Towards a just, equitable, humane and sustainable society

பசுமைப் பள்ளி

பள்ளிக்  குழந்தைகளே வருங்காலச் சமூகமாக இருக்கும் பட்சத்தில் வகுப்பறை மாற்றமே நமது சமுதாயத்தின் மாற்றம்.

மாணவர்கள் மனதில் நமது இயற்கை அன்னையைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தி, மரம் நடுவதும் அவற்றைப் பாதுகாப்பதும் இன்றைய காலத்தில் எவ்வளவு முக்கியமான செயல் என்பதையும் இம்முயற்சியில் பள்ளியின் பங்கு என்ன என்பதையும்  இக்கட்டுரையில் காணலாம்.

பசுமை விரும்பி

சிறு வயதிலிருந்தே எனது சுற்றுப்புறத்தைப் பசுமையாக வைத்து கொள்வதில் எனக்கு அலாதி பிரியம். அந்த பச்சைப்பசேல் என்ற நிறம் கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆனந்தம் தரும்.  எனது சிறு வயது நிகழ்வுகள் பல நினைவுக்கு வருகின்றன. நான் திருச்சியில் தங்கியிருந்த பொழுது வீட்டின் பின்புறம் பரந்த இடம் இருந்தது .அந்த இடத்தில் நானும் எனது சகோதரனும் விளையாட்டாகச் செடி வளர்க்க ஆரம்பித்தோம். மிளகாய்ச்  செடி, கத்தரிக்காய், பூசணிக்காய், அவரைக்காய், போன்ற சிறு வகை செடி கொடிகளை வளர்த்து பராமரிப்போம். அதுமட்டுமில்லாமல் அச்செடிகளில் விளையும் பொருட்களை வீட்டிற்கும் பயன்படுத்துவோம். இப்படி வளர்ந்ததுதான் எனது ஆர்வம். எப்படியாவது மாணவர்கள் மனதில் நமது இயற்கை அன்னையைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்திட வேண்டும் என்பதே எனது மிகப்பெரிய ஆசை.

புது முயற்சிகள்:

பள்ளிக்குழந்தைகளே வருங்கால சமூகமாக இருக்கும் பட்சத்தில் வகுப்பறை மாற்றமே நமது சமுதாயத்தின் மாற்றம் என்பது திண்ணம்.

நான் பணியில் சேர்ந்து இரண்டு வருடம்தான் ஆகிறது என்பதால் நடப்பவை எல்லாம் எனக்கு அனுபவமே. 2016 – 2017 ஆம் கல்வியாண்டில் நான் பணியில் சேர்ந்த புதியதில், எனது பள்ளி வளாகம் சற்று பெரியது, ஆனால் மரங்கள் சற்றுக்குறைவே. மாணவர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நட முடிவு செய்து மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு நர்சரியில் இலவச மரக்கன்றுகள் வாங்கும் முறைகள் பற்றி விவரம் கேட்டு தலைமையாசிரியை நிலை-II, திருமதி. இந்திரா அவர்களிடம் அனுமதியுடன் புதுவையிலுள்ள வனத்துறை அலுவலகத்தின் வாயிலாக மேட்டுப்பாளையம் அரசு நர்சரியிலிருந்து 75 மரக்கன்றுகள் வாங்கி வந்தோம். என்னுடன் மரக்கன்றுகள் வாங்க உடனிருந்தவர் ஆசிரியர் திரு. வெங்கடேசன் அவர்கள்.

மரம் நடு விழா:

மரக்கன்றுகள் நடும் நிகழ்வை எனது தலைமையாசிரியை ஒரு விழாவாகக் கொண்டாட விழைந்து விழா ஏற்பாடு செய்தார். அதன்படி, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களது கரங்களால் ஏறத்தாழப் பத்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மீதமுள்ள மரக்கன்றுகளை நானும் எனது மாணவர்களுமே நட்டு முடித்தோம். இப்பொழுது பள்ளி வளாகம் முழுவதும் சிறு சிறு குழந்தைகளைப்   போல மரக்கன்றுகள் காட்சியளிப்பது  என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடந்த கால அனுபவப் பகிர்வு:

பள்ளியில் இன்று ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளன. பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்களில் ஒருவர் பள்ளிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் பள்ளியின் முன்னாள் மாணவர் கஜேந்திரன் என்பவர் படிக்கும் காலத்தில் மாணவர் பருவத்தில் நட்டவை அம்மரங்கள். சிறு வயதில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விளையாட்டாக நட்ட மரக்கன்றுகள் இன்று நூற்றுக்கணக்கான சிறு பறவைகள், பூச்சியினங்களுக்கு வாழிடமாக இருப்பது மட்டுமில்லாமல், எம் பள்ளிக்கு குளிர்ந்த காற்றும் நிழலும் தரும் மிகப்பெரிய விருட்சமாக இருப்பது அரிய விஷயம் அல்லவா!

தாவரங்கள் நமது மூதாதையர்கள்:

எனது பள்ளிப் பருவத்திலிருந்தே, நமது பூமியில் உள்ள தாவரங்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் நமது மூதாதையர்கள் எனும் கருத்தில் எண்ணம் நிலைத்துவிட்டது. இதனால் தாவரங்களையும் மற்ற உயிரினங்கள் போலவே பாவிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். ‘அவதார்’ என்கிற ஆங்கிலப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அங்குள்ள மிகப்பழமையான மரங்களை அவர்களது மூதாதையர்களாகப் பாவித்து வழிபடுவது எனது கருத்துக்கு வலு சேர்த்தது. உயிரினங்கள் ஒரு செல் உயிரினத்திலிருந்து வந்தவைகள் என்றால் தாவரங்கள் நமது மூதாதையர்கள் தானே.

கடினமான அனுபவம்:

நாங்கள் மரக்கன்றுகள் நட்டு ஒரு மாதம் கூட முழுமை பெறாத நிலையில் பெரும்பாலானவை காணாமல் போய் விட்டன அல்லது சிதைக்கப்பட்டன. பிடுங்கி எறியப்பட்ட காய்ந்த செடிகளைப்  பார்த்த எனக்கு மனம் நொந்தது. மரங்களைக் குழந்தைகளாகவே பாவிக்கும் ஒவ்வொருவருக்கும் அதன் வலியும் வேதனையும் புரியும். எனது பள்ளி உயர்நிலைப் பள்ளி என்பதால் உயர் வகுப்பு மாணவர்களிடமிருந்து செடிகளைப் பாதுகாப்பது இயலாத காரியமாக இருந்தது. மேலும், எங்கள் பள்ளி வளாகம் பொது மக்களும் பயன்படுத்தும் வளாகம் என்பதால், அந்த மரக்கன்றுகள் அவர்களது கண்களை உறுத்தியதில் ஆச்சரியமில்லை. அந்த மரக்கன்றுகள் அவர்கள் சமூகத்தினரின் நலனுக்காகத் தான் என்பதை அவர்கள் உணராமல் போனதே அதற்கு காரணம்.

ஒரு சமயம் அந்த ஊர்க்கோயில் திருவிழாவின் போது அவ்வூர் இளைஞர்கள் எம் பள்ளியில்  உள்ள செடிகள் மேல் பட்டாசு வெடித்துக்  கொண்டாடினர். இதனால் பெரும்பாலான  செடிகள் இலைகளற்று எலும்புக்கூடுகள் போல் காட்சியளித்தன. இந்த நிகழ்வையே எனது மாணவர்களுக்குப் பாடமாக்கினேன். செடிகள் நடுவதை விட இயற்கை பற்றிய புரிதலை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தினந்தோறும் தாவரங்களின் மகத்துவத்தை எடுத்துக்  கூறினேன். செடிகளுக்கும் மனிதர்களைப் போலவே உணர்வு உண்டு என்பதை விளக்கினேன். பிறகென்ன, என் மாணவச்  செல்வங்களே செடிகளைக் கவனித்துக் கொண்டனர்.

உற்ற உறுதுணை:

2017 ஆம் ஆண்டில் எங்கள் பள்ளிக்குப் புதியதாக தலைமையாசிரியர் நிலை-II,    திரு. ராமதாஸ் அவர்கள் பணியில் சேர்ந்தார். அவரும் செடிகள் பராமரிப்பில் அலாதி பிரியம் கொண்டவர், அனுபவசாலியும் கூட. என்னுடைய முயற்சிகளுக்கு அவரே பெரும் உறுதுணையாக நின்றார். பலமுறை அவர் தனது சொந்தப்  பணத்தில் செடிகள் வாங்கிக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு முறை செடிகள் நடும் போதும் அதன் பிறகும் பள்ளி மாணவர்கள் மற்றும் வெளியாட்கள் அவைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து வருந்தினாலும் முதல் முறை இருந்த பாதிப்பை விட அடுத்த முறை குறைவானதாகவே இருந்தது. இது எங்கள் முயற்சிக்கு பலன் கிடைத்ததை உறுதி செய்தது.

அதன் பிறகு பலமுறை, மரக்கன்றுகள் மற்றும் அழகுச்  செடிகள் என்று நூற்றுக்கணக்கான செடிகள் வாங்கி நட்டோம். இப்பொழுது எம் பள்ளி பசுமைப்  பள்ளியாகவே மாறிவிட்டது எனலாம். ஒருமுறை எம் பள்ளிக்கு வருகை புரிந்திருந்த கல்வி முதன்மை அலுவலர் அவர்கள், பள்ளி சுத்தமாகவும் பசுமையாகவும் பராமரிக்கப்படுவதாகக் கூறி தலைமையாசிரியரிடம் பாராட்டிச்  சென்றார்.

இதற்கிடையில் மாணவர்களிடம் எப்படிச்  செடிகள் பராமரிப்பில் ஆர்வம் உருவானது என்பது ஆச்சரியமான விஷயம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகுப்பிற்கு செல்லும் போதும் குறைந்தது பத்து நிமிடம் நம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்திப்  பேசுவேன், கணித பாட வகுப்பிலும் கூட. மாணவர்களைக் கொண்டே பள்ளம் பறித்தல், செடி நடுதல் மற்றும் நீர் ஊற்றுதல் என அனைத்து வேலைகளையும் செய்வேன். அதிலும் குறிப்பாகத் தொடக்கப்பள்ளி மாணவர்களையே அதிகம் பயன்படுத்தினேன். பொதுவாக ஒரு பொருள் நமக்குச்  சொந்தம் என்று தெரிந்த பிறகுதான் அதன் மேல் உள்ள நமது பொறுப்பு உணர்வு அதிகரிக்கும். எனவே மாணவர்கள் அவர்கள் நட்ட செடியைப் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். தற்பொழுது எமது பள்ளி வளாகத்தில் உள்ள செடிகள்,  மரக்கன்றுகள் அனைத்தும் ஆரம்பப்பள்ளி  மாணவர்களாலேயே பாரமரிக்கப்படுகின்றன என்பது தனித்துவம் வாய்ந்தது. இதுவே நாங்கள் செய்த முயற்சிக்கு பெரும் வெற்றி.

2016-2017 ஆம் கல்வி ஆண்டில் நான் ஆறாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு ஒரு நாடகம் (Mime) ஏற்பாடு செய்தேன். அந்த நாடகம் மரங்களை வெட்டக் கூடாது என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்நாடகம் அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது.  இந்நேரத்தில் எனது முயற்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர்கள், மற்ற ஆசிரியர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக எமது பள்ளி மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

எதிர்காலத் திட்டங்கள்:

நாம் நம் சமூகத்தை மாற்ற நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளின் மனதில் ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்தாலே போதுமானது. ஏனென்றால் எதிர்காலச் சமூகமே அவர்கள்தான்.

கிராம வளாகத்தைச்  சுத்தம் செய்தல்.

தெருமுனை சமுதாய விழிப்புணர்வு நாடங்கங்கள் நடத்துதல்.

பள்ளி மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்க தொடக்கப்பள்ளியிலேயே மாணவர் அமைப்பு   மற்றும் சுகாதாரக்  குழுக்கள் அமைத்தல்.

இது போன்ற பல எதிர்காலத் திட்டங்கள் மனதில் உள்ளன. மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு அவற்றை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளேன்.

ஏதோ சமூக மாற்றம் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயமே மாற வேண்டும் என்பதல்ல.  சமூகத்தின் ஒரு  அங்கமான தனி மனிதன் மாறினாலே, முழு சமுதாயமும் மாற்றம் பெறும். மேலும், நாம்தான் இந்த குழந்தைகளுக்கு ஆசான்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அந்த குழந்தைகளை நமது ஆசான்களாகப் பார்ப்போமேயானால் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்வது மிக அதிகம். நம்மிடம் பெற்றோர்கள் ஒப்படைப்பது அவர்களது குழந்தைகளை மட்டுமல்ல ஒரு சமுதாயத்தையே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. என்றும் குழந்தைகளின் மாற்றமே சமுதாய மாற்றம்.

செந்தமிழ்ச் செல்வன், அ.தொ.ப , திருபுவனை

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management