Towards a just, equitable, humane and sustainable society

மாணவர்களிடம் சமூக உணர்வை விதைப்பதில் ஆசிரியரின் பங்கு

மாணவர்களைச் சமூகத்திற்குப் பங்காற்றுபவர்களாக உருவாக்குவதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. மாணவர்களிடம் சமூக  உணர்வை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையயேயான உரையாடல் இன்றியமையாததாக இருக்கிறது.

ஒரு சமூகம் தன்னைத்தானே புதுபித்துக்கொள்ள வித்தினை உருவாக்கும் இடமே பள்ளி தான். பள்ளியில் பயிற்றுவித்தலின் நோக்கம், மாணவர்கள் சீரான வளர்ச்சி அடைதலே ஆகும். மாணவர்களின் சீரான வளர்ச்சியில் சமூகம் மேம்படும். இவ்வித்துகளை உருவாக்க விருட்சமாய் விளங்க வேண்டியவர்கள் நம்மைப் போன்ற ஆசிரியப் பெருமக்களே! அப்படி நாம் விளங்குகின்றோமா?

சமூகம் என்பது என்ன?

சமூகம் என்பது தொடர் மாற்றத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கும் பல குழுக்களின் அமைப்பு. பிறர் வளர்ச்சியில் தன் வளர்ச்சியையும், தன் வளர்ச்சியில் பிறர் வளர்ச்சியினையும் காணும் சார்புத்தன்மை உடைய பொதுநோக்கம் கொண்ட மனிதர்களின் கூட்டு வாழ்க்கை.

எது சமூக உணர்வு ?

    சமூக மேம்பாட்டிற்கான மாற்றத்தையும் அதற்கான வழிமுறைகளையும் பற்றி  சிந்திப்பதே சமூக உணர்வாகும். மற்றவர்களின் பண்பாட்டு மதிப்பீடுகளைப்  பாராட்டுதல், குடி உரிமையை மதித்தல், தீண்டாமையை எதிர்த்தல்,  நட்புறவு, தேசப்பற்று, மனித நேயம், சகோதரத்துவம், அனைத்து மதங்களையும் நேசித்தல், என்பனவற்றைச் சமூக உணர்வுகளாகக் கொள்ளலாம்.

ஆசிரியரின் சமூகப் பங்களிப்பு:

பள்ளிக்கும் சமூகத்திற்கும் இடைப்பட்ட உறவுப்பாலமாகவும் உணர்வுப்பாலமாகவும் திகழ வேண்டியவர்களே ஆசிரியர்கள். ஆசிரியர் என்பவர் தனது அறிவாற்றலாலும், மனவாற்றலாலும் சமூக முன்னேற்றத்தினை முன்னெடுத்துச் செல்பவராக இருக்க வேண்டும். இருக்கிறோமா? இருக்க அனுமதிக்கப்படுகிறோமா?

சமூக உணர்வின் காரணிகள்:

மாணவர்கள் கற்கும் பாடமும், கட்டமைக்கும் அறிவும், பெறும் பயிற்சியும், அடையும் மதி  நுட்பமும் அவர்கள் சமூக உணர்வுடன் திகழும் போது திறன்பெற பரிணமிக்கும்.

இன்றைய வாழ்வியல் சூழலில் நமது மாணவச்செல்வங்களின் சமூக உணர்வை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் காரணிகள்:

  • பெற்றோர்கள்
  • நண்பர்கள்
  • அரசியல்
  • ஊடகங்கள்
  • சமூகம்
  • ஆசிரியர்கள்

மாணவர்களின் சமூக உணர்வைக் குலைப்பது எது?

இக்காரணிகள் மாணவர்களிடம் நேர்மறை, எதிர்மறை என்ற இருநிலை சமூக உணர்வுகளையும் உருவாக்குகின்றன. சுயநல நோக்கத்தையும் குறுகிய இலக்கையும் நோக்கியே அனைவரது வாழ்க்கைப் பயணமும் அமைவதால் எதிர்மறை சமூக உணர்வுகள் மேலோங்குகின்றன. மாணவர்களின் சமூக உணர்வைப் பாதிப்பதில்  ஊடகங்களும் அரசியலும் ஆசிரியர்களாகிய நம்மை முந்திச் சென்றதன் காரணம் என்ன ?

மாணவர்களைத்  தம் மனதை நோக்கி உள்சிந்தனை செய்ய வைப்பதில் நாம் தவறிவிட்டோம். நிறைந்த இன்பம், நிரந்தர பயன் எது என்பதனைப் புரியவைப்பதில் தவறி  விட்டோம். அதனால் அவர்கள் காண்பதையும், கேட்பதையுமே உண்மை என நினைக்கிறார்கள்.    

கற்றல் சூழலில் உள்ள குறைகள் மாணவர்களின் சமூக பொறுப்பின்மையின் வேர்களாக அமைகின்றன. அனைத்து அறிவும் புலமையும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயற்கையாகவே புதைந்துள்ளது என்று இரவீந்திநாத் தாகூர் கூறுகிறார். அப்படியெனில் கற்றல் சூழல் உள்ளிருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருதல் வேண்டும். ஆனால், இன்றைய கற்றல் சூழல் பாடப்புத்தகங்களுடனும் சோதனைக் கூடங்களுடனும் முடிந்துவிடுகின்றன. பெரும்பான்மையான பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர், கைவினை ஆசிரியர், இசை ஆசிரியர் இல்லை. இதனால், மாணவர்களின் புலன்கள் கூர்மை படுத்தப்படாமல் மழுங்குகின்றன. இதுவே சமூக உணர்வற்ற நெறி மாறிய சிந்தனைகளுக்கான வேர்களாக மாறிவிடுகின்றன.

மாணவர்களிடம் சமூக உணர்வை விதைத்தலில் என் அனுபவம்:

புதுவையின் எல்லையோர கிராமமான மணலிப்பட்டில் அமைந்திருக்கும் அரசு நடுநிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பள்ளியின் பொறுப்பாசிரியராகவும் உள்ளேன். இச்சூழலில் கிடைத்த அனுபவங்கள், மாணவர்களிடம் சமூக உணர்வு மேலோங்கி நிற்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

இவ்வாண்டின் தொடக்கத்தில் எம்பள்ளி மாணவர்கள் மிகுதியான அளவில் மதிய உணவினை வீணாக்குவதைக் கண்டேன். மாணவர்களிடம் இம்மனநிலையை மாற்றும் நோக்கில் காலைப்பேரவை மற்றும் வகுப்பறையில் என் கருத்துகளைப் பதிவு செய்தேன்.

ஒருமுறை நம் தட்டில் உள்ள இவ்வுணவு நம்மை வந்தடைய எத்தனை மனிதர்களின் உழைப்பு உள்ளது என்பதை விளக்கமாகக் கூறினேன். விதை நெல் வீசி, நாற்றாக்கி, நடவு நட்டு, நீர் பாய்ச்சி, களை பறித்து, அறுவடை செய்து, நெல்மணியை அரிசியாக்க எத்தனை  மக்கள் தங்கள் உழைப்பைத் தருகிறார்கள் என்பதனை விளக்கிக் கூறினேன். நாம் வீணடிக்கும் ஒவ்வொரு பருக்கையும் பல்வேறு மக்களின் கடின உழைப்பை வீணடிக்கும் செயல் என்பதனை உணர வைத்தேன். மேலும் ஒரு வேளை உணவுக்காகப் போராடும் மக்களின் நிலைகளைப் பல்வேறு ஊக்கக்   காட்சிகள் மூலம் மாணவர்கள் உணரச் செய்து தெளிவு பெறச் செய்தேன். இதன் விளைவு இன்று எம் மாணவர்கள் உணவினை வீணாக்குவதனைத் தவிர்த்து, சமூக உணர்வுடன் செயல்படுகின்றனர்.

பொதுச் சொத்துகளைச்  சேதப்படுத்தாமை:

மாணவர்கள் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில் விளையாடும் போதும் தன்னை அறியாமலேயே பொருட்களசை் சேதப்படுத்தி விடுகின்றனர். பொதுச் சொத்துகள், முக்கியமாகப் பள்ளித் தொடர்பான பொருட்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வினை மாணவர்களிடம் ஏற்படுத்த எண்ணினேன்.

இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பள்ளியின் சொத்துகள் என்றோ எவரோ பயன்படுத்தி விட்டு நமக்காக விட்டுச் சென்றவை என்பதையும் அது போல இவற்றை நம் பயன்பாட்டிற்குப் பின், நம் சந்ததியினரும் தம் அறிவுத்திறன் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப் போகின்றனர் என்பதனை மிக அழுத்தமாக மாணவர்கள் மனதில் பதிய வைத்தேன்.

கடந்த மாதம் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் முழு வலிமயைக் கொண்டு வாயிற்கதவினை இழுப்பதனைக் கண்ட சக மாணவர்கள் இவ்வாறு செய்வது தவறு, இது முறையானது அல்ல எனச் சுட்டிக் காட்டிய விதம் என்னை மகிழ்வுறச் செய்தது. ஏனெனில், நான் கூறிய கருத்துகள் அனைத்தும் வெறும் செய்திகளாக  மட்டுமின்றி சமூக உணர்வாக உள்ளத்தில் பதிந்தது மகிழ்வைத்  தந்தது.

நேற்றைய மாணவர் சமூகமே

இன்றைய மனித சமூகம் ..

இன்றைய மாணவர் சமூகமே

நாளைய மனித சமூகம்

நல்ல மாணவர் சமூகத்தை உருவாக்கிடுவோம் .. .

மாண்புமிக்க சமுதாயத்தைப் படைத்திடுவோம். ...

காலைப்பேரவை முதல் வகுப்பறைச் சூழல், விளையாட்டுத் திடல், பள்ளி வளாகம் என அனைத்துத் தருணங்களிலும் சமூக உணர்வை மாணவர்களிடம் விதைக்க முடியும். என் கருத்துக்கள் மூலம் மாணவர்களிடையே விரும்பத் தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை கண்கூடாகக் கண்டு மகிழ்கிறேன்.

Teacher: குமாரவேல், பட்டதாரி ஆசிரியர், அரசு நடுநிலைப் பள்ளி, மணலிப்பட்டு

 

Rate: 
0
No votes yet
Perspective Type: 
General Perspectives