Towards a just, equitable, humane and sustainable society

பள்ளி நிகழ்வுகளில் வகுப்பறை பங்களிப்பு

கல்வி என்பது பாட புத்தகத்தைக் கடந்த முழுமையான வளர்ச்சியாகும். பள்ளிச் செயல்பாடுகள் அனைத்தும் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மையப்படுத்தியே இருத்தல் வேண்டும்.

பள்ளி விழாக்கள் மாணவர்களின் தனித்திறனை வளர்ப்பதிலும் அவர்களின் வாழ்வியல் திறன்களை வளர்ப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, உலக தண்ணீர் தினம், காடுகள் தினம், வாக்காளர் தினம்…

நான் நான்காம் வகுப்பிற்குப் பாடம் கற்பிக்கின்றேன். எனது வகுப்பில் 36 மாணவச்சிற்பிகள் இருக்கின்றனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே எனது குறிக்கோள் ஒன்று தான் - அனைத்து மாணவர்களையும் கற்றல் செயலில் ஈடுபடச்செய்வது மற்றும் பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாணவர்களைப் பங்குபெறச் செய்வது.

நோக்கம்:

விழாக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இவ்விழாக்கள் பற்றிய அறிவை அதன் முக்கியத்துவத்தை அறியச் செய்தல், மாணவர்களை விழாக்களில் பங்குபெற வாய்ப்பினை ஏற்படுத்துதல், பொறுப்பினைப் பகிர்ந்தளித்தல்.

நோக்கத்தை அடைய மேற்கொண்ட வழிமுறைகள்:

ஒவ்வொரு மாதமும் கொண்டாட வேண்டிய விழாக்களைப் பட்டியலிட்டு அதை நடைமுறைப்படுத்தல். அதாவது – அரசாங்கம் சொல்லும் விழாக்கள்  மற்றும் பள்ளியாகவே நடத்தும் விழாக்கள். ஜூன் - 21 உலக யோகா தினம் அன்று மாணவர்கள் உடல் நலத்தினை யோகா செய்வதன் மூலம் எவ்வாறு சுகாதாரமாகப் பாதுகாப்பது என்பது குறித்து யோகா செய்து காட்டினர். இதற்காக மாணவர்களுக்கு ஒரு வாரம் முன்பே பயிற்சியினை அளித்தேன். மாணவர்களும் சிறப்பாகப் பங்கு பெற்றனர். இதன் மூலம் மெதுவாகக் கற்கும் திறனுடைய மாணவர்களும் ஆர்வமுடன் பங்கு பெற்றனர். அது மட்டுமல்லாமல் உலக எழுத்தறிவு தினம், ஓசோன் தினம், உலகத் தாய்மொழி தினம், உலக இதய பாதுகாப்பு தினம் போன்ற சிறப்பு தினங்கள் வரும்போதெல்லாம் அது குறித்துத் தகவல்களைச் சேகரித்து மாணவர்களிடம் கலந்துரையாடுவேன். மேலும், இணையம் மூலம் அந்த நிகழ்ச்சி குறித்து விளக்கங்கள் மற்றும் படங்களைக் காட்டுவேன்.

விலங்குகள் தினம்: அக்டோபர் - 4 உலக விலங்கு தினம் கொண்டாடினோம். அன்று மாணவர்கள் ஒவ்வொரு விலங்கு பற்றியும் அதன் சிறப்புகள்  பற்றியும் நடித்துக்காட்டினர். The Ship of the Desert - என்ற ஒரு பாடம் உள்ளது அந்தப் பாடத்தை நாடக வடிவில் கடந்த ஆண்டு வகுப்பறைச் செயல்பாடாக நடித்திருந்தனர். அந்த நாடகத்தை மறக்காமல் வசனங்களை ஆங்கிலத்தில் பேசியும் நடித்தும் காட்டி அனைவரது பாராட்டையும் பெற்றனர். கடந்த ஆண்டு படித்த (அ) கற்ற பல விஷயங்களை மறந்திருந்தாலும் இந்த வசனங்கள் மட்டும் மறக்காமல் இருக்கக்காரணம் அதை நாடக வடிவில் நடித்ததே.

உணவுத் திருவிழா: அக்டோபர் 16 உலக உணவுத் திருவிழாவைக் கொண்டாடினோம். இதன் மூலம்  பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை மாணவர்களிடையே அறிமுகப்படுத்தினேன். மேலும், அந்த உணவில் மிகுந்துள்ள சத்துக்களை அறிந்துகொண்டனர். அதோடு மட்டுமல்லாது நமது பாரம்பரிய உணவு முறைகளான கேழ்வரகு அடை கீரைவடை, தினைமாவு போன்றவற்றை ருசித்தும் அதன் நன்மைகளைப் பற்றியும் அறிந்து கொண்டனர்.

தேசிய பெண்குழந்தைகள் தினம்: ஜனவரி 24, தேசிய பெண்குழந்தைகள் தினம் கொண்டாடினோம். பெண்ணின் பெருமையைப் பேச்சாகவும் கவிதையாகவும் நாடகமாகவும் நடித்துக்காட்டினர். இத்தகைய நிகழ்ச்சியில் கல்வியில் பின் தங்கிய மற்றும் மெதுவாகக் கற்கும் திறனுடையோரைப் பங்கு பெறச் செய்தேன்.

வாக்காளர் தினம்: ஜனவரி 25- ம் நாள் தேசிய வாக்காளர் தினம் பள்ளியில் கொண்டாடப்பட்டது. அதில் பள்ளியின் தலை சிறந்த மாணவர்களைப் போட்டியாளர்களாக நிறுத்தி அவர்களுக்குச் சின்னம் ஒதுக்கி அவர்களை வகுப்புவாரியாக வாக்கு சேகரிக்கச் செய்தோம். மாணவர்களும் மாதிரிவாக்குச் சாவடியில் தங்கள் வாக்கினைச் செலுத்தி மையினால் குறி இட்டு தாங்கள் விரும்பிய நபரைத் தேர்ந்தெடுத்தனர். இந்த நிகழ்வின் மூலம் ஓட்டுப்போடும் முறையினை அறிந்ததோடு வாக்களிப்பதின்  முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர்.

உலகக் காடுகள் தினம்: மார்ச் - 22 உலகக் காடுகள் தினம் கொண்டாடினோம். இதில் மாணவர்கள் கவிதை, ஸ்லோகன்கள் பேச்சு மற்றும் நாடகம் ஆகியவற்றில் கலந்து கொண்டனர். காடுகள் தினவிழாவில்  நான்காம் வகுப்பு ஆங்கிலப்பாடத்தில் இடம் பெற்றுள்ள The Giving Tree என்ற கதையை நாடகமாக நடித்துக்காட்டி அனைவரது பாராட்டினைப் பெற்றனர். இதன் மூலம் முறையான உச்சரிப்பு, வாக்கியத்தெளிவு நடிப்புத்திறன் வெளிப்படும்.

உலகத் தண்ணீர் தினம்: மார்ச் - 22 உலகத் தண்ணீர் தினம் கொண்டாடினோம். தண்ணீர் சிக்கனம் மற்றும் சேமிப்புமுறையிகளைக் கவிதைகளாகவும், நாடகமாகவும், ஸ்லோகனாகவும் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். இவையாவும் ஒரே நாளில் தயார் செய்த நிகழ்ச்சி என்பதைப் பெருமையோடு சொல்ல  ஆசைப்படுகிறேன்.

இந்த ஆண்டின் இறுதி நிகழ்ச்சியாக ஏப்ரல் – 7 உலக சுகாதார தினத்தைக் கொண்டாடினோம். இதில் உடல் தூய்மை, சுற்றுப்புறத்தூய்மை பற்றி மாணவர்கள் பேசினர். எளிய வடிவில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசி நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

பிற விழாக்கள்: இந்த விழாக்கள் மட்டுமல்லாது, சுதந்திர தினம், குடியரசுதினம், குழந்தைகள் தினம், திருக்குறள் போட்டி, மழலையர் விழா, விளையாட்டு விழா போன்ற விழாக்களிலும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பரிசினைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியே! அது மட்டுமல்லாது சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி, வாஞ்சிநாதன் வாழ்க்கை வரலாறு பற்றி கதையினைக் கூறுவது  பாரதியார், பாரதிதாசன் மற்றும் திருவள்ளுவர்  பற்றியும் மாணவர்களுக்குக் கூறி திருக்குறளின் மீது ஈடுபாடு உண்டாகுமாறு செய்தேன்.

பிரதிபலிப்பு:

இவ்வாறு விழாக்களில் தொடர்ந்து பங்கு பெற்றதால் மாணவர்களின் ஆளுமைத்திறன் வளர்ந்து, மேடைப்பேச்சுக்கு ஒரே நாளில் தயாரானார்கள். நாடகம் என்றால் இரண்டே நாட்களில் தயாரானார்கள். மாணவர்களிடம் இருந்த அச்ச உணர்வு மற்றும் கூச்ச சுபாவம் நீங்கியது. போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்குச் சிறப்புப்பரிசுகளை வழங்கி அவர்களைப் பாராட்டினேன். அந்த நிகழ்வு மற்ற மாணவர்களையும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஊக்கப்டுத்தியது. மெதுவாகக் கற்கும் திறனுடைய மாணவர்களுக்கு அவர்கள் விரும்பி உண்ணும் உணவை அளித்து, உற்சாகப்படுத்தி  அவர்களையும் நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்தேன். தற்போது எங்கள் பள்ளியில் ஒரு விழா என்றால் எங்கள் வகுப்பில் உள்ள 36 மாணவர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வமுடன்  கலந்து கொள்ள முன்வருவார்கள் என்பதை நான்  பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

இத்தகைய தொடர் விழாக்களால் பாடத்திட்டத்தினை முடிப்பதில் கொஞ்சம் சிரமம் உள்ளது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதோடு இல்லாமல் இத்தகைய விழாக்களுக்கு மாணவர்களைத் தயார் செய்ய முன்கூட்டியே திட்டமிடுதலும் அவசியமாகிறது. இதனால் ஆசிரியருக்குச் சுமையானாலும் மாணவர்களின் திறன் அனைவரது முன்னிலையில்  வெளிப்படுகிறது. இதனால் சுமப்பதும் பெருமையே……

ஹேமமாலினி – எக்கோல் ஆங்கிலேஸ்

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management