Towards a just, equitable, humane and sustainable society

பள்ளிச்செயல்பாடுகளில் தலைமையாசிரியரின் பங்கு

  1. நாடோடிச் சமூகக் குழந்தைகள் பள்ளிக்கு  வருவதே சவால் என்கிற நிலையில் தலைமை ஆசிரியரின் பங்கு மிகவும் இன்றியமையாதது.
  2. பெற்றோர் ஆசிரியர் உறவு மேம்பட, பள்ளியின் தேவைகளை நிவர்த்தி செய்யத் தலைமை ஆசிரியர் முனைப்பெடுத்தல் வேண்டும்
  3. பள்ளிச்செயல்பாடுகளில், பெற்றோரை ஈடுபடுத்தும்பொழுது, பள்ளி மேம்படுகிறது

தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆசிரியர் பணியை மகிழ்ச்சியாகவும், வித்தியாசமாகவும் என்னால் இயன்ற அளவில் செய்துகொண்டு வருகிறேன். எங்கள் பள்ளி பெரும் வயல்வெளிக்கு மத்தியில் உள்ளது. பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் எஸ்.சி மற்றும் எஸ்.டி குழந்தைகளும், ஒரு சில மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் சார்ந்த குழந்தைகளும் படித்து வருகின்றனர். குழந்தைகளின் வறுமை என்பது பல வடிவங்களில் வெளிப்படும். குறிப்பாக, இருளர் சமூகக் குழந்தைகள் சத்தில்லாமலும், சாப்பிடாமலும், பல நேரங்களில் உடல் முடியாத நிலையிலும் பள்ளிக்கு வருவர்.  பள்ளியில், பிறப்புச்சான்றிதழ், ஆதார் அட்டை இல்லாமலே பள்ளிக்கு வந்தாலும் பள்ளியில் சில குழந்தைகளைச் சேர்த்து வைத்துள்ளோம். பள்ளி சார்ந்த நிகழ்வுகளுக்கோ, குழந்தைகளைப் பற்றிப் பேசவோ பெற்றோரை வரவழைப்பது என்பது சாதாரணமல்ல. அதோடு, ஒரு குறிப்பிட்ட வேலைக்காகக் குடும்பத்துடன் பயணிக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர் இந்தக் குழந்தைகள். அச்சமயங்களில் இக்குழந்தைகள் பள்ளிக்கே வர மாட்டார்கள். உதாரணமாக, கரும்பு வெட்டும் வேலைக்குச் சென்றால் ஏறக்குறைய 4 மாதங்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள். மற்ற சமயங்களிலும் இரண்டு நாள், மூன்று நாள் என்று எங்காவது அழைத்துச் செல்லப்படுவர் . கடந்த ஆண்டு எங்கள் செயல்பாடுகளின் மூலம் 46 - ஆக இருந்த மாணவ எண்ணிக்கையை 72 – ஆக உயர்த்தினோம். 2017-18 கல்வியாண்டில் 102 – ஆக உயர்த்தியுள்ளோம். இதற்குக் காரணமான எங்கள் பள்ளியின் ஆசிரியச் செயல்பாடு மற்றும் மற்ற செயல்பாடுகளைக் குறிப்பிட்டாக வேண்டும்.

மற்ற எல்லா தலைமை ஆசிரியர்களும் செய்வதை தான் நானும் செய்கிறேன். இச்செயல்பாடு என்பது எனக்கு விருப்பமானதாகவும் நான் விரும்பி செய்வதாலும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

  1. குழந்தைகளுக்கான வாசிப்புப்புத்தகங்களை ஏற்பாடு செய்தல். இடைவெளி நேரங்களில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களைப் பற்றி ஆலோசித்தல், தேவைப்படும் கற்றல் கருவிகளைச் செய்யவும், வாங்கவும் ஊக்குவித்து உதவுதல், ஆசிரியர் வள மையத்திலிருந்து வாராந்திரப் பாடத்திட்டத்தைப் பெற்றுத் தருதல் போன்ற பொறுப்புகளை நான்  எடுத்துக் கொள்வது வழக்கம்.
  2. அலுவலக வேலை, அதைச்சார்ந்த எழுத்து வேலைகளை நானே மேற்கொள்வதால், ஆசிரியர்களால் கற்பித்தலில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்தி கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை. ஒரு ஆசிரியர் விடுப்பு எடுக்கும் பொழுது அந்த நேரத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு நான் முக்கியமாக சொல்லிக் கொடுக்க எண்ணும் விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பேன்.
  3. ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சியளிக்க தனிநேரம் ஒதுக்கி அதைச் செய்து வருகிறோம்.
  4. மாணவர்களை உள்ளூர் வயல், அஞ்சலகம் போன்ற இடங்களுக்குக் கல்விச்செயல்பாடுகளுக்காக அழைத்துச் சென்றோம்.
  5. காட்சி வழிக்கற்றலுக்கான ஏற்பாடுகளைப் பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம். கற்றலுக்கான பள்ளிச்சூழல்
  6. ‘ரோட்டரி க்ளப்’ சார்பாக மாதிரிக் கழிவரை எங்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. அதைக் குழந்தைகள் முறையாகவும் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றனர்.
  7. நல்ல குடிநீருக்கான ஆர்.ஒ வசதி பள்ளியில் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது.
  8. 20 க்கு மேற்பட்ட மாணவர்கள் விளையாட மைதானம், நல்ல சுற்றுச்சுவர் எனப் பள்ளிக்கான அனைத்து வசதிகளுடன் பள்ளி இருப்பது குறிப்பிடத்தக்கது.
  9. என்.சி.சி மூலம் மூலிகைச் செடிகளை நட்டு பரமாரித்து வருகின்றனர்.

பெற்றோர் ஆசிரியர் உறவு :

இதற்கான முயற்சிகள் பலவற்றை நாங்கள் எடுத்தபொழுதும் வெற்றி பெற முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், நாங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கு மாற்று வழியில் தீர்வு காண முயன்று கொண்டே இருக்கிறோம். ஜுரத்தோடு குழந்தைகள் பள்ளிக்கு வரும் பொழுது, திருப்பி அனுப்பினால் பெற்றோர் வீட்டில் இருப்பதில்லை அதனால், மருந்து கொடுத்துப் பள்ளியில் ஓய்வெடுக்க வைக்கிறோம். காலை சாப்பாடு சாப்பிடாமல் வரும் குழந்தைகளைச் சாப்பிட வைக்க முயற்சிக்கிறோம். குழந்தைகள் கரும்பு வெட்ட இரண்டு மாதங்கள் சென்று திரும்பியவுடன் பயமில்லாமல் பள்ளிக்கு வரும்படி சொல்லி அனுப்புவதால், வந்த பிறகு வீட்டிலேயே இருந்து விடாமல் பள்ளிக்கு வருகின்றனர். உதாரணமாக விஷ்வா என்கிற மாணவர் 3 மாதங்களாகியும் பள்ளிக்கு வராத சூழ்நிலை இருந்தது நாங்கள் பலமுறை முயற்சித்தும் அவரது பெற்றோரைச் சந்தித்து விசாரித்த போது அவர், “இத்துணை மாதங்கள் கடந்து விட்டது. இனி எப்படி?” என்று வினவியதற்கு நாங்கள் அம்மாணவரை ஊக்குவித்து மீண்டும் பள்ளிக்கு வரும்படி செய்தோம். குழந்தைகளும் பெற்றோர்களும் சத்தில்லாமல் இருப்பது பற்றி எதாவது செய்ய முடியுமா? என யோசித்து வருகின்றோம். குழந்தைகள் பாதுகாப்புப் பற்றி அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றோம்.

இதுவரையில்லாமல், இந்த ஆண்டு நாங்கள் நடத்திய குழந்தைகளுக்கான புத்தக வாசிப்பகம் திறப்பு விழா, பெற்றோர்களுக்கான யோகா, ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பெற்றோர்களுக்கும் விளையாட்டுப்போட்டி நடத்தி பரிசளித்தோம். நிகழ்வுகளில் பெற்றோர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததைப் பெருமையுடன் பதிவு செய்து கொள்கிறோம்.

தொண்டு நிறுவனங்களின் உதவி :

விளையாட்டுப் பொருட்கள் தின்பண்டங்கள், புத்தகப்பை போன்றவற்றை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுத்தோம்.

பொரஜக்டர், கம்ப்யூட்டர் உதவியுடன் கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த உள்ளோம். இன்டர்நெட் வசதி கல்வித்துறை மூலமாக விரைவில் கிடைக்கும்.

இணையதள வசதி பெற்றால் நினைத்த விஷயங்களை, கற்றல் தொடர்பான பல கருத்துகளை மாணவர்களுக்குக் கொண்டு செல்ல ஏதுவாக இருக்கும். வாரத்திற்கு ஒரு நாள் யூனிபார்ம் மாற்றிப்போட தொண்டு நிறுவனங்கள் மூலமாக ஏற்பாடு செய்ய முயற்சி எடுக்க உள்ளோம். வகுப்பறையில் சுவர்களில் வண்ணப்படங்கள் வரையவும் முயற்சி எடுக்க உள்ளோம்.

ஒவ்வொரு வகுப்பறையிலும் திட்டமிட்ட கல்விச்செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த ஆசிரியர்களுடன் தொடர் கலந்துரையாடல் மற்றும் பெற்றோர்களுடன் தொடர் சந்திப்புகள் நடத்தினோம்.

 

மகேஷ்வரி, அ தொ ப, இருளன்சந்தை

 
Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management