Towards a just, equitable, humane and sustainable society

தீராத விளையாட்டு

விளையாட்டு என்பது போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு மட்டுமன்றி உடல் நலம் மற்றும் மன நலம் காக்க பெரிதும் உதவுகிறது. மேலும், விட்டுக் கொடுப்பது, வெற்றித் தோல்விகளை   ஏற்றுக் கொள்வது போன்ற வாழ்க்கைக்குத் தேவையானத் திறன்களை வளர்க்க உதவுகிறது. பாரம்பரிய விளையாட்டுக்களும், மூச்சுப்  பயிற்சியும்,  மகிழ்ச்சியான உடலசைவுகளும் மாணவிகளிடம் விளையாட்டு ஆர்வத்தைத் தூண்டுவதில் பெரிதும் உதவுகின்றன

எனது பெயர்  அமல பிரபா, நான் தேனி மாவட்டம், இராயப்பன்பட்டி என்னும் கிராமத்திலுள்ள புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக கடந்த  2003 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றேன். என்னை மாநில அளவில் விளையாட்டு வீராங்கனையாக அடையாளப் படுத்தியது மட்டுமில்லாமல், அடுத்தத் தலைமுறையினரை விளையாட்டிலும், உடற்பயிற்சியிலும்  ஊக்கப்படுத்தும் வகையில் எம்பள்ளி எனக்கு உடற்கல்வி ஆசிரியர் என்னும் உயர்ந்த வாய்ப்பையும்  வழங்கியுள்ளதில்  மிகுந்த மகிழ்ச்சியே.

மாணவியாக விளையாட்டில் என் அனுபவம்

நான் பணியில் சேரும்பொழுது மிகுந்த ஆர்வத்துடனும், குழப்பத்துடனுமே பணியில் சேர்ந்தேன். ஏனென்றால் என்னை ஊக்கப்படுத்தி உயர்த்திய என் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பிற பாட ஆசிரியர்களோடு சக பணியாளராகப் பணியாற்றப் போகிறேன் என்ற மகிழ்ச்சி ஓரு பக்கம் இருந்தாலும், நான் படித்த போது என்னைப் போன்று விளையாட்டுத் திறமையுடன், விளையாட்டில் ஈடுபாட்டுடன் இருந்தவர்களைப் பள்ளியின் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிட்டால்  மிகவும் குறைவுதான். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவிகளையும் உடற்கல்வி வகுப்பு நேரத்தில் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்வார்கள். அப்பொழுது என்னைப் போன்ற விளையாட்டு வீராங்கனைகள் மட்டுமே கால்பந்து, கைபந்து, மற்றும் தடகள விளையாட்டுக்கள்  மற்றும் பயிற்சிகளில்  ஈடுபடுவோம். மற்ற மாணவிகள் அனைவரும் ஆங்காங்கே உள்ள மரத்தடியில் அமர்ந்து கதை பேசுவார்கள். நானோ, மற்றவர்களோ விளையாடக் கூப்பிட்டால், அவர்கள் தாங்கள் ஒன்றும் விளையாட்டு வீராங்கனைகள் இல்லையென்று விளையாட வர மறுத்துவிடுவார்கள்.

மாணவிகள் விளையாட மறுப்பதற்கான காரணம்

நீண்ட நாட்களாகவே விளையாட்டையும், மாணவர்களையும் எப்படி ஒன்றிணைப்பது என்று சிந்தித்துக் கொண்டேயிருந்தேன். விளையாட்டு என்பது சான்றிதழ்கள், பரிசுகள், பதக்கங்கள் பெறுவதற்காக  என்று நினைக்கும் மாணவர்களின் மனப் போக்கை அறிந்தேன்.

குழந்தைப்பருவம் முதல் நமது உடலையும், மனதையும்  ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு  இன்றியமையாதது விளையாட்டு என்பதை மாணவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ? பிறந்த குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை விளையாட்டுத்தனத்தின் மூலமே மகிழ்ச்சி அடைகிறார்கள். அதே போல்தான் நமது மாணவிகளும் வீடுகளில், வீதிகளில் விளையாடி இருப்பார்கள். பின்னர் ஏன் தற்போது விளையாட மறுக்கின்றனர்? பெண் குழந்தைகள் என்பதாலும், பருவ வயதைத் தொட்டதாலும், தொடவுள்ளதாலும் மாணவிகள் விளையாட மறுக்கின்றனரா? என்றெல்லாம் யோசித்தேன். மேலும் எங்கள் ஊர் கிராமம் என்பதால் பெரும்பாலான மாணவிகளின் பெற்றோர்கள் இருவரும் கூலிவேலைக்குச் செல்வதால் பெண்குழந்தைகள் என்ற முறையில் வீட்டின் பணிச்சுமைகளைச் சுமக்க வேண்டியிருக்குமோ எனவும் தோன்றியது.

பதின்பருவ வயதை அடைந்து விட்டதால் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதி மறுப்பதாகவும், சின்ன சின்ன விசயங்களுக்குக் கூட பொம்பளப் பிள்ளை இப்படி நடக்கக் கூடாது, அப்படி நடக்கக் கூடாது என்று கூறுவதாகவும்  புலம்பினர். எனவே தான் உடற்பயிற்சி தொடர்பான விளையாட்டின்  மீதிருந்த ஆர்வமே குறைந்துவிட்டதாகக் கூறினர். பெரும்பாலான மாணவிகள் மன இறுக்கத்தோடே காணப்பட்டனர். இதை உணர்ந்த நான் ஒரு சில மாணவிகளை வீராங்கனைகளாக உருவாக்குவதில் கவனம் செலுத்துவதை மாற்றி அனைத்து மாணவிகளின் மீதும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

கல்வியில் விளையாட்டின் பங்கு குறித்து என் தெளிவு

எக்காரணத்தைக் கொண்டும் நான் விளையாட்டு வீரர்களைப்  பயிற்றுவிக்கும் பயிற்றுநராகவும், எல்லா பள்ளிகளையும் போல உடற்கல்வி ஆசிரியர் என்றால் பிரம்பைக் கையில் வைத்துக் கொண்டு மாணவர்களை அடக்குபவராகவும் இருந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்து வருகின்றேன். இது என் பள்ளி, இவர்கள் என் மாணவர்கள் மட்டுமல்லாமல் என் ஊர் குழந்தைகள். இவர்களிடம் ஏன் நான் பிரம்பைக் காட்டணும். இதன் மூலம் நாம் என்ன சாதிக்கப் போறோம்? அதற்கு பதிலாக மாணவிகளை எவ்வாறு நாம் அணுகலாம் என்று நினைத்தேன்.

இதையெல்லாம் மனதில் கொண்டே எனது ஆரம்பகால உடற்கல்வி வகுப்புக்களைத் துவங்கினேன். உடற்கல்வி வகுப்பு நேரங்களில் மாணவிகளை மைதானத்திற்கு அழைத்துச் சென்று கால்பந்து, கைப்பந்து, மற்றும் தடகள விளையாட்டு உபகரணங்களைக் கொடுத்து விளையாட்டு வீராங்கனைகளையும் மற்ற மாணவிகளையும் விளையாடச் சொல்லிவிடுவேன். விளையாடாமல் உட்கார்ந்திருக்கும் பெரும்பாலான மாணவிகள், விளையாடுவதில் விருப்பம் இல்லாததற்கு குடும்பத்தைதான் காரணம் காட்டினர்.

பாரம்பரிய விளையாட்டுக்களிலிருந்து துவங்குதல்

மாதிரி படம்(பட மூலம் : https://www.flickr.com/photos/vengatsiva/26349398052/in/photostream/)

மைதானத்தில் சிறிது சிறிதாக மாணவிகளை வரைமுறைக்கு உட்படுத்தப் படும் விளையாட்டுக்களிலிருந்து வட்டாரங்களில் விளையாடப்படும் (பாரம்பரிய விளையாட்டு) ஓடிப் பிடித்தல், கண்ணாமூச்சி, கயிறு குதித்தல், நொண்டி போன்ற விளையாட்டுக்களை விளையாட அனுமதித்தேன். மாணவிகளும் மரத்தடியிலிருந்து மைதானத்திற்கு வரத்துவங்கினர், மாணவிகளின் மகிழ்ச்சி பெரு வெள்ளத்தில் மன இறுக்கமும் மாறுவதாகத் தோன்றியதால் நானும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. மாணவிகள் மத்தியில் விளையாட்டை வெறும் சந்தோஷம் கொடுக்கும் விசயமாக மட்டும் எடுத்துச் செல்லாமல், அவர்களிடம் மறைந்துள்ள இன்னும் பிற திறமைகளையும் வளர்த்தெடுக்க விரும்பினேன்.

உடற்கல்வியின் நோக்கத்தைத் தெளிவுப்படுத்துதல்

உடற்கல்வி வகுப்பு என்பதன் நோக்கம் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுப்பது மட்டும் அல்ல. பல்வேறு தனி மற்றும் குழு விளையாட்டுக்களின் மூலம்  ஒருங்கிணைந்து செயல்படும் திறன், தனி மனித ஒழுக்கம், விட்டுக் கொடுக்கும் திறன், வெற்றித் தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் திறன் போன்றவற்றை வளர்த்தெடுப்பது தான் என்ற விசயத்தை மாணவிகளின் மனதில் பதிய வைத்தேன். மாணவிகளுக்குப் பிடித்தமான நிறைய புது குழு விளையாட்டுகளையும் புதுவிதமான விளையாட்டுப் பொருட்களையும் (கேரம், செஸ், ஸ்கிப்பிங், பாம்பும் ஏணியும், கியுப்) அறிமுகப்படுத்தினேன். இந்தப் புதிய அணுகுமுறை மாணவிகளுக்கும், விளையாட்டிற்கும் உள்ள இடைவெளியைக் குறைப்பதாய் இருந்தது.

மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்பு

மாணவிகள் உடற்கல்வி வகுப்பின் மீது கொண்டிருக்கும் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் கவனித்த  மற்றப் பாடங்கள் சார்ந்த ஆசிரியர்களும் தங்களுடையப் பங்கிற்கு மாணவிகள் மத்தியில் ஏதேனும் தாக்கத்தை உண்டாக்க விரும்பினர். ஆசிரியர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக அடிக்கடி கலந்து ஆலோசித்ததன் விளைவாக தினமும் காலையிலும், மதியமும் வகுப்புக்கள் துவங்கும் முன் 5 நிமிடங்கள் மகிழ்ச்சி கலந்த உடலசைவு நிகழ்வுகள், மற்றும் மூச்சுப் பயிற்சிகள் செய்ய முயற்சித்தனர். இதற்காக ஆசிரியர்கள் அனைவரும் ஆர்வமுடன் மாணவிகளிடம் புதிய புதிய உடலசைவு நிகழ்வுகளை அறிமுகப்படுத்தினர். மாணவிகளும் தங்களுடைய ஆர்வத்தை உடலசைவில் மட்டுமில்லாமல், ஆசிரியர்களுடனான உறவிலும், பாடங்களைக் கற்றுக் கொள்வதிலும் வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

விளையாட்டில் பள்ளியின் முன்னேற்றம்

ஒவ்வொரு ஆண்டும் விருப்பத்தோடு விளையாட்டுக்களில் ஈடுபடும் மாணவிகளின் எண்ணிக்கை ஒருமுனையில் கூடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது  என்னுடைய பள்ளியில் விளையாட்டு வீராங்கனைகளுக்கும், படிப்பில் சிறந்தவர்களுக்கும் பஞ்சமில்லை. எனக்கு மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்றார்கள் என்பதில் மகிழ்ச்சியே.

என் பள்ளி அரசு உதவிபெறும் கிறிஸ்துவப் பள்ளி என்பதால் மைதானத்திற்காக நிறைய நிலங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் பல கோடி கிராம மாணவர்கள் பயிலும் எத்தனை அரசு பள்ளிகளுக்கு இன்னும் பள்ளி கட்டிடம் கட்டுவதற்குக் கூட தேவையான நிலங்கள் இல்லாமல் இருக்கின்றதே!. இதில் மாணவர்களுக்கும் மைதானத்திற்கும் எப்படியான உறவுகள் இருக்கும்? பெற்றோரும், சமுதாயமும் தான் மாணவிகளைத் தடுக்கின்றனர் என்றால், பள்ளிகளும் தடுக்கின்றனவோ? இதனால் தான் நாம் ஒலிம்பிக்கில் ஒளிர முடியவில்லையோ? போன்ற கேள்விகள் எனக்குள் உறுத்திக் கொண்டிருக்கின்றது என்பதையும்  உங்கள் முன் வைக்கின்றேன். ■

Teacher: அமல பிரபா, உடற் கல்வி ஆசிரியர், புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராயப்பன்பட்டி

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Classroom Management