Towards a just, equitable, humane and sustainable society

பூந்தோட்டமே எங்கள் பள்ளியின் முகத்தோற்றம்

கற்றல் சிறப்பாக நடைபெற, கற்றல் சூழல் இனிமையாக இருக்க வேண்டும். பள்ளித் தோட்டத்தையும், பாடல்களையும் மையமாகக் கொண்டு ஆசிரியர் பாடங்களைக் கற்பித்த அனுபவங்களை இக்கட்டுரையின் மூலம் நம்முடன் பகிர்ந்துள்ளார்.

நோக்கம் :

மனிதனுடைய வளர்ச்சி நிலைகளில் மிகவும் முக்கியமானது குழந்தைப் பருவம். குழந்தைப் பருவத்தின் தேவைகளை உணர்ந்து அதற்குரிய சிறந்த சமூகச் சூழலையும், கற்றல் சூழலையும் உருவாக்கித்தருவது நமது  கடமையாகும். இதில் இயற்கை எழில் சூழ்ந்த கல்விச்சாலையும் அடக்கம் என அனைவரும் இணைந்து பணியாற்றத் தொடங்கினோம்.

செயல்பாடு :

கல்விச் சோலையை உருவாக்குவதற்காகத் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பிற பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து ஒருசேரப் பணியாற்றியதால் மிக விரைவிலேயே நாங்கள் விரும்பிய பசுமையான மாற்றங்களைக் காணத்தொடங்கினோம். இம்மாற்றங்களுக்குக் காரணம் ‘நான்’ தான் என சுயநலம் பாராட்டாமல் ‘நீர்’ தான், ‘நீர்’ தான் என அனைவரும் பொதுநலமாகப் பேசியதாலோ என்னவோ எங்கள் பள்ளியின்  நீர்வளமே பள்ளியின் பசுமையான மாற்றங்களுக்குக் காரணமாகிப்போனது. மாணவர்களும் தங்கள் பகுதியில் கிடைக்கும் பல்வேறு செடிகளையும் மரக்கன்றுகளையும் கொண்டுவந்து வந்தனர்.

மாணவர்களைக்  குழுக்களாகப் பிரித்து ‘களை எடுத்தல்’, ‘நீர் பாய்ச்சுதல்’, ‘வேலியிட்டுப் பாதுகாத்தல்’ போன்ற பல்வேறு பணிகளை வழங்கினோம். மண்வளத்திற்குத் தகுந்த பூச்செடிகளையும், காய்கறிச் செடிகளையும் மற்றும்  மரக்கன்றுகளையும் நட்டு கண்போல் பாதுகாத்து வளர்த்து வந்தோம். மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்து பணியாற்றினர்.  தோட்டப்பணிகளில் மாணவர்கள் ஈடுபடும் பொழுது அவர்களுக்குப் பிடித்த உற்சாகமூட்டக்கூடிய சில பாடல்களைப் பாடிக்கொண்டே பணியாற்றினர். ஆசிரியர்களும் மாணவர்களோடு சேர்ந்து பாடிக்கொண்டே தோட்டப் பணிகளில் ஈடுபட்டனர். எங்கள் காய்கறித் தோட்டத்தில் கிடைத்த காய்கறிகளின் விவரம் பின்வருமாறு :

பச்சை மிளகாய் - 2 கிலோ, தக்காளி -1 கிலோ, கத்திரிக்காய் -1 ½ கிலோ, வெண்டைக்காய்-11, தர்பூசணி-6.

கற்றல் விளைவுகள் :

மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பல்வேறு தோட்டப் பரமாரிப்புப் பணிகள் மூலம் தோட்ட மேலாண்மை மட்டுமல்லாது தலைமைப் பொறுப்பு, குழு மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல், உழைப்பின் அருமை, சேர்ந்து பணியாற்றுதல், பொறுப்புணர்ச்சி போன்ற பல நற்பண்புகளை மாணவர்கள் கற்றுக்கொண்டனர். மேலும் தங்கள் வீடுகளிலும் சிறு தோட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். தங்கள் அனுபவங்களை வகுப்பறையில் பகிர்ந்துகொண்டனர். பெற்றோர்களும் இந்தத்  தோட்ட மேலாண்மை செயல்பாட்டுக்குப் பின்னர் மாணவர்கள் பொறுப்புணர்வோடு செயல்படுவதாகக் கூறினார்கள்.

கற்பித்தலில் இசையின் பங்கு:

கற்றலை இனிமையாக்க நான் கையிலெடுக்கும் மற்றொரு ஆயுதம் பாடல். மொழிப்பாடம் என்றாலே முழி பிதுங்கும் மாணவர்களுக்குக் கூட பாடல் என்றால் அதில் ஒரு ஊடல், ஒரு தேடல் இருப்பதை ஆசிரியப் பெருமக்களாகிய நாம் உணரமுடிகிறது. தொடக்கக்கல்வியில் இருந்தே இந்நாட்டத்தை நாம் காணமுடிகிறது.

இசையே எம் ஆசை; இராகமே இசை

மனமே அதற்கு இசை (ஏற்றுக்கொள்)

பயிற்சி பெறு பல் விசை ( ஒரு தடவை)

அகிலமும் ஏறெடுக்கும் உன் திசை

தமிழில் தாளமிட்டுப்பாடு

பலன்கொடுக்கும் உன் ஏடு ( புத்தகம்)

கவிதை நயத்தை நீ நாடு (அணுகு)

கவலை இனி இல்லை உன்னோடு

கற்றல் திறன் சிறக்க, கடினத்தை நீ மறக்க

பறவை போல் மறக்க, பாடிப் பழகு உரக்க.

சில நேரங்களில் பாடல்களை மனதில் பதியவைக்கப் பரிச்சயமான திரைப்படப் பாடல்களின் எளிமையான இராகத்தைக் (மட்டும்) கைக்கொண்டால் எளிதாகப் பாடச் செய்து மாணவர்கள் மனதில் பதியச் செய்யலாம். மேலும் தாள நயத்தோடு பாடுவதற்குக் கைத்தட்டல் மற்றும்  சிறு ஒலி எழுப்பும் உபகரணங்களைப்  பயன்படுத்தினால்  தங்களை அறியாமலேயே தாளத்துடன் கூடிய வரிகளை எளிதில் நினைவில் வைத்துக் கொள்வார்கள்.    

நேசித்தால் இயற்கையைப் பெறலாம்

பேசினால் நட்பைப்  பெறலாம்

பயின்றால் அறிவைப்  பெறலாம்

பாடினால் அகிலத்தையும் பெறலாம்.

சிறுவயதில் நாம் கொடுக்கும் பயிற்சி ‘பசுமரத்தாணி போல’ மாணவர் மனதில் ஆழமாகப் பதியும். இதற்கு என் ஆசிரியப் பணியில் என்னுடன் கல்வியில் பயணித்த மாணவர்களே சான்று. நான் மாணவனாக இருந்த காலத்தில் எனக்கு பாடல்கள் மூலம் கற்பித்த ஆசிரியர்கள் இன்றும் என் மனதில் நீங்கா இடம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

எனவே பாடல்கள் வாயிலாகக் கல்வி கற்போம். அப்போது கல்வி கற்பது சுமையாக இல்லாமல் சுகமாக மாறும். அனைத்துப் பள்ளிகளிலும்  எங்கள் பள்ளியில் உள்ளது போன்ற பூந்தோட்டத்தை உருவாக்கினால் பல நற்பண்புகளை எளிமையான முறையில் கற்பித்து, வாழ்வியலோடு இணைந்த கற்றல் அனுபவங்களை அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அளிக்க முடியும். மேலும் பாடல்கள் மூலம் கற்பிக்கும் முறையையும் முயற்சி செய்து பயன் பெறலாம்.

ஐ. அந்தோணி ஜோசப், அ.தொ.ப., பெரியார் நகர்.

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management