Towards a just, equitable, humane and sustainable society

கலையும் கல்வியும்​

கலை எனப்படுவது யாதெனில் ?

கலை என்பது எல்லாம் வல்ல இறைவனால் வழங்கப்பட்டு ஆன்மாவால் உள்வாங்கப்பட்டு உள்ளத்தில் புதைந்து பிராணனால் உயிர் ஊட்டி உடலால் வெளிப்படுவது.

ஒருவர் தான் வியந்த, அனுபவித்த இயற்கையை மற்றவர்களுடன் வண்ணங்களின் ஊடே உரையாடுவது ஒவியம் எனப்படும்.  அதுவே, உலகத்தின் முதல்மொழி மற்றும் பொதுமொழி. ஒரு மாணவனின் கற்றல் வளர்ச்சியிலும் கலையின் பங்களிப்பு இன்றியமையாதது.

கலை - மனிதன் தோன்றும்போதே தோன்றியது, ஒரு தியான யோகம், மனிதனின் வாழ்க்கையை சீரமைக்கிறது. கலைகளின் கண் ஓவியக்கலை.

ஓவியன்:

இயற்கையைப் பார்த்து, ரசித்துப் பாராட்டி தான் அனுபவித்த ஆன்ம உரையாடலை மற்றவர்களுக்குக் காட்டுகிறான். அத்தகைய ஓவியக்கலையைப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றலோடு கற்பிப்பதில், மாணவர்களுக்குக் கலையார்வமும், ஓவியத்தின்மீது பற்றும் ஏற்படும் என்பதில் எனக்குப் பெருமை.

வண்ணங்களின் தத்துவம்:

எண்ணங்களுக்கு உருவம்(வடிவம்) கொடுத்து வண்ணங்களாக்கிக் கொண்டு தீட்டுவதால் ஓவியம்  அழகுற உயிர் பெறும்.

வண்ணங்களை சிவப்பு, ஊதா, மஞ்சள் என்று தலையாய வண்ணங்கள் என்றும் இரண்டாம் நிலை வண்ணங்கள் (இரு தலையாய வண்ணங்களின் இணைவு நிறம்) என்றும் வகைப்படுத்தலாம்.

மேலும், வண்ணங்களை மூன்றாம் நிலை வண்ணம், நடுத்தரமான வண்ணங்கள், வெப்ப வண்ணங்கள்,குளிர்ச்சி வண்ணங்கள், இலவச வண்ணங்கள், மாறுபட்ட வண்ணங்கள், ஒத்த தோற்றமுடைய வண்ணங்கள் என பலவகையாகப் பிரிக்கலாம். வண்ணத்தின் தத்துவத்தைப் புரிந்து மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதால் வண்ணங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஓவியத்திற்கு அழகாக உயிர் கொடுப்பர்.

ஆரம்பநிலையில் ஓவியம்:

மாணவர்களுக்குத் தொடக்கநிலையிலேயே நுண்கலை திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களின் எண்ணங்களை வண்ணங்களின் வழியாக அறியலாம்.

உணர்ச்சிகளுக்கும் வண்ணங்களுக்கும் பின்வருமாறு தொடர்புண்டு:

மஞ்சள்: ஆன்மீக உணர்வு, ஆக்கத்திறன், புதியது புனையும் திறன், உறுதி.

சிவப்பு: போராடும் இயல்பு, துணிச்சல், கோபம்.

ஊதா: அன்பு, புத்திக்கூர்மை, கலை ஆர்வம், அன்பு செய்து துயர் தீர்த்தல்.

பச்சை கலந்த நீலம்: அறிவுரை செய்யும் ஆற்றல், குணப்படுத்தும் ஆற்றல்.

செங்கரு நீலம்: உயர்வடைய வேண்டும் என்ற எண்ணம் கட்டுப்பாடு, அதிகாரம்.

பச்சை: அமைதியான இயல்பு, சிந்தனைத்திறன், கற்பனை, புதுமை கண்டறியும் ஆற்றல், கற்பித்துக்கொடுக்கும் ஆற்றல்.

செம்மஞ்சள்: மனிதத்தன்மை, பிறருக்கு உதவும் பண்பு

கருப்பு: தனிமை உணர்ச்சி, கவலை, ஆன்மீக உணர்வு, எழுச்சி, புரட்சி,ஒழுங்கின்மை, இரகசிய உணர்வு.

சாம்பல் நிறம்: தனித்தன்மை உணர்ச்சி, புதிய பார்வையில் நோக்கும் உணர்வு, உணர்ச்சிவசப்படுதல்.

ஓவிய ஆசிரியாராக எனது பயணம்:

கலை இன்றி வாழ்க்கை இல்லை. கலையோடு சேர்ந்து கற்கும் கல்விமுறையில் பயணித்த எனது கற்றல் மூலமாகப் பல மாணவ , மாணவிகளை மாநிலம் மற்றும் தேசிய அளவிலான ஓவியத்துறையில் பங்களிக்க வைக்க முடிந்ததது. மேலும், நுண்கலைக் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு மற்றும் மேற்படிப்புக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இருப்பினும், இதில் பல சிக்கல்களைக் கடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. இன்றைய சூழலில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரும்பாலோனோர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களால் விலையுயர்ந்த நுண்கலை உபகரணங்களை வாங்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

மாணவர்கள் மீது அக்கறை கொண்ட ஆசிரியர்களின் பங்களிப்பால் மட்டுமே திறமையான மாணவர்களை வெளிக்கொணர முடிகிறது. பள்ளித்தலைமையும் பள்ளிக்கல்வித்துறையும் இதன்மேல் கவனம் மேற்கொண்டு நுண்கலை உபகரணங்களை வழங்கினால் அவர்களின் சிரமங்களை கலைந்து மேலும் மாணவர்களின் வளர்ச்சி மேம்படும் என்பதில் ஐயமில்லை.

பள்ளிகளில் நுண்கலை:

பிறபாடங்களுக்கு செய்முறை பாடங்கள் இருப்பதைப்போல ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் நுண்கலைக்கென ஒரு கலைக்கூடம் அமைத்து மாணவர்கள் அங்கு சென்றால் மன அமைதியையும், ஓவியம் எனும் தியானத்தில் ஈடுபடுவதற்கேற்ற சூழலை ஏற்படுத்துமாயின் மாணவர்களின் வாழ்வியலை நெறிப்படுத்தி செம்மைப்படுத்தும். பிரெஞ்சு மற்றும் சி.பி.எஸ்.இ கல்வி முறைகளில் நுண்கலையை கட்டாய பாடமாக்கி பயிற்சி அளித்து வருகிறார்கள். அத்தகைய பணியைச் செம்மையாக செய்துகொண்டு இருக்கும் ஆசிரியர்களோடு நானும் எனது பங்களிப்பை செய்ய தூண்டுகோலாய் இருந்த அத்துணை எனது ஆசிரியர்களுக்கும் நன்றி.

“கலை ஒன்றே மனிதனை ஒழுங்குபடுத்தும்”-எனது ஆசான் ஓவியார் கலைமாமணி இபேர்.

Teacher: ஓவியர் . ரவிராஜ், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ​திருவாண்டார்கோயில் ​

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Classroom Management