Towards a just, equitable, humane and sustainable society

குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள்?

  1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்பது தெரிந்தால் நாம் அவர்களுக்கு எப்படி கற்பிக்கலாம் என்று திட்டமிடலாம்.
  2. குழந்தைகள் பல முறைகளில் கற்கிறார்கள்; a. ஐம்புலன்கள் வாயிலாகக் கற்றல், b. பார்த்து, கேட்டு, செய்து கற்றல்,         c. தெரிந்ததிலிருந்து கற்றல், d. சூழ்நிலையோடு தொடர்பு படுத்தி கற்றல், e.ஆராய்ந்து கற்றல், f. குழுக்கற்றல்
  3. குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் முறைகளோடு ஆசிரியர் கற்பிக்கும் பொழுது கற்றல் முழுமைபெறுகிறது.
  4. பின்வரும் குழந்தைகளை மையப்படுத்திய கற்பித்தல் முறைகள், அனைத்து விதமான கற்கும் திறனுடைய மாணவர்களுக்கும் ஏற்ற கற்பித்தல் முறைகளாகும். அவற்றில்  சில எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளை உருவாக்குதல் b) படங்களைப் பார்த்து பெயர் எழுதுதல் c) பாடப் பகுதியைப் வாசித்தல் (குழு வாசிப்பு, சங்கிலி வாசிப்பு, இணை வாசிப்பு) d) கோடிட்ட இடத்தில்  தகுந்த வார்த்தைகளால் நிரப்புதல்

குழந்தைகள் மொழியை எவ்வாறு கற்கிறார்கள்? குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டியது எழுத்துக்களை அல்ல, மொழியை. மொழியானது நாம் நினைப்பதை வெளிப்படுத்தவும், பிறர் கூறுவதை புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது என்பதோடு அல்லாமல் குழந்தைகளின் சிந்தித்தல் திறன், தொடர்புபடுத்தும் திறன்,ஆராய்ந்து அறியும் திறன் போன்றவை மேம்படவேண்டும். இதற்கான கற்றல் சூழலைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தருவதே ஆசிரியரின் கடமையாகும்.

குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்பது தெரிந்தால் தான் நாம் எப்படி அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது புரியும் (எவ்வாறு அவர்களுக்குக் கற்றலில் உதவுவது) அவர்களின் தேவை என்ன? விருப்பம் என்ன? எதை? எப்படி? எங்கு? எவ்வாறு கற்பிப்பது? என்பது நன்கு தெரிந்தால் தான், கற்பித்தல் எளிமையாகவும் சிறப்பாகவும் அமையும். குழந்தைகளின் எதிர்ப்பார்ப்பு மற்றும் விருப்பம் நிறைவேறும் பொழுது தான் கற்றலில் ஆர்வமும் ஈடுபாடும் ஏற்படும். அத்தகைய ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டால் தான் கற்றல் மற்றும் கற்பித்தல் எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும், உயிரோட்ட முடையதாகவும் அமைவதுடன் குழந்தைகளின் கற்றல் திறன்கள் மேம்பாடு அடையும்  என்பது உறுதி!

கற்கும் முறைகள் :

a. ஐம்புலன்கள் வாயிலாகக் கற்றல்,

b. பார்த்து, கேட்டு, செய்து கற்றல்,        

c.தெரிந்ததிலிருந்து கற்றல்,

d. சூழ்நிலையோடு தொடர்பு படுத்தி கற்றல்,

e.ஆராய்ந்து கற்றல், f.குழுக்கற்றல்

திறன்பகுதி :

மேற்கூறிய கற்றல் மேம்பாடுகளை மனதில் கொண்டு இரண்டாம் வகுப்பில் வடமொழி எழுத்துக்களை அறிமுகம் செய்தேன்.

கதை கூறல்:

ஒரு ஊரில் ராஜா என்ற சிறுவன் இருந்தான். கோடை விடுமுறை விட்டாச்சு. ஜூன் மாதம் தான் பள்ளி, ஸ்ரீநகரில் உள்ள தன் அத்தை வீட்டுக்குச் சென்றான். அத்தை மகள் ஆஷாவுடன் விளையாடுவான். ஒரு நாள் மாலை அனைவரும் கடைக்குச் சென்றனர். மாமா பஜ்ஜி வாங்கித் தந்தார். பஜ்ஜி சூடாக இருந்ததால் அனைவரும் ஹீ....ஹீ என்ற ஊதி ஊதிச் சாப்பிட்டபின், அத்தைக்கு கால்வலி உள்ளதால் அப்பா என்று அமர்ந்தார். ஜியோ கடையைப் பார்த்த தம்பி ஹை....ஜியோ என்றான் ஹே உனக்கு வேண்டாமா? ஜாங்கிரி, பாதுஷா, கூட இருக்கிறது யாருக்கு எது வேண்டுமோ என்று கேட்டுகேட்டு மாமா வாங்கித் தந்தார். அனைவரும் ஹா ஹா ஹா என்று சிரித்து மகிழ்ந்தனர்.

கதையில் வரும் வார்த்தைகளைச் சொல் அட்டைகளில் ஒட்டி, ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றைக் கொடுத்து அந்த வார்த்தையைப் படிக்கச் செய்து, வகுப்பறை சுவரில் ஒட்டினார்.

விளையாட்டு:

பஸ் ஸ்டேண்டு, பஸ், குளோப்ஜாமுன், ஜீரா,  ஜூன், ஜுலை, நேதாஜி, ராஜாஜி, ஷு,  ஜோடி. போன்ற வார்த்தை மின்னைட்டைகளைத் தயார் செய்து குழந்தைகள் கழுத்தில் கட்டி வட்டத்திற்குள் ஓடச் செய்ய வேண்டும் விசில் சத்தம் கேட்டதும் தங்கள் ஜோடியுடன் சேர்ந்து நிற்க வேண்டும் (அவ்வப்போது அட்டைகளை மாற்ற வேண்டும்), உதாரணமாக

  1. பஸ் ஸ்டாண்டு - பஸ்
  2. குளோப் ஜாமுன் - ஜீரா
  3. ஜுன் - ஜுலை
  4. ரோஜா - புஷ்பம்
  5. நேதாஜி - ராஜாஜி
  6. ஷு - ஜோடி

செயல்பாடுகள்

வார்த்தைகளை உருவாக்குதல் : ன், லை, ஆ, ஓ, டி, ய, ம், உ, சி, ம, வ், தா, ப, லே, பி எழுத்துக்களைக் கொண்டு வார்த்தைகளை உருவாக்கி பின்னர் வாக்கியம் உருவாக்கிடுக.

படங்களைப் பார்த்து பெயர் எழுதுதல்: கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து அந்த படங்களின் பெயர்களை அதற்கு நேராக கோடிட்ட இடத்தில் எழுதவேண்டும்.

பாடப் பகுதியை வாசித்தல்: ஒரு குறிப்பிட்ட பாடப் பகுதியைப் படிக்கும்போது மூன்று விதமாக வாசிக்கலாம்

a. குழு வாசிப்பு - வகுப்பில் சிறு குழுக்கள் உருவாக்கி அவர்களுக்குள்ளாக பாடப் பகுதியைப் பகுத்து வாசிக்கலாம். ஒரு மாணவன் வாசிக்க சிரமப்படும்போது மற்றொரு மாணவன் உதவிசெய்யலாம்.

b. சங்கிலி வாசிப்பு - ஒரு வகுப்பறையில், ஒவ்வொரு மாணவனும் ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்கள் வாசிக்கலாம். பின்னர் அருகிலுள்ள மாணவன், அடுத்த வாக்கியத்தை வாசிக்கலாம். இவ்வாறாக வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் வாசித்து முடிக்கலாம்.

c. இணை வாசிப்பு - ஒரு குறிப்பிட்ட வாக்கியத்தையோ அல்லது தொகுப்பையோ இரண்டு மாணவர்கள் சேர்ந்து வாசிக்கலாம்.

கோடிட்ட இடத்தில்  தகுந்த எழுத்தை எழுதி வார்த்தையைப் பூர்த்திசெய்யவும்.

சுதந்திர போராட்ட வீரர்கள் காந்__, ரா__ __, நோதா__ , சுபா__ சந்திர போ__, __ன்சிராணி போன்றோர் அரும்பாடுபட்டு சுதந்திரம் பெற்றுத்தந்தனர்.

வார்த்தைகளால் நிரப்பவும்.

________ லென்ற ஜூஸ் குடித்தேன்.

________ அப்படியா?

________ எவ்வளவு அருமை?

ஆசிரிய நண்பர்களே, கீழே உள்ள பயிற்சிகளை முயன்று பாருங்கள்.

வாசித்து விளக்கம் கூறுங்கள்

அன்று பக்ள்ளிகூத்திடல், நாகான்ம் வப்பிகுல், புதாதிக சேர்தாந்ன் மனுதிநீ. அனவது கிந்ழித சயைட்டையும் பிந்ய்த செப்ருயுபைம் பாத்ர்த மாவர்கணள் அவனை கேலி செனய்தர். அவனை வப்றைபகுக்கு வெளியே தளினள்ர். அதனை ஆரியசிர் தழ்மிமாறன் பாத்ர்தார். மநாறுள், அவர் வப்றைபகுள்குக் நுந்ழைத போது, மாவர்கணள் அரவது கிந்ழித சயைட்டையும் பிந்ய்த செப்ருயுபைம் பாத்ர்து விந்யனதர். உடனே ஆரியசிர், “அடடே! நான் வப்றைபகுள்குக் வக்ரடாகூது அலல்வா?” என்று கூக்றிகொண்டே வெளியே செறான்ர். மாவர்கணள் அவருனைம் தம் தவறை உந்ணர்து மனுதிநீடயிம் மப்னின்பு கேனட்டர். அவனைரும் நபன்ர்கள் ஆனயிர்.

இந்த பத்தி தவறாக இருந்தாலும் நம்மால் மிக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது காரணம் நம்முடன் தொடர்புடைய ஒன்று அதனால் தான் நம்மால் தவறாக இருந்தாலும் அதை சரி செய்து படித்து சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைப்போலத்தான் நம் குழந்தைகளும் தொடர்பு படுத்திக் கற்கின்றார்கள்.

மேற்கண்ட பத்தியில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் தான் ஆனால் பொருள்...? வெறும் தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்தக் கூடாது. அது பயன் இல்லாததோடு கற்றுக்கொள்வதும் மிகவும் கடினமாகும். வார்த்தைகளிலிருந்து எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் பொழுது கற்றல் மற்றும் கற்பித்தல் எளிமையாகும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

'பை” என்ற வார்த்தையைப் படிக்கும் பொழுது முதலில் நமக்கு தோன்றுவது என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பையின் படம் நினைவில் வருவது இயற்கை. முதலில் எழுத்துக்கள் நினைவுக்கு வருவதில்லை. அது தொடர்பான பொருள் தான் முதலில் நினைவுக்கு  வருகிறது. நாமே தொடர்பு படுத்தும் பொழுது குழந்தைகளும் அவ்வாறு தொடர்புபடுத்தி மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஒரு வார்த்தை சொல்லும் பொழுது குழந்தைகள் பழகிய சூழலில் அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து காட்சிப்படுத்தி, தொடர்பு படுத்திப் பின்னர் உணர்வர். பிறகு அதிலிருந்து எழுத்துக்களை அறிமுகப்படுத்துவது மிக எளிமையானதாக இருக்கும்.

வாசித்து பொருள் கூறுங்கள்

டுவா டுயிங் தூயி ஜானா பாயி பகுனி. தின்னே சே பாபில்லே சக்குளி பிட்டா காரிபே. சேனானே காங்கு கல்லே ச்சுன்னா அனில்லே பிரி அனில்லே. ஜாலவ் பாயிங் தூ ஹேங் பானாக்கூ கல்லே. டுவா கச்சரே ஜாடி கட்ட ஹனில்லா கியே…ஸ். கியே மோ ஜங்கலரு கட்ட கட்டுச்சி. டுவா கோகில்லா மூ. பக்கா மாமு பொச்சரில்லா கியேத்து. டுவா கோகில்லா மூ டுவா.

‘அ’ என்ற எழுத்தை அறிமுகப்படுத்த அம்மா.... அப்பா..... அண்ணன்... அக்கா... போன்ற வார்த்தைகளை அவர்கள் முன்னால் அவர்கள் பார்க்கும்படி ஆசிரியர் சத்தமாக சொல்லி எழுத வேண்டும் .பின்பு அந்த அட்டையைக் குழந்தையிடம் நாள் முழுதும் வைத்திருக்கச் சொல்லி மாலையில் அனைத்தையும் ஒன்றாக்கி அவரவர் அட்டையை எடுக்க சொல்லும் பொழுது மிகச் சரியாக எடுப்பர். இதன் மூலம் குழந்தைகள் சூழ்நிலையோடு தொடர்பு படுத்திகின்றனர். தெரிந்ததிலிருந்து தான் தெரியாததற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது ஐயமற விளங்குகிறது.

விளைவுகள்:

கற்றல், கற்பித்தல் எளிமையாகவும், மகிழ்ச்சியாகவும்,  உயிரோட்ட முடையதாகவும் அமையும். கற்றல் முழுமைபெறும். குழந்தைகளின் விருப்பம் அறிந்து ஈடுபடுத்துவதால் திறன்கள் மேம்பாடு அடையும். குழந்தைகள் மையக் கல்வியாக குழந்தைகள் மைய வகுப்பறையாக மாறும்.

 

சாந்த குமாரி, தலைமை ஆசிரியர், அரசு தொடக்க பள்ளி, வடுவகுப்பம்

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Teacher as Reflective Practitioner