Towards a just, equitable, humane and sustainable society

100 என்ற இலக்கை நோக்கிய எங்கள் பயணம்

100 என்ற இலக்கை நோக்கிய எங்கள் பயணம்

புதுச்சேரி வட்டம் - 2 நைனார் மண்டபம் புதுநகர்

பள்ளி சூழலை மாற்றுவதிலிருந்து மாணவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையான செயல்பாடுகளை மேற்கொள்ளல் - ஒரு பார்வை

பள்ளிக்கூடம் என்ற சொல்லே மாணவர் தொகுப்பைத்தான் நம் கண்முன் கொண்டு வருகிறது. சோழன் வீதியில் கம்பீரமாய் காட்சி அளிக்கிறது எங்களின் நைனார் மண்டபம் அரசு தொடக்கப்பள்ளி. அதில் சில வருடங்களாக 83 – க்குள்ளாகவே இருந்த மாணவர் எண்ணிகையை உயர்த்தி 100 என்ற இலக்கை அடைய தீர்மானித்து அதற்கான பயணத்தைத் தொடர்ந்தோம். பயணம் என்பது மாணவர்களின் மீது அக்கறை காட்டுதல், கல்விச்செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் மாற்றியமைத்தல்.  அதோடு கல்விக்கான சூழலை உருவாக்குதல். பெற்றோர்களை இணைத்த நிகழ்வுகள். இச்செயல்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்து செய்யத் துவங்கினோம்.

சென்ற கல்வி ஆண்டு முதலே எம் பயணம் துளிர்விடத் தொடங்கியது. முதலில் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அடையாள அட்டை, டைரி ஏற்பாடு செய்து அரசு பள்ளியைத் தரம் உயர்த்தினோம்.

பெற்றோர்களை இணைத்த நிகழ்வுகள்:

குழல்இனிது யாழ்இனிது எனபர்தம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்

என்ற குறள் வழி நின்று பெற்றோர்கள் தம் குழந்தைகளின் திறமைகள், செயல்பாடுகள், ஆற்றல்கள், பங்களிப்புகளை நேரில் கண்டுணர ஒவ்வொரு மாதமும் பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டங்களையும், பள்ளி மேலாண்மைக்குழு கூட்டங்களையும் தவறாமல் நடத்தி அரசு பள்ளியின் மீது அதீத நம்பிக்கையை வளரச்செய்து புதிய மாணவர் சேர்க்கைக்குப் பெற்றோர்களின் ஆதரவையும், ஈடுபாட்டையும் புதிய பலமாகப் பெற்றோம்.

கல்விச் செயல்பாடுகள்:

காலைப் பேரவையில் மாணவர்களை உற்சாகப்படுத்தி, நற்பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்க அடித்தளமிட்டோம். நடை, உடை, பாவனைகளில் ஏற்பட்ட இனிய மாற்றங்கள் ஏற்பட்டது.  பெற்றோரிடமும், பொதுமக்களிடமும் ' அரசுப் பள்ளி நம் பள்ளி ' என்ற மதிப்பையும் நம்பிக்கையைும் தொடர்ந்து  ஏற்படுத்தினோம்.  மதிய உணவு – காலையில் பால், இவற்றை மாணவர்க்குச் சிரத்தையுடன் அளிப்பதோடு பெற்றோர்கள் அதை மேற்பார்வையிடுவது மற்றும் சேர்ந்து உணவு உண்ணுவது  என பெற்றோரின் பங்களிப்பு நன்மதிப்பை  ஈட்டித் தந்தது.

மதிய உணவு இடைவேளையின் போது  பொது அறிவு, சொற்களஞ்சியம் பெருக்குவோம், செய்தித்தாள் வாசித்தல், கையெழுத்துப்பயிற்சி போன்ற செயல்பாடுகள் மாணவர்களுக்குப் பாதுகாப்பை அளித்ததோடு, அறிவுப்பெருக்கத்திற்கும், மகிழ்ச்சியான கற்றல் சூழலுக்கும் வழி வகுத்துப் பள்ளியின் மீது பற்றுதலையும், ஆர்வத்தையும் வளர்த்து வருகின்றன.

தொடர்ந்து வகுப்பறைக்குச் சென்று மாணவர்களைச் சந்திப்பது அவர்கள் கற்கும் பாடங்கள் தொடர்பாகச் சிறு உரையாடலை மேற்கொள்வதும் அவர்களது நோட்டுக்களை வாங்கிப் பார்ப்பது பாராட்டுவது,  வகுப்பறையில் நானும் உட்கார்ந்து பாடம் கவனிப்பது எனத் தவறாமல் செய்வேன்.

பெற்றோர்களை வகுப்பறைக்கு அழைத்துச் சென்று பாடச் செயல்பாடுகளைக் காட்டுதல், அவர்கள் கருத்துக்களைக் கேட்டல், படிப்பு தொடர்பான கேள்விகளைக் கேட்கச் செய்தல், பாடங்களை எப்படி நடத்துவோம், என்னென்ன செய்வோம் என அவர்களுக்கு விளக்குதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டோம்.

இவற்றால் தனியார் பள்ளிக்குத் தாவ நினைத்த சில பெற்றோரைக் கட்டிப் போட்டது குறிப்பிடத்தக்கது. அதோடு அவர்கள் பள்ளிச் செயல்பாடுகளுக்கு உதவத்துவங்கினர்.

பள்ளி நிகழ்வுகள்:

தொடர் பள்ளி நிகழ்வுகள் மூலம் பெற்றோர்கள் ஆதரவு மட்டுமல்லாது நைனார் மண்டபம் மக்கள் நல இயக்கத்தின் ஒத்துழைப்பும் , பங்களிப்பும் ஊர்ப்பிரமுகர்களின் பாராட்டுதலையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம். அரசு பள்ளியின் மேன்மையும், நடைமுறைகளும் ஊர்மக்களுக்குச் சென்று சேர ஒரு முத்தாய்ப்பாய் அமைத்தது. நாளுக்கு நாள் நிகழ்வுகளில் பங்கேற்கும் பெற்றோர் மற்றும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகமானது.  பள்ளியில் ‘சமம் பெண்கள்’ அமைப்பினரின் நிகழ்வு போன்ற பள்ளிச்செயல்பாடுகளில் இணைத்தோம்.

பள்ளி ஆய்வாளர் அடிக்கடி பார்வையிட்டு எங்களை பாராட்டினார்கள்் உதவி இயக்குநர் வந்து பாராட்டியதோடு  சிறந்த பள்ளிக்கான வீடியோவிற்கு எங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்டர் ஆ. ப. ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு,பள்ளியில் 'கலாம் தோட்டம்' உருவாக்கப்பட்டு அனைவருக்கும் மரக்கன்றுகள் விநியோகிப்பது, அறிவியல் கண்காட்சி ஏற்பாடு செய்து பொதுமக்களையும் பார்வையிடச் செய்வது, பரிசளிப்பு விழாக்கள் நடத்துவது போன்ற செயல்பாடுகள் புதிய மாணவர் சேர்க்கைக்கு வலுவூட்டின.

உலக நீர் நாள் மார்ச் 22 - ம் தேதி நைனார் மண்டபம் மக்கள் நல இயக்கமும், அரசு தொடக்கப் பள்ளியும் இணைந்து ‘விழிப்புணர்வு பேரணி' ஊர்வலம் நைனார் மண்டபம் வீதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி 100 என்ற இலக்கை நோக்கிய எம் பயணத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைத்தது எனலாம். அதைத் தொடர்ந்து பள்ளியில் குழந்தைகள் வாசிப்பகம் (ரீடிங்கார்னர்) சட்டமன்ற உறுப்பினர், ஊர்ப்பெரியோர் முன்னிலையில் திறப்பு விழா செய்து நடைமுறைப்படுத்தப்பட்டது தனியார் பள்ளியில் பயின்ற  மாணவரை எம் பள்ளியில் சேர்க்க வழி கோலியது.

தேசிய பசுமைப்படையால் மாணவர் சேர்க்கைக்கான  விழிப்புணர்வு பேரணி நடத்தியும், அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் பெற்றோரை நேரில் சந்தித்துப் பள்ளியின் பல்வேறு விழாக்கள், தூய்மை இந்தியா செயல்பாடுகள், பரிசளிப்பு விழாக்கள் சமூகத்தில் எம் அரசு பள்ளிக்கு ஊர் அங்கீகாரத்தை ஏற்படுத்தி இந்தக்கல்வி ஆண்டில் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை இரட்டிப்பாக்கி, இத்தருணத்தில் 93 என மாணவர் எண்ணிக்கையை நெருங்கி உள்ளோம் என்பதனை பெருமகிழ்வோடும், பெருமிதத்தோடும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறோம்.

பள்ளி நிகழ்வின் பட்டியல்:

12-6-17 பிரவேச உற்சவம். புதிய மாணவர்களை வரவேற்றல்

21-6-17 சர்வதேச யோகா தினம். ஆசிரியர் விளக்கம் மாணவர்கள் செயல்பாடு

15-7-17 மாணவர் தினம் – காமராஜர் வேடமிட்டு பேச்சுப்போட்டி

27-7-17 அப்துல்கலாம் நினைவு நாள்

15-8-17 சுதந்திர தினம்

1-9-17  பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சி

5-9-17 ஆசிரியர் தின விழா

1-9-17 முதல் 1-9-17 தூய்மை பிறக்கலாம் .தொடர்ச் செயல்பாடு.

15-9-17 முதல் 2-10-17 வரை தூய்மை இந்தியா உறுதிமொழி

20-10–17 மக்கள் நல இயக்கத்தின்  உதவியுடன் நிலவேம்பு கஷாயம் குடித்தல்.

21-11-17 டெங்கு விழிப்புணர்வு முகாம்.

1-11-17 புதுச்சேரி சுதந்திர தினம்

14-11-17 குழந்தைகள் தினம்

12-1-18 பொங்கல் விழா

8-3-18  பெண்கள் தினம்

28-2-18 தேசிய அறிவியல் விழா

22-3-18 உலக மகளிர் தினம்

29-3-18 வாசிப்பு மூலை மற்றும் கணித ஆய்வகம்

7-4-18 கல்வி சுற்றுலா மரக்காணம், உப்பளம், தக்‌ஷன் சித்ரா, முதலைப்பண்ணை, மகாபலிபுரம்

10-4-18 மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு முகாம்

11-4-18 ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பிரிவு உபச்சார விழா

12-4-18 விளையாட்டு விழா.

100 என்ற இலக்கை நோக்கிய எம் பயணத்திற்குத் தற்போதைய பள்ளிச்செயல்பாடுகள், ஆசிரியர்களின் ஒத்துழைப்பு ,வட்டம் -2 பள்ளித்துணை ஆய்வாளரின் ஊக்கமும் ,வழிகாட்டலும், மாணவச்செல்வங்களின் கற்றல் வெளிப்பாடுகளும் உரம் சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் இனிதே பயணிக்கிறோம்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த நம்மால் மட்டும் தான் முடியும். ஆசிரியர் சமுதாயம் அனைவரும் ஒன்று கூடி தொடக்கக்கல்வி என்ற தேரை வடம்பிடித்து இழுத்து, பொலிவுடன் கல்வித்துறையிலே பவனி வரச் செய்வோம். .

படைப்பு: திருமதி.சி.அனந்தநாயகி ,தலைமைஆசிரியை ,அ.தொ .பள்ளி ,நைனார்மண்டபம்,வட்டம் 2 ,புதுச்சேரி.

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management