Towards a just, equitable, humane and sustainable society

பள்ளி மற்றும் சமுகம்

சிறப்புக்கூற்று

  1. கல்வியானது சமூகப்பங்களிப்பின்றி முழுமையாகாது.
  2. நமது பள்ளி செயல்பாடுகளில் பொது மக்களை ஈடுபடுத்தும் போது தான் அவர்களுக்குப் பொதுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
  3. இவ்வாண்டு, கடந்த காலத்தில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிகழ்ந்து வந்த வாக்குவாதங்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மாற்றம் நடந்துள்ளது.   
  4. பள்ளிச்செயல்பாட்டில் மாணவர்களின் பெற்றோர்களைப் பேசச் செய்வது, அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது அவற்றை முடிந்தவரை நடைமுறைப்படுத்துவது பள்ளியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

கல்வி என்பது பள்ளியோடு முடிந்து விடுவது அன்று. சமுதாயத்தோடு தொடர்புடையது. கல்வி செயல்பாடுகளில் பெற்றோர்; மற்றும் மக்களின் பங்களிப்பு இணையும் போது தான் முழுமையடைகிறது. அதிலும் அரசுப்பள்ளிக்கு அது அத்தியாவசியமாகிறது. அரசுப்பள்ளி என்பது மக்களுடையது. மக்களின் வாழ்வை மையமாகக் கொண்டு செயல்படக்கூடியது. தற்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு ஆங்கிலக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளின் மீதான மோகம் மிக அதிகமாக உள்ளது. எனவே, பள்ளி செயல்பாடுகளில் பொதுமக்களை ஈடுபடுத்தும் பொருட்டு அவர்களுக்குப் பொதுப்பள்ளிகள் மீது நம்பிக்கை ஏற்படுத்த முடியும். பள்ளிகளின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது என்பது கல்விச்செயல்பாடுகள் மூலம் சமூகத்தை இணைப்பது மற்றும் ,பெற்றோர், பொது மக்களிடம் தொடர் உறையாடல் நிகழ்த்துவது என்பதைப் புரிந்து இவ்வாண்டு நாங்கள் செய்த சில விஷயங்களை கீழ்கண்டவாறு இணைத்துள்ளோம்.

எமது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பான்மையானோர் கூலித்தொழிலாளிகள். கல்வி கல்லாதவர்கள். எங்கள் மாணவர்கள் அதிகமாக, நடனம், கதை, பாடல் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வமுடையவர்கள். எனவே கற்றல் செயல்பாடுகளோடு இவற்றிற்க்கும் அதிகமான முன்னுரிமை கொடுக்கின்றோம். பாடங்களோடு கதைகள் மற்றும் பாடல்களை இணைத்தல், செயல்பாடுகள் மற்றும் விளையாட்டுகளை இணைத்தல் போன்றவற்றைக் கவனமாகக் கையாண்டோம். இதனால் கற்றலில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் இச்செயல்பாடுகளில் சிறந்து விளங்குகின்றனர். அதோடு எங்கள் வகுப்பறைச் செயல்பாடுகள் வீட்டிலும் தொடர்ந்தது.

முதல் வகுப்புப் பாடங்களுடன் தொடர்புடைய கதைகளை வீட்டில் கேட்டுக்கொண்டு வரச்செய்தல், வீட்டில் நடக்கும் விஷயங்களை உற்றுப்பார்த்துப் பேசச்செய்தல், எதையாவது கேட்டுக் கொண்டு வரச்செய்தல், மூலம் நாம் நம் குழந்தைகளுடன் மேலும் ஆழமாக ஈடுபட முடிகிறது. ஒரு பாடம் முடிந்ததும் அல்லது நடத்திக்கொண்டே இருக்கும் பொழுது, ஊரில் கேட்டுக்கொண்டு வரும்படி சில கேள்விகள் கொடுப்போம். “இளனி விக்கிரவர்கள் யாராவது இருந்தால், யார் என்று தெரிந்து கொண்டுவரச் சொல்லுதல் ஒரு இளனி எவ்வளவு என்று அப்பா, அம்மாவிடம் சின்ன கேள்விகள் கேட்டனுப்புதல், கேட்டு எழுதிக் கொண்டுவர சொல்லுதல்.” அதைக் கேட்டுக்கொண்டு வரும் பொழுது அவர்களைப் பாராட்டுவது, பெற்றோரிடம் பதிலளிக்கும் படியும் பள்ளிச் செயல்பாடுகள் பற்றிக் கேட்கும் படியும் எடுத்துக் கூறுவோம்.

பள்ளி நிகழ்வுகளில் சமூகம்:

மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளை வெளிப்படுத்த பெற்றோர் கூட்டங்கள், அரசு விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளைப் பள்ளியில் நடத்துகின்றோம். என்.சி.சி மூலம் சுற்றுச்சூழலைப் புரியவைக்க தொடர் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தோம். அதன் முதல் கட்டமாக ‘மனித நேயத்தின் இறகுகள்’ என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் விதைப்பந்து செய்தோம். இதற்காக விதைப்பந்து தயாரிப்பது பற்றி மாணவர்களை ஆயத்தப்படுத்தும் நிகழ்வு நடந்தது. அதன் மூலம் மாணவர்கள் பெற்றோரிடம் அதை எடுத்துச்சொல்லி விதை எடுத்துக்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக மாணவர்களுடன் விதை சேகரிக்கும் நிகழ்வு ஒன்றும் நடந்தது. ஒரு நாள் நிகழ்வாக மாணவர்கள் 300 – க்கும் மேற்பட்ட விதைப்பந்தைச் செய்தனர். சேகரித்து வைத்திருந்த விதைப்பந்தை ஏரிக்கரையில் பொது வெளிகளில் போடுவதற்காக ஊர் தலைவரைச் சந்தித்துப் பேசினோம். பின் சூழ்நிலையை அறிந்து கொள்ள ஒரு பயணம் மேற்கொண்டோம். நாங்கள் ஏற்படுத்திய தொடர் நிகழ்வு கற்றல் செயல்பாடுகளுக்கு உட்பட்டதாக இருந்தாலும் ஊர் மக்களை உள்ளடக்கியது.  இதை அவர்கள் விரும்புவது எங்களுக்குப் பிடிபட்டது. இதனால் பள்ளிச் செயல்பாடுகளில் ஈடுபட விரும்பிப் பெற்றோர்களை எங்களால் வகைப்படுத்த முடிந்தது.

பள்ளிக்கு மாணவர்கள் விடுப்பு எடுக்கும் பொழுது எங்களுக்குத் தெரியப்படுத்தச் சொன்னோம். காலை 8 மணிக்கெல்லாம் சில பெற்றோர்கள் “என் மகள் இன்று பள்ளி வரவில்லை” என்பதைத் தொடர்ந்து நாளை வந்து விடுவாள் என்பர். இப்படிச் சின்ன சின்ன விஷயங்களில் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையைப் பல மடங்காக அவர்கள் திருப்பித்தந்தனர்.

உதவிக் கரங்களின் உதவி, குழந்தைகளின் களப்பயணம் மற்றும் விழாக்களுக்கு உதவியாக இருந்தது. கற்றல் கருவிகளுக்கும் ஆசிரியர் பயிற்சிக்கும் அசிம் ப்ரேம்ஜி ஃபவுண்டேஷனின் உதவி முக்கியமானது.

ரோட்டரி சங்கம் மூலம் இரத்தப் பரிசோதனை நடத்த முடிந்தது. வெங்கட் என்ற நிலச்சுவந்தார் மூலம் 10,000 ரூபாய் அளவில் தேவைப்படும் கற்றல் கருவிகளை வாங்கிக் கொடுத்தார்.

இவ்வாண்டு வெவ்வேறு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளுக்கு, தொண்டு நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் உதவியைத் தொகை பயன்படுத்த முடிந்தது. கடலூரில் இருந்து ஆங்கிலக்கதை சொல்லுதல் கற்பிக்க பானுப்பிரியா தொடர்ச்சியாகச் செய்ய முடியவில்லை.

பெற்றோர்களுக்காக நாங்கள் துவங்கியுள்ள வாட்ஸ்அப் நிகழ்வு மூலம் சில முக்கிய உரையாடல்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம். இவ்வாண்டு கடந்த காலத்தில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிகழ்ந்து வந்த வாக்குவாதங்கள் இப்பொழுது இல்லை என்று சொல்லும் அளவுக்கு மாற்றம் நடந்துள்ளது.

பள்ளி ஆண்டு விழா:

இத்தகைய நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானது பள்ளி ஆண்டு விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற ஆண்டு விழாக்களில் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம் அவற்றுள் முக்கியமானது சரியான நேரத்திற்கு நிகழ்ச்சி துவங்காதது, திட்டமிட்டபடி பரிசுகளை வழங்க முடியாமை, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் மனநிலைக்கேற்ப நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்காதது போன்றவையாகும்.

எனவே, இந்த ஆண்டு அனைத்துச் செயல்பாடுகளும் முன்னரே மிகத்துல்லியமாகத் திட்டமிடப்பட்டன. அதோடு அல்லாமல் பெரும்பாலான செயல்பாடுகளில் பெற்றோர்களையும் ஊர் மக்களையும் இணைத்துச் செயலாற்றினோம். அவர்களைக் கூப்பிட்டுத் திட்டமிடல் கூட்டம் நடத்தினோம். அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கவனித்துக் கேட்டோம். சென்ற ஆண்டு நாங்கள் எதையெல்லாம் சரியாகச் செய்யவில்லை என்று பட்டியலிட்டனர். ஓராண்டு கழித்து அவர்கள் நினைவு கூர்ந்தது ஆச்சரியமாக இருந்தது. அதோடு இதைப்பற்றி அவர்களாக எப்பொழுதும் எதுவும் சொன்னதுமில்லை. அவர்கள் குறிப்பிட்டதில் செய்ய முடிந்ததையெல்லாம் நிறைவேற்றினோம். பெற்றோர்களிடம் தங்கள் குழந்தை ஆண்டு விழாவில் ஈடுபடும் செயல்பாடு பற்றி எடுத்துக் கூறினோம். முன்னாள் மாணவர் ஒருவர் நடனக் கலைஞரான பிரகாஷ் மற்றும் பரியான் அதே ஊரில் இருப்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. அவரை அழைத்து வந்து அறிமுகப் படுத்தினர். அவரது உதவியுடன் மாணவர்களுக்கு நடனப்பயிற்சி அளித்தோம். நிகழ்ச்சியைப் பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் பொறுப்பை அவர்களே எடுத்துச்செய்தனர் இதனால் இந்த வருட ஆண்டு விழா எந்த தங்கு தடையுமின்றி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மிகக்குறுகிய காலத்தில் கிட்ட தட்ட ஒருவார கால ஏற்பாடுகளில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைந்தன. மாணவர்களின் நடனத்தைக் கண்டு அனைவரும் பிரமித்தனர். எங்கள் சிறப்பு விருந்தினர். மற்றும் உயரதிகாரிகள் வெகுவாகப் பாராட்டினர்.

-    பள்ளிச் செயல்பாடுகளில் பெற்றோர்களைப் பங்களிக்கும் படியாகச் செய்வது. பங்களிப்பு என்பது அவர்களால் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். அதோடு அவர்கள் மனமுவந்து செய்வது போல் தயார் செய்ய வேண்டும். ஒத்துழைக்க முடியாத குழந்தைகளின் பெற்றோர்களைக் குறைகூறுவதைக் காட்டிலும் அக்குழந்தைகள் மீது அக்கறைப்படும் ஆயா, தாத்தா, அத்தை எனக்கடக்கும் பொழுது சாத்தியப்படுகிறது.

-    பெற்றோர்களை மட்டுமல்லாமல் ஊர்ப்பிரமுகர்களை, குறிப்பாக உள்ளூர் கலைஞர்கள், உள்ளூர் வளங்களைக் கல்வி செயல்பாடுகளில் ஈடுபடுத்துவது அவசியம் என உணர்ந்தோம்.

-    பள்ளிச் செயல்பாட்டில் மாணவர்களின் பெற்றோர்களைப் பேசச்செய்வது. அவர்களது கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது அவற்றை முடிந்தவரை நடைமுறைப்படுத்துவது பள்ளியில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

 

து. சங்கரதேவி , ம. நித்ய, அ. தொ. ப., அபிஷேகப்பாக்கம்

 

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management