Towards a just, equitable, humane and sustainable society

ஆசிரியர் பணியில் நிகழ்ந்த தேடல், கற்றல் மற்றும் அனுபவங்கள்

ஒரு ஆசிரியர் பணியில் சேர்ந்ததும் கற்றலை விட்டுவிடாமல் பணியிடைப்  பயிற்சிகள், கருத்தரங்குகள் மூலம் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பது அவரது கற்பித்தல் மேம்பாட்டிற்கு இன்றியமையாததாகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆசிரியர் பணியில் நிகழ்ந்த  தேடல், கற்றல் மற்றும்  கிடைத்த அனுபவங்களை இக்கட்டுரை மூலம் பகிர்கிறேன்.

என் பின்புலம்

எனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் நேரடியாக ஒரு பெயர் பெற்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக  6 முதல் 8 ஆம்  வகுப்பு வரை எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகுதான் ஆசிரியர் பயிற்சி (B.Ed.) பயில முடிவு செய்தேன். நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதும் நான் முழுமையான ஆசிரியர் ஆகிவிட்டேன் என்று பெருமை அடைந்தேன்.

ஒரு தனியார் பள்ளியில் சேர்ந்து சிறப்பாக வேலை செய்ததால் அடுத்தடுத்தப்  பணி உயர்வு கிடைத்தது. அங்கு ஒரு ஆசிரியரின் கவனம் மாணவர்களின் ஒழுக்கத்திலும் மதிப்பெண்ணிலும் தான் இருந்தது. நானும் நூறு சதவிகித தேர்ச்சி அளித்தேன். நான் ஒரு  நல்ல ஆசிரியர் என்ற மனநிறைவு அடைந்தேன். பின்னர் பொருளாதார நிலை காரணமாக சில வருடம் வங்கியில் பணி அமர்ந்தேன்.

ஆசிரியர் தொழிலில் அடைந்த மனநிறைவு எனக்கு அங்கு கிடைக்கவில்லை.  எனது களம் வங்கி சேவை அல்ல கல்விச் சேவைதான் என்று உணர்ந்தேன். ஆனால், இம்முறை என்னுடைய இலக்கு அரசு பள்ளியில் சேவை செய்வதாக இருந்தது

பணியிடைப் பயிற்சியில் கற்றவை

எனது முதல் பணி அமர்வு ஒரு கிராமப்புற உயர்நிலைப் பள்ளியில். இங்கு எனக்கு அரசுப்  பள்ளிக்கும்,  தனியார் பள்ளிக்கும்  வித்தியாசம் புரிந்தது. ஒரு அரசு பள்ளியில் கற்பிப்பது எளிதல்ல. ஆனால் மிகக் கடினமானதும் அல்ல என்று உணர்ந்தேன்.  இவ்வாறாக ஒரு மாதம் சென்றது. என்னுடைய கற்றல்-கற்பித்தல் முறை, கல்விச் சிந்தனைகளை  முற்றிலும் வேறு பாதைக்கு அழைத்துச் சென்றது அசீம் பிரேம்ஜி பௌண்டேஷன் நடத்திய அந்த ஒரு வார கால பணியிடைப்  பயிற்சி. அந்த பயிற்சியின் போது கேட்கப்பட்ட கேள்வி “கல்வி என்றால் என்ன ? அதில் ஆசிரியரின் பங்கு என்ன?” “Education is a desirable change in the behavior of children, and it is the duty of the teacher to bring out overall development of the children” என்று பதிலளித்தேன்.

அடுத்து என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, “கல்வியில் தேர்ச்சியடைந்த பின்  முதலாளியின் மகன் முதலாளியாவதும், தொழிலாளியின் மகன்  தொழிலாளியாவதும், அவர்கள் இருவரும் ஒட்டுமொத்த  வளர்ச்சி அடைந்ததைக் குறிக்கிறதா?”. இந்தக் கேள்வி எனக்கு ஒரு திறப்பை அளித்தது; தொடர்ந்து  பயிற்சிகளில் கலந்து கொண்டேன். பல கற்றல்-கற்பித்தல்  முறைகளைப் பற்றிய அறிமுகம் எனக்குக் கிடைத்தது. மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். எந்த முன்னேற்றமும் இல்லை. எனக்கு அது மனஅழுத்தத்தை உண்டாக்கியது.

கற்பித்தல் மாற்றங்கள்

செயல்பாடுகள் மூலம் கற்றல், காட்சிகளின் உதவியுடன் கற்றல், கணினி உதவியுடன் கற்றல் என  ஒவ்வொரு பாடத்தின் தன்மைக்கேற்ப   கற்பித்தல் முறைகளை மாற்றினேன்.  இதற்கு Azim Premji Foundation  நடத்திய Young Discoverer’s Programme என்னும்  பணியிடைப்  பயிற்சி பெரும் உதவி புரிந்தது.

குழந்தை மைய கற்றலை நோக்கமாகக் கொண்டு, செயல்வழி கற்றலைப் பின் வரும் கற்றல் சூழ்நிலைகளில் பயன்படுத்தினேன்.

  • தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் பற்றி அறிதல்
  • நேரடியாக வீடு கட்டும் இடத்திற்குக் களப்பயணம் சென்று கற்றல்
  • காகித கலை பயிலுதல்
  • முளைக்கட்டிய பயிர்களின் நன்மைகளைத் தெரிந்து கொள்ளுதல்
  • அருகில் உள்ள வயல்வெளிக்குக் களப்பயணம் செல்லுதல்

மாணவர்களிடம் பாடம் தாண்டிய அறிவியல் அறிவை  வளர்க்க அறிவியல் கண்காட்சி, கட்டுரைப்  போட்டி, ஓவியப்போட்டி, வினாடி - வினா, பட்டிமன்றம், மற்றும்  தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அந்நாள் முழுவதும் அறிவியல் உணர்வூட்டக்  கூடிய கொண்டாட்டங்கள் ஆகியவை நடத்தப்பட்டது. பெரும் முயற்சியுடன்  அறிவியல் மன்றமும் திறக்கப்பட்டது.  இப்படியாக அந்த ஆண்டு நிறைவு அடைந்தது.

அடுத்த கல்வியாண்டு நகர்ப்புற பள்ளிக்கு மாற்றலாக நேர்ந்தது. வருத்தத்துடனும் ஒரு எதிர்பார்ப்புடனும் அங்கிருந்து விடைப்பெற்றேன். புதிய சூழ்நிலை, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் என இந்தச் சூழலில் எனது கற்பித்தல் முறையைத் தொடர தயக்கமாக இருந்தது. ஒரு பதட்ட உணர்வும் இருந்தது. அப்போதும்  எனக்குக் கைக் கொடுத்தது Azim Premji Foundation. இலகுவாகக் கற்றல் சூழலை உருவாக்க எனக்குப் பெரிதும் உதவியது. பள்ளியில் உள்ள அனைத்து மூலங்களையும் பயன்படுத்தி மாணவர்களிடம் அறிவியல் சிந்தனையை வளர்த்தெடுக்க முடிந்தது.

கருத்தரங்குகளில் கிடைத்த அனுபவம்

‘சிந்தனை சங்கமம்’ என்ற கருத்தரங்கு எனக்கு ஒரு மிகச்சிறந்த திறப்பைத் தந்தது; கற்பித்தல்முறை சார்ந்த சில படிப்பினைகள் கிட்டின. அங்கு வானவில் என்ற பள்ளியின் ஆசிரியர்களைச் சந்தித்தேன். அவர்கள் சமூகத்தில் கல்விச்  சிந்தனையே அற்ற ஒரு சமூகத்தினரை (குறவர்கள்) தேடிச் சென்று கல்வி அறிவு கொடுக்கின்றனர். இவர்களிடம் உரையாடியதில் ஒரு உண்மையை அறிந்தேன். அவர்கள் கூறியதாவது, “உங்கள் அடையாளத்தை மறந்து விடுங்கள். நீங்கள் ஒரு பட்டதாரி என்பதை மறந்து விடுங்கள். மாணவர்களை விட உங்களை உயர்வாக எண்ணாதீர்கள். கற்றல் மகிழ்ச்சியானதாக அமையும்”. இது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் இதைக் கடைபிடித்ததில் மாணவர்களுடனான என் உறவு இணக்கமானதாக மாறியது.

அதே கருத்தரங்கில் “ஆசிரியரிடம் மாணவர்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்ற தலைப்பில் ஆய்வு செய்திருந்த மாணவர், கண்டறிந்தது என்னை ஆச்சிரியப்படுத்தியது. ஒரு தனியார் பள்ளி மாணவன் ஆசிரியரிடம் எதிர்பார்ப்பது பாடத்தில் ஆளுமை, அதிக மதிப்பெண் பெற உதவுவது. ஒரு அரசுப் பள்ளி மாணவன் எதிர்பார்ப்பதோ அன்பும் அக்கறையும் என்பது தான். அறிவியல் கற்பிக்கும்  ஆசிரியையாக அன்பையும் அரவணைப்பையும் எனது மாணவர்களுக்கு  அளிக்கத்  தொடங்கினேன். இது மகிழ்ச்சி அளித்தது; Favourite ஆசிரியர் என்ற அங்கீகாரம் கிடைத்தது.

மேலும் கற்றல் திருவிழாவில் எனக்குக்  கிடைத்த அனுபவங்கள் பெரும்  உந்து சக்தியாக அமைந்தது. Vital என்ற அமைப்பின் பெண்மணி கூறிய பதில், கற்றல் சூழல் மாறினாலும், கற்பிக்கும் முறை மாறினாலும், ஆசிரியர் ஒரு வழி நடத்துனராக(facilitator) மட்டுமே இருக்க வேண்டும்.  கற்பித்தலின் பலனை அன்றே எதிர்பார்க்க முடியாது. ஆனால் மாணவர்களின் வளர்ச்சியை இலக்காக வைத்து செயல்பட்டால் வளமான எதிர்காலத்தை உருவாக்கலாம் என்ற தெளிவு பிறந்தது.

எனக்குக் கிடைத்த அங்கீகாரம்

எனது பழைய பள்ளியின் தலைமை ஆசிரியை அந்த ஆண்டு அறிவியல் கண்காட்சிக்காக என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அந்தப் பள்ளியில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 300. அங்கு வைக்கப்பட்டிருந்த படைப்புகளின் எண்ணிக்கையோ 250. எனது மாணவர்களின் படைப்புகளைப் பார்த்து வியந்தேன்; பெருமை அடைந்தேன்.

மேலும் கற்பித்தலின் பலனை அன்றே எதிர்பார்க்க முடியாது. அதனால் மனச்சோர்வு அடையாமல் புத்துணர்ச்சியுடனும் மன நிறைவுடனும் என் தேடலைத் தொடங்குகிறேன் ஒரு சிறப்பான வகுப்பறையை நோக்கி.  ■

Teacher: ஹேமலதா. ர, அறிவியல் பட்டதாரி ஆசிரியர், இளங்கோ அடிகள் அரசு மேனிலைப் பள்ளி, முத்திரையர்பாளையம்

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Classroom Management