Towards a just, equitable, humane and sustainable society

மாணவர்களுக்குக் கற்றலில் ஆர்வத்தை உருவாக்குதல்

கற்பித்தலில் மாணவர்களை இணைத்துக் கொள்வது கற்றல் சிறப்பாக  நிகழ உதவுகிறது. மேலும் குடும்பத்திலும் சமூகத்திலும் மாணவர் நலனை உறுதி செய்வதில் ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கிடையிலான உரையாடல் பலனளிக்கிறது.

நான் இப்பள்ளியில் 2010 ஆம் ஆண்டு முதல் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். நான் பணியாற்ற வந்த போது எட்டாம் வகுப்பு முடித்த மாணவிகளுக்குத் திருமணம் செய்துவிடுதல், கம்பெனிக்கு வேலைக்கு அனுப்புதல் போன்ற செயல்கள் நடைபெற்று வந்தது. பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திலும், தனிப்பட்ட முறையிலும் பெற்றோர்களை அணுகி மாணவிகளை மேலும் படிக்க வைக்க முயற்சி மேற்கொண்டேன், அதற்குப் பலனும் கிடைத்தது. இன்று 30 – க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரிப் படிப்பை முடித்து உள்ளார்கள்.

நான் பணிபுரியும் கிராமம், சற்று பின்தங்கிய கிராமம்.  நகரத்தை ஒட்டி அமைந்திருந்தாலும், அனைவரும் அதிகம் படிக்காதவர்கள். விவசாயம், விவசாயக்கூலிகள் அதிகம்.  பிள்ளைகளும் கல்வியில் அதிக நாட்டம் இல்லாதிருந்தனர்.  பள்ளி வயது பிள்ளைகளுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி கல்வியில் நாட்டம் ஏற்படவைத்து, அவர்களைக் கற்க வைப்பதில் அதிக சிரமம் இருந்தது.  பெண்பிள்ளைகள் அதிக நாட்டத்துடன் கல்வி பயின்றனர்.

கற்பித்தலில் என் அணுகுமுறை

நான் ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியலும், 8 -  ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியலும் கற்பித்தேன்.  மாணவர்களுக்கு ஆர்வமூட்ட ஒவ்வொரு வகுப்புப் பாடவேளையிலும் கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு கற்பித்தலை மேற்கொள்வேன்.  வகுப்பில் சில்மிஷம் செய்யும் மாணவனை உபகரணங்கள் செய்வதில் துணையாக வைத்துக் கொள்வேன்.  அவர்களின் திறமைகள் அதில் வெளிப்படும் விதத்தில் பொருள்கள் செய்யவைத்துக் கற்றல் செயலில் ஈடுபடுத்துவேன். கற்றல் பாடப்பகுதி சார்ந்த இடங்களுக்கு மாணவர்களைக் களப்பயணமாக அழைத்துச் சென்று காண்பிப்பதையும் நான் வழக்கமாகக் கொண்டு இருக்கிறேன்.

கற்றலில் ICT பயன்படுத்துதல்

உத்திரமேரூர் ஒன்றிய ஆசிரியர் திரு. அன்பழகன் அவர்கள் 2012 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ICT  கணினிப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றார்,அங்கு கணினி வாயிலாக வகுப்பறையில் கற்பிக்கும் வழிமுறைகளைப் பல ஆசிரியர்கள் விளக்கிக் கூறினர். அது முதல் நானும் எனது பள்ளியில் கணினி வாயிலாகக் கற்பிக்கும் வழிமுறைகளைக் கையாண்டு வருகிறேன்.

பாடப்பகுதிகளைத் தனித்தனி அலகுகளாகப் பிரித்துக் கொண்டு அவற்றுக்கு PPT வாயிலாகப் படங்கள் மற்றும் வீடியோக்கள் upload செய்து வகுப்பறையில் கற்பித்தலில் பயன்படுத்தி வருகிறேன். அறிவியல் பாடத்திற்கு மட்டுமின்றி சமூக அறிவியல் பாடத்திற்கும் பாடத்திற்கு ஏற்ப படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிறக்கம் செய்து வகுப்பறையில் காண்பிக்கும் போது மாணவர்களின் கற்றல் செயல் நன்றாக இருந்ததை அறிந்து அதனையே தற்போது வரை பின்பற்றி வருகிறேன்.

அறிவியல் மன்றச் செயல்பாடு

எங்கள் பள்ளியில் நடைபெறும் அறிவியல் மன்றங்கள் கடைசி ஒரு மணிநேரம் வினாடி வினா நிகழ்வாகவே இருக்கும். 6,7,8 வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் இதில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெறும். குறைந்தது 100 கேள்விகளாவது கேட்கப்பட வேண்டும்.

அறிவியல் மன்றச் செயல்பாடுகளில் மாணவர்களின் ஆர்வம் மிக அதிகம்.  வெற்றி பெறும் அணியினருக்கு மறுநாள் காலை நடைபெறும் இறை வணக்கக் கூட்டத்தில் தலைமை ஆசிரியரால், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் பரிசு வழங்கப்படும்.முதலில் நான் கேள்விகளைக் தயாரித்துக் கேட்டு வந்தேன். ஆனால் தற்போது கற்பித்தல் முடிந்த அலகுகளுக்கு மாணவர்களாகவே கேள்விகளைத் தயாரித்து வைத்திருப்பது மிகவும் திருப்தியாக உள்ளது.

ஆசிரியர்களின் வருகை குறையும் நாட்களில் 6,7,8 மாணவர்கள் அனைவரையும் ஒன்றாக வைத்து அறிவியல் சார்ந்த படங்களையும் பட வீழ்த்தி வாயிலாக மாணவர்களுக்குக் காண்பிப்பது வழக்கம். இதுவும் மாணவர்களைப் பாடப்பொருளோடு எளிதில் தொடர்பு கொள்ளச் செய்தது.

கற்பித்தல் என்பது ஆசிரியர்களால் மட்டுமே நடைபெற வேண்டும் என்பதை மாற்றி அதில் மாணவர்களையும் பங்கு பெறச் செய்வது அவர்களை உற்சாகமடையச் செய்துக் கற்றலை எளிமையாக்குகிறது. பல்வேறு கற்பித்தல் வழிமுறைகளைக் கையாள்வது மாணவர்கள் சோர்வடைவதைத் தவிர்த்து அவர்களை மகிழ்ச்சியுடன் கற்றலில் ஈடுபடச் செய்கிறது. பள்ளியைத் தாண்டி மாணவர்களின் நலனை உறுதி செய்வதில் பெற்றோர்களுடனான உரையாடல் உதவி செய்கிறது.  ■

Teacher: தா. வரதராஜன். அறிவியல் பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தேனம்பாக்கம், காஞ்சிபுரம்

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Classroom Management