Towards a just, equitable, humane and sustainable society

நாடகம் வாயிலாகக் கற்றல்

நான்காம் வகுப்பில், ‘தோழிக்கு விருந்து’ என்ற பாடத்தை நடத்த நாடக முறையைக் கையாண்டேன். இந்த வகுப்பின் அனுபவங்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

நோக்கம் :

  1. உச்சரிக்கும் திறனை மேம்படுத்துதல்.
  2. தனித்திறமையை வெளிக்கொண்டு வருதல்.
  3. குழு மனப்பான்மையை வளர்த்தல்.

நாடக வடிவில் கற்றல்  அமைவதால் ஏற்படும் பயன்கள்: வகுப்பு அமைதியாக  இருப்பதோடு மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பர். கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் கூட கற்றல் பொருளை எளிதில் புரிந்து கொள்வர். மாணவர்களிடம் உள்ள பயம், உச்சரிப்புப்பிழை, தாழ்வு மனப்பான்மை, கற்றலில் ஈடுபாடின்மை போன்றவற்றைக் களைய முடியும். மாணவர்களிடம் உள்ள தனித்திறமைகள் வெளிப்படும். ஆசிரியர் மாணவரிடையேயுள்ள தொடர்பு மேம்படும். அவர்கள் தயக்கமின்றித் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவர். இது கற்றலுக்கு நல்லதொரு தொடக்கமாக இருக்கும்.

பாடச்சுருக்கம்: எறும்பு, வெண்டைக்காய், கத்தரிக்காய், காரட் மற்றும் மரம் ஆகியோர் நண்பர்கள். ஒரு நாள், எறும்பு நண்பர்களுக்குப் பாயசம் செய்யும் முயற்சியில் பாயசப் பானைக்குள் விழுந்து விட்டது. ஒவ்வொரு நண்பரும் அடுத்தவரிடம் இச்சம்பவத்தைக் கூற முற்பட்டு தமது உருவத்தில் மாற்றம் ஏற்பட்டது. ஆனால், யாரும் நண்பரைக் காப்பாற்ற முயலவில்லை. இறுதியில் இதைப்பற்றிக்  கேட்டறிந்த யாழினி என்ற பெண் ஓடிச் சென்று எறும்பைக் காப்பாற்றினாள், அவளுக்கு எந்தப்  பாதிப்பும் ஏற்படவில்லை.

குண்டு குண்டு கத்திரிக்காய்,

உருண்டையான சுண்டக்காய்,

நீளமான முருங்கைக்காய்,

நீண்டுத் தொங்கும் புடலங்காய்,

பட்டை போட்ட வெண்டைக்காய்,

பச்சை நிற பாகற்காய்,

கொடியில் தொங்கும் அவரைக்காய்,

கோவை நிற மிளகாய்,

வாட்ட சாட்ட வாழைக்காய்,

வந்துப் பாரு என் தோட்டத்தில்!

முன் ஆயத்தம்: பாடத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அனைத்து மாணவர்களின் மனநிலையையும் மகிழ்ச்சிகரமாக மாற்றுவதற்குப் பாட்டு, விளையாட்டு, கதை போன்றவைகளோடு வகுப்பை ஆரம்பிக்கலாம். நான் ‘குண்டு குண்டு கத்தரிக்காய்…..’ பாடலைப் பயன்படுத்தினேன். இச்செயல்பாட்டுக்குப் பிறகு மாணவர்கள் அனைவரும் கற்றலுக்கு ஆர்வமுடன் தயாராகினர். இது போன்ற செயல்கள் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு வழி வகுக்கும்.

நாடகமாக்கல் –கதைகூறல்:

தோழிக்கு விருந்து என்ற தலைப்பின் கீழ் உள்ள கதையை மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கூறினேன்.

நாடகப் பயிற்சி:

நாடகமாக்கல் செயல்பாட்டின் தொடக்கத்தில் மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து, குழுவிற்கு ஒரு தலைவரை நியமித்தேன். மாணவர்களிடம் தாங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் பற்றியும் அவர்கள் உரையாட வேண்டிய குறிப்புகள் பற்றியும் கலந்துரையாடினேன். நாடகத்திற்குத் தேவையான முகமூடிகளை மாணவர்களே என் உதவியுடன் தயார் செய்தனர். ஒவ்வொரு மாணவரும் அவருடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற உணர்ச்சிகளையும், வசனங்களையும், முகபாவங்களையும் வெளிப்படுத்தச் செய்தேன். சில, இடங்களில் மாணவர்களுக்கு என்னுடைய உதவி தேவைப்பட்டபோது உதவி செய்தேன். அவர்களின் முயற்சிக்குப் பாராட்டியது அவர்களை மேலும்  ஊக்கப்படுத்தியது.

கற்றல் வெளிப்பாடு: இவ்வாறு புத்தகத்தில் உள்ள பாடங்களை மாணவர்கள் விரும்பும் வண்ணம் பல்வேறு செயல்பாடுகளை வடிவமைத்தல் கற்றல் மட்டுமல்லாது கற்பித்தலும் இனிமையாகும். இதன் வழியாக மாணவர்களின் உச்சரிப்புத்திறன் மேம்பட்டது, குழுமனப்பான்மை வளர்ந்தது, கற்பனைத்திறன் பெருகியது, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பிறருக்கு உதவி செய்தல் போன்ற பண்புகள் மெருகேறியது.

க.தேன்மொழி, அ.தொ.ப., ஏம்பலம்

Rate: 
0
No votes yet
Perspective Type: 
School Management