Towards a just, equitable, humane and sustainable society

பாடநூல் வடிவமைப்பு - முரண்பாடுகள்

0
No votes yet
0
Post a comment

பாடநூல் வடிவமைப்பு – ஒரு பார்வை

அரசின் கல்விக் கொள்கைகளை கற்றல் அடைவுகளுடன் பொருத்தி வடிவமைக்கப்படுபவை பாடநூல்கள். எதிர்காலச்  சமூகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை இதற்கு அவசியம். ஏனெனில் இது தவழும் கரங்களில் தான் ஒரு நாட்டின் எதிர்காலம் உள்ளது. எனவே இதன் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்துதல் இன்றியமையாதது.

பாடநூலில் உள்ள முரண்பாடுகள் மாணவர்  மனதில் தெளிவற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே அவர்கள் அது குறித்து வினாக்கள் எழுப்புகின்றனர். அதற்கான விடைகள் தெளிவாக இல்லாதபோது அவர்கள் மேலும் குழப்பமடைகின்றனர். இது சமூகத்தின் மீதான அவர்களது பார்வையிலும் பிரதிபலிக்கிறது.

பத்தாம் வகுப்பு தமிழ்ப்  பாடநூலில் உள்ள முரண்பாடுகள் சிலவற்றை இக்கட்டுரையில் காணலாம்.

பாடவரிசைக்கிரமம்  – முரண்

செய்யுள், உரைநடை, துணைப்பாடம், ஆகியவற்றை உள்ளடக்கியது ஒரு இயல். இராண்டாவது இயலின் செய்யுள் பகுதியில் சிலப்பதிகாரமும், உரைநடைப் பகுதியில் பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் பாடமும், துணைப்பாடப் பகுதியில் மெல்ல மெல்ல மற எனும் கதையும் கொடுக்கப் பட்டுள்ளது.

சிலப்பதிகாரம் பாடலில் கோவலன் கண்ணகியைக் கைவிட்டு மாதவியுடன் சில காலம் வாழ்ந்து, இயலாமை காரணமாக மீண்டும் தன்னை நாடி வந்த கணவனை மன்னித்து ஏற்று, அவனிடம் தன் காற்சிலம்பைக் கொடுத்தனுப்ப, அதையும் விற்க முடியாமல் அரசனால் சிரச்சேதம் செய்யப்பட்டதால் பெருந்துயருற்று பாண்டிய மன்னனின் அவைக்குச் சென்று வழக்குரைத்த கண்ணகியின் கதையைத் தொடர்ந்து வருவது, பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள். அது சங்க காலத்தில் எழுதப்பட்ட செய்யுள் என்று கூறினாலும், மாணவர்கள், சங்க காலத்தில் பெண்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனரா? என்று வினா எழுப்புகின்றனர். எனினும் கணவனிடம் அடிமைப்பட்டுத் தான் இருந்தார்களோ? என்பது போன்றும், பெண்ணுரிமை என்பது அரசனிடம் நீதி கேட்பதா அல்லது கைவிட்ட கணவனைப் புறக்கணிப்பதா?  என்றெல்லாம் கேள்விகள் எழுப்புகின்றனர்.

பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் பாடத்தில்  பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டியதன் அவசியம், கைம்மை ஒழிப்பு, மணக்கொடை ஒழிப்புப் பற்றிய கருத்துக்களைக்  கூறுவதற்கு முன்பாகப் பெண்கல்வி போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய செய்யுள் பகுதியைக் கொடுத்திருந்தால் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக அமைந்திருக்கும்.

இந்த முரண்பாடுகள் அதோடு நிற்கவில்லை. துணைப்பாடப் பகுதியில் மெல்ல மெல்ல மற எனும் கதைப் பகுதியில் நீள்கிறது. புகைப்பிடிக்கும் பழக்கமுடைய ஒருவன் தன் மனைவி எவ்வளவு எடுத்துக்  கூறியும் அதனை விட மறுக்கிறான். இதற்கிடையே அவனது நண்பன் புகைப்பழக்கத்தின் காரணமாக புற்றுநோய் ஏற்பட்டு மரணமடைய, அவன் மனைவி விதவைக் கோலத்தில் கதறி அழுகிறாள், நண்பன் மனைவியின் விதவைக் கோலம் அவர் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியது. தன் மனைவியிடம், நீ பூவோடும் பொட்டோடும் இருக்க வேண்டும் எனக் கூறி புகைப்பழக்கத்தை விட முடிவு செய்கிறான். புகைப்பழக்கம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது இக்கதையின்  நோக்கமென்றாலும், கதைக்களம் பெண்ணுரிமை, கைம்மை ஒழிப்பிற்கு எதிரானது. மாணவர்கள் மனதில் உரைநடைகளை விடவும் கதைகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இத்தகைய முரண்பாடுகளைத் தொடர்ச்சியாக வைப்பதால் மாணவர்கள் பெண்ணுரிமைத் தொடர்பாகக் குழப்பமான மனநிலையைப் பெறுகின்றனர். கதையின் தலைப்பும் மெல்ல மெல்ல மற என்று பெரியாரின் கருத்துக்களை மறக்கச் சொல்வது போலவே உள்ளது மற்றுமொரு வேடிக்கை.

கருத்து –முரண்

மூன்றாவது இயல் உரைநடைப் பகுதியில் அண்ணல் அம்பேத்கர் பாடமும், செய்யுள் பகுதியாக கம்பாராமயணம்-குகப்படலமும் கொடுக்கப்பட்டுள்ளது. கம்பராமாயணத்தில் குகன் இராமனைக் கண்டு தன் நெற்றி முடி நிலத்தில் படியும் படியாக விழுந்து வணங்கி, வாயைக் கையால் பொத்தி உடலை வளைத்து அடக்கமாக நிற்கிறான். தேனும், மீனும் கையுறைப் பொருள்களாக இராமனுக்குக் கொடுக்க இராமன் தன்னைச் சுற்றி நிற்கும் பிராமணத் துறவிகளைப் பார்த்து, குகன் அன்புடன் கொண்டு வந்தமையால் இந்த உணவு தூய்மையானது, பரிசுத்தமானது என்றெல்லாம் கூறிவிட்டுத் தான் ஏற்றுக் கொண்டதால் உண்டதற்குச் சமம் என்கிறார்.

குகன் இராமனைக் கண்டு ஏன் பணிந்து வணங்க வேண்டும்? வாயைக் கையால் பொத்தியபடி ஏன் நிற்க வேண்டும், உணவை  உண்ணாமல் சமாளிப்பதற்காகத் தான் தூய்மையானது என்றெல்லாம் கூறினாரா இராமர்? என்றெல்லாம் மாணவர்கள் வினாக்கள் எழுப்புகின்றனர். ஏனெனில் குகன் இராமனைக் கண்டு பணிந்து அடக்கமாக நிற்பதற்கும், இராமன் உணவை உண்ணத் தயங்குவதற்கும் பின்னால் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். இப்படலத்தை அம்பேத்கர் பாடத்திற்கு முன்பாக வைத்தது மிகப்பெரிய முரண். பாடநூலில் இத்தகைய முரண்பாடுகளை வைப்பதால், பாடம் வேறு, வாழ்க்கை வேறு எனும் எண்ணம் மாணவர் மனதில் ஏற்படுத்தும். இப்படியிருக்க அரசின் கல்விக்கொள்கைகள், எதிரகாலச் சமூகம் குறித்தான தொலைநோக்குப் பார்வை எவ்வாறு அவர்களுக்குக் கடத்தப்படும்.  இச்சமூகம் முரண்பட்ட சமூகமாகத் தான் இருக்கும்.

முரண்பாடுகளைக்கையாளுதல்: 
முரண்பாடுகளைக் கலந்துரையாடலுக்கான களமாகப் பயன்படுத்தலாம். பெண்  உரிமைத் தொடர்பானக் கருத்துக்களைத் தற்காலச் சூழலோடுப் பொருத்திப் பார்த்துச் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்த விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். கலந்துரையாடல் மூலம் வகுப்பறையின் இறுக்கமான சூழலைத் தளர்த்தலாம்.   

Author: லலிதா ப்ரியதர்ஷினி, காரைக்கால்

Subject: 
English, Tamil

Term: Term 3

0
No votes yet
0
Post a comment