Towards a just, equitable, humane and sustainable society

மொழி கற்றலில் செயல்வழிக் கற்றலின் தாக்கங்கள்

0
No votes yet
0
Post a comment

மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்புலம் :

எங்கள் பள்ளியில் உயர்நிலைப்பள்ளியளவில் 116 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் போதுமான வகுப்பறை வசதிகள்,  விளையாட்டு, கழிவறை வசதிகள் போன்ற அனைத்து அடிப்படையான வசதிகளும் உண்டு. இப்பள்ளியில் மணற்பரப்புள்ள இடங்களிலெல்லாம்  மரங்களும், செடிகளும் பள்ளியை அழகாக்கும் நோக்கத்தோடு வைக்கப்பட்டுள்ளன. மேலும்  மூலிகைத் தோட்டமும்  பள்ளிவளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களாவர்.  பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் இங்குள்ள தொழிற்சாலைகளில்தான்  கூலிகளாகப் பணிபுரிகின்றனர். அதுவும் புதுச்சேரியைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருந்து குடிபெயர்ந்து வந்து இங்கு வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தினமும் பள்ளிக்குச் செல்கிறார்களா இல்லையா  என்பதைக் கூட அறிந்து கொள்ள நேரமின்றி அன்றாட வயிற்றுப்பிழைப்பிற்காக ஓடிக் கொண்டிருப்பவர்கள். எனவே மாணவர்களுடைய முன்னேற்றத்திற்கு முழுக்க முழுக்க ஆசிரியர்களே பொறுப்பேற்கும் நிலை இங்குள்ளது. சில நேரங்களில் வலுக்கட்டாயமாகப் பெற்றோர்களை அழைத்துப் பேசினாலும் அவர்களுடைய கண்ணீர்க்கதைகளைக் கேட்கும் போது  ‘ஏன் இவர்களை அழைத்தோம்?’ என்ற வருத்தமே என்னுள் மேலோங்கியது. இந்நிலையே புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளிலும் நிலவிவருவதையும் நான் அறிவேன். எனவே மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டால் போதும்,  முழுக்க முழுக்க என்னால் இயன்ற பணிகனைச் செய்து அவர்களை முன்னேற்ற வேண்டும்  என்பதையே என்னுடைய குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றிவருகின்றேன்.

குமரப்பருவப் பிரச்சினை :

தொடக்கக்கல்வியைக்  கற்றுமுடித்து குமரப்பருவமடைந்து உயர்நிலைக்கல்விக்கு ( ஆறாம் வகுப்பு) மாணவர்கள் வரும் பொழுது அவர்களுடைய வகுப்பறைச் சூழல், கற்பித்தல் திறன், ஆசிரியர்களுடனான உறவுமுறை, புதிய நண்பர்கள், எனப் பல மாற்றங்களை மாணவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுவும் ஆறாம் வகுப்பிலிருந்து 7, 8, 9 ஆம் வகுப்புகளுக்கு மாறிச் செல்லும்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான உறவில் சற்று விலகலும் விரிசலும் காணப்படுகின்றது. ஒவ்வொரு ஆசிரியரும் ‘‘இவன் ஆறாம் வகுப்பிலிருந்தது போல் இப்போது இல்லை’’ என்று புலம்புவதையே நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். இந்த மாற்றத்திற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அவர்களைத் தொடர்ந்து , அப்படியே எப்படி நம்முடன் நெருக்கமாக வைத்திருப்பது என்று பலமுறை நான் யோசித்தது உண்டு. நம்முடைய வகுப்பறையில் சில கற்றல் செயல்பாடுகளை நாம் கொண்டு வந்தால் மாணவர்கள் தொடக்கக்கல்வியில் இருந்த அதே நெருக்கம், ஒத்துழைப்பு, கீழ்ப்படிதல் ஆகிய திறன்களைக் கண்டறிய முடியும்.  அதுமட்டுமில்லாமல் அவர்கள் தொடர்ந்து நம்மையே சுற்றிக்கொண்டு புதுப்புது யோசனைகளையும்  நமக்குக் கொடுப்பார்கள்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து 6, 7, 8, 9-ஆம் வகுப்புகளுக்குச் செல்லும்போது நம்முடைய ஆற்றல், ஆர்வம் என எல்லாவற்றையும் சில நேரங்களில் குறைத்துக் கொள்கிறோம். ஆனால் நம்முடைய கற்றல் செயல்பாடுகளில் எவ்வித வேறுபாடுகளும் இல்லாது மாணவர்களை ஆர்வமாக பங்கேற்கச் செய்தால் இந்த வகுப்புகளை எளிதில் கையாளலாம்.

பாடங்களை அன்றாட வாழ்வுடன் தொடர்புபடுத்துதல்:

ஆறாம் வகுப்பில் இரண்டாம் பருவத்தில் உள்ள ஊர்த் திருவிழா என்ற பாடத்தை நான் கற்றுக்கொடுக்க நினைத்த போது முதலில் மாணவர்களுடைய ஊர்களில் நடக்கும் திருவிழாக்களின் பெயர்களைக் கேட்டேன். ‘தீமிதித் திருவிழா, மயானக்கொல்லை, செடல் திருவிழா,  பொங்கல் விழா,’ எனப்பல்வேறு விழாக்களின் பெயர்களை அவர்கள் பட்டியலிட்டனர். பின்னர் ஒவ்வொரு திருவிழாவையும் ஏன் கொண்டாடுகின்றனர் ? எந்தெந்த மாதங்களில் கொண்டாடுகின்றனர்? முதலான வினாக்களைக் கேட்டு அவர்கள் அனைவரையும் விவாதத்தில் பங்குபெறச் செய்தேன்.  வகுப்பில் வழக்கமாகப் பேசாத மாணவர்கள் கூட ஆர்முடன் பேசத் தொடங்கினர் ( பேசுதல் திறன்) . மாணவர்கள் கூறிய விழாக்களின் பெயர்களை எல்லாம்  கரும்பலகையில் எழுதச் சொன்னேன் ( எழுதுதல் திறன்).

மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்தல் :

திருவிழாக்களின் போது மாணவர்கள் என்னென்ன காட்சிகளையெல்லாம் பார்த்தார்கள் என்று கேட்டபோது வெவ்வேறு காட்சிகளை வரிசைப்படுத்தினர். அவர்கள் கூறிய ‘பலூன் விற்றல், சாமி ஊர்வலம், வெடி வெடித்தல், பொங்கிடுதல், படையல்’ இந்தக்காட்சிகளை யெல்லாம் நான் ஓவியங்களாகக் கரும்பலகையில் வரைந்தேன்.  மாணவர்களுக்கு படங்களைப் பார்த்தவுடன் “டீச்சர் இது இப்படி வரையனும், பட்டாசு மேல வெடிக்கனும், பொம்மை கடை வரையனும், பொங்கல் பானை முன்னாடி கோலம் போடனும்”  எனப் பல்வேறு திருத்தங்கள் மாணவர்களிடமிருந்து வந்தன. இவர்களுக்கு வரைவதில் உள்ள ஆர்வத்தைக் கண்டு,  ஒவ்வொருவரும் அவர்கள் பார்த்த திருவிழா குறித்த ஓவியத்தை வரைந்து வரும்படிக் கூறினேன். வளரறிச்  செயல்பாடுகளில் இதை ஒரு செயல்பாடாகக் எடுத்துக் கூறி அனுப்பினேன், மாணவர்களும் இச்செயல்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டனர்.  அடுத்த இரண்டு நாட்களில் எழுதப் படிக்கத் தெரியாத மாணவன் கூட திருவிழா படத்தை வரைந்து வந்திருந்தான். ஆனால் அதில் வண்ணமில்லை. பிறகு அவனுக்கு வண்ணப்பென்சில்களைக்  கொடுத்து வண்ணமிடக்கூறி நானும் அவனுக்கு உதவினேன். இதன் மூலம் மாணவர்களிடமிருந்த வரைதல் திறனை ( வரைதல் திறன்) என்னால் அறிய முடிந்தது.

மாணவர்களின் கலையுணர்வை வளர்த்தல் :

இந்தச் செயல்பாடுகள் எல்லாம் ஏற்கனவே 2 ஆண்டுகளாக நான் செய்தவை. இச்செயல்பாடுகளுக்கு நல்ல விளைவுகள் கிடைத்ததால்  அவற்றை நான் தொடர்ந்து செய்தேன். இந்த ஆண்டு புதிதாக ஏதாவது ஒன்றை நான் முயற்சி செய்யலாம் என நினைத்த போது, திருவிழாக்களில் மாணவர்களை மேலும் மகிழ்ச்சியடையச் செய்வது அங்கு நடைபெறும் கலைவிழாக்கள்தான் , எனவே அவற்றைப்  பற்றிக் கேட்டேன். பாட்டுக்  கச்சேரி, ஆடல் பாடல், மேஜிக் ஷோ, சிலம்பாட்டம் என தாங்கள் கண்டு -கேட்டு களித்த நிகழ்வுகளின் பெயர்களைக் கூறினார்கள்.  அவர்களுக்கு வேறு நாட்டுப்புறக்கலைகள் பற்றி ஏதேனும்  தெரிந்திருக்கிறதா என்று அறிவதற்காக தெருக்கூத்து பற்றிக் கேட்டேன். அனைவருக்கும் தெரிந்திருந்தது. தொடர்ந்து சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம்  ஆகியவற்றைப்பற்றிக்  கூறியபோது ஒரு சில மாணவர்கள் எழுந்து ஆடத்துவங்கினர். அவர்களுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு இந்த முறை ஏதாவது ஒரு கலைநிகழ்வை மாணவர்களை வைத்து நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்று முடிவு செய்து “கரகாட்டம் ஆடலாமா”? என்றேன்.  கரகாட்டம் ஆடுவதற்கு கரகம் தேவை,  கரகம் எப்படி செய்வது என்று  மாணவர்களுக்கு ஒரு சில ஆலோசனைகள் வழங்கினேன். சிலருக்கு நான் சொன்னது  புரியவில்லை. பின்னர் கரகாட்டம் பற்றிப் புரியாதவர்களிடமும்  அதில் ஈடுபாடு இல்லாதவர்களிடமும் “சரி தப்பாட்டம் சிலர் ஆடலாம்” என்று கூறி தப்பு எப்படி செய்வது என்று கூறியதும்   ( உம் - தட்டின் மேற்புறம் பிளாஸ்டிக் பேப்பரை இறுக்கமாக ஒட்டிச் செய்ய வேண்டும்)  மீதி இருந்த மாணவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். அடுத்த 2 நாள் விடுமுறையில் சில கரகங்களும், தப்புக்கருவிகளும் என் வகுப்பறையை அலங்கரித்தன. அவர்களை நான்  பாராட்டிவுடன் ‘’ இவற்றையெல்லாம் தலைமையாசிரியரிடம் காட்டலாமா? எனக் கேட்டனர்.  தலைமையாசிரியர் மாணவர்களின் படைப்புகளைப் பார்த்துப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் அதில் ஒரு அழகான சிறிய கரகத்தை அவருடைய அறையில் பார்வைக்காக வாங்கி வைத்துக்கொண்டார். அடுத்த நாள் அரங்கேற்றம். மாணவர்கள் அறிந்த ‘மாங்குயிலே, பூங்குயிலே’   பாடலை மாணவர்களும் நானும் பாட அவர்களின் ஆட்டம் தொடர்ந்தது.  அதுபோலவே தப்பாட்டமாடும் மாணவர்கள் குழுவாக வட்டமாக நின்று தப்படித்தனர். அந்தப் பாடத்தின்  உரைநடையில் கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு ஆர்வமாகப் பதில் அளித்தனர். இந்தச் செயல்பாடுகளை கூடுதலாக வகுப்பறையில் செயல்படுத்தியதால், மாணவர்களுடன் ஆசிரியருக்கான உறவுமுறை வலுவடைந்தது. அடுத்த சில பாடங்களைக் கற்பிக்கும் போது  ( பறவைகள் பலவிதம், தங்க மாம்பழம்)  “மிஸ் பறவைகள் இருக்கிற ஊசுட்டேரிக்கு போகலாமா ?” என்று அவர்களே ஆர்வமாகக் கேட்டனர். ‘தங்க மாம்பழமும்  சூட்டுக்கோலும்’ என்ற துணைப்பாடத்தை வகுப்பறையில் அவர்களே நாடகமாக நடித்தனர். காவலாளி, அரசன், அமைச்சன் முதலானப் பாத்திரங்களுக்குரிய  அம்பு, வாள், கிரீடம் இவற்றை அவர்களே செய்தனர். இந்த நாடகம் சிறப்பாக அமைந்திருந்ததால் ‘குழந்தைகள் தினவிழா’ அன்று நாடகத்தில்  சில மாற்றங்களைச்  செய்து மேடையில் அரங்கேற்றினர்.

கற்றல் தாக்கங்கள் :

நான் மேற்குறிப்பட்டவை போல வகுப்பறையில் கொண்டு வந்த சில கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகளால் மாணவர்களுடைய படித்தல் எழுதுதல், வரைதல், நடித்தல் முதலிய திறன்கள் மேம்பட்டன. ‘கற்றல்-கற்பித்தல் கருவிகளைத் தாங்களே உருவாக்குதல், தொடர்ந்து பள்ளிக்கு வருதல், மொழிப்பாடவேளையை ஆர்வமாக எதிர்நோக்கியிருத்தல், பள்ளியில் எல்லா விழாக்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றல்’ முதலான நேர்மறையான மாற்றங்களையும் கொண்டுவரமுடிந்தது. மேலும் மாணவர்கள் நான் கூறும் அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அப்படியே ஏற்பதையும் பார்க்க முடிந்தது. முக்கியமாக எல்லா ( படிக்கின்ற, படிக்காத) மாணவர்களுடைய தனித்திறமைகளும் வெளிப்பட்டன.  மேற்குறிப்பிட்ட  செயல்பாடுகள் மாணவர்களுக்கு ஆசிரியருடன் நெருக்கமான உறவை மேம்படத்திடவும் உதவின.

Author: பாரதிபாலா - பா., தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்,

Subject: 
English, Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment