாகப் படித்து பெரியவனாக வேண்டும் "என்று கூறினேன். மேலும் ,நான் அடிக்கடி அவனிடம் தனியாகப் பேசத் தொடங்கினேன்.அப்பொழுது அவனிடம் நல்ல மாற்றத்தைப் பார்க்க முடிந்தது.

ஒரு மாணவனிடம், நீ ஏன் நன்றாகப் படிப்பதில்லை என்று  கேட்டதற்கு “நான் எங்க அப்பா மாதிரி பரோட்டா மாஸ்டராகப் போகிறேன்;எங்க அப்பாவும் படிக்கவே இல்லை”என்று கூறினான்.நான் இதுபற்றி சென்ற ஆண்டு திணிக்கைக்கு வந்த  பள்ளி ஆய்வாளரிடம் குறிப்பிட்டேன். அவர்கள் அவனிடம் பேசினார்கள். அப்பொழுது அவனிடம் கூறிய வார்த்தைகள் எனக்குமே பாடமாக இருக்கிறது. “ நீயும் அப்பா மாதிரி பரோட்டா போடப்போகிறாயா? நல்லது. ஆனால் நீ நன்றாகப் படித்தால் 5 நட்சத்திர ஹோட்டலில் போய் பரோட்டா போடலாம் அல்லவா?” என்றார்கள். அது அவனுக்கு ஒரு உந்துதலாக இருந்தது. மாணவர்களின் கல்வி ஏதோ ஒரு உந்துதலில் தான் துவங்குகின்றது என்பதை உணர முடிந்தது.

மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மட்டும்தான் தவறான பழக்கத்திற்கு உட்படுகிறார்கள் என்ற எண்ணம் என்னுடையது. ஒரு நாள் வகுப்பறையில் வீட்டில் என்னவெல்லாம் செய்வீர்கள்? என்று கேட்டுப் பேசத் தொடங்கினேன். ஆளாளுக்கு ஒரு பதில் கூறினர்.  ஒரு மாணவன் பேசும்பொழுது “நான் அன்றைக்குத் தண்ணியடிச்சப்ப …” என்று தொடங்கினான்.  என்ன செய்வது எப்படித்தொடர்வது என்று கூட அவனுக்குத் தெரியவில்லை. அவன் "நான் சரக்கடிக்கல, பீர்தான் குடிச்சேன் ", என்று விளக்கம் கொடுத்தான்.  இதைக்கேட்ட நான் அன்று தூக்கம் வராமல் தவிப்பது, வகுப்புக்கு வர பிடிக்காமல்,சக ஆசிரியர்களிடமும் வீட்டிலும் இதைப் பற்றி திரும்பத்திரும்பக் கூறி அதைப் பெருசு படுத்துவது என்றிருந்த நிலையிலிருந்து மாற்றி யோசித்தேன்.'அது எப்படிமாணவர்கள் தவறாகும்? இப்படியான சூழலில் அவர்கள் வேறு எப்படி இருக்க முடியும்?' இதுபோன்ற கேள்விகளை எனக்குள் கேட்டுக்கொண்டேன் பின் மாணவர்களை வேறு மாதிரி பார்க்கத்தொடஙகினேன்.  குழந்தைகளின் குடும்பச்சூழலிலிருந்து மாறுபட்ட வாழ்க்கையைப் பள்ளிக்கூடம் தரவேண்டும். அதற்கு நாம் வேறு மாதிரி மாற வேண்டியுள்ளது. என்பதைப் புரிந்து கொண்ட பிறகு என் அணுகு முறையில் மாற்றம்ஏற்பட்டது.

  1. அவர்களிடம் நிறைய பேசுவது,முடிந்தால் தனித்தனியாக பேசுவது,அவர்களுக்குத் தனிப்பட்டவகையில் ஆலோசனைகள் கூறுவது, அவற்றைப் பின்பற்ற முடிந்ததா?எனக்கேட்பது…இப்படி தொடர் உரையாடலை மேற்கொள்வது என முடிவு செய்தேன்.
  2. கல்விமட்டும்தான் அவர்களை வேறு மாதிரியான வாழ்க்கைக்கு இட்டுச்செல்லும் என்றெண்ணிச்  செயல்  பட்டேன்.
  3. கல்வியில் அவர்களது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வெவ்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டேன். பொதுவான கற்பித்தலைச் செய்து முடித்த பிறகு,ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் சில செயல்பாடுகளை உருவாக்கினேன். எங்கள் வகுப்பறையில்  மீத்திறன் குறைந்த மாணவன் ஒருவன் இருக்கிறான்.அவன் தன் வாயிலிருந்து எச்சில் ஒழுகிச் சட்டை தொடர்ந்து நனைந்து கொண்டே  இருக்கும்.கையில் பென்சிலைக் கூட  பிடிக்கமுடியாத அவனால் ஏதோ ஒன்றை எழுத முடிந்ததற்குக் காரணமும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பல்வேறுவகையான செயல்பாடுகள்தான். இப்படி ஒவ்வொரு மாணவரிடமும் வெவ்வேறு மாற்றத்தைப் பார்க்க முடிந்தது.
  4. குழந்தைகள் வீட்டிற்குப் போனதும் வீட்டுப்பாடம் செய்ய வேண்டுமென்பதல்ல. என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி  வகுப்பறையில் பேசி அனுப்புவேன்.

இது போன்ற செயல்பாடுகளால் குழந்தைகளிடம் மாற்றங்களைக்   கொண்டுவர முடிந்தது.

 

 

Grade: 
Rate: 
0
No votes yet
Perspective Type: 
Teacher as Reflective Practitioner