Towards a just, equitable, humane and sustainable society

ஆயிஷா – எங்களைச் செதுக்கிய சிற்பி

ஆயிஷா – ஓர் அறிமுகம்

ஒரு நல்ல புத்தகம் நல்ல நண்பர் மட்டுமல்ல,  நம்மையே மாற்றக்கூடிய வல்லமை படைத்தது. இன்று நல்ல ஆசிரியராக வலம் வர எனக்கு நிழலாய் என்னுடன் இருக்கும்   என் ஆயிஷாவை மேடையில் திசைமானி வழியே காட்சிப்படுத்த எண்ணினேன். என் ஆயிஷா என்னை எப்படி நல்ல ஆசிரியராக மாற்றினாள்.  அதைப் போலவே, பல  நல்ல சிறந்த ஆசிரியர்கள் உருவாக என் ஆயிஷா உதவுவாள் எனும்  நம்பிக்கையில் தோன்றியது தான் என் ஆயிஷாவிற்கு நான் உயிர் கொடுத்தது. புத்தகத்தைப் படித்து உணர்வதை விட நாடகம் அதை இன்னும் உணர்வுப் பூர்வமாக கொண்டு செல்லும் என்பதால் அதைச் செயல்படுத்தத் துடித்தேன்.

கதை உயிரோவியமானது

நாடகத்தில்  திருமதி. கவிதா (ஆசிரியை, அரியாங்குப்பம் மணவெளி) திருமதி. கெஜலட்சுமி (ஆசிரியை, கரிக்கலாம்பாக்கம்) ஆசிரியராகவும் ஆயிஷாவாகவும் நடித்தனர்.  நாடகத்தைப்பற்றி    விவாதித்த பொழுது, பலரின் ஒட்டுமொத்த கருத்தும் எண்ணமுமே என்னை ஆயிஷாவின் டீச்சராக்கியது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  ஆயிஷாவின்  டீச்சராக என்னால் நடிக்க முடியுமா! என்பது  இன்று வரை நம்ப முடியவில்லை.

நாடகத்திற்கான கதையைத்  தயாரித்து எழுதினோம். பல நாட்கள் உட்கார்ந்து யோசித்து காட்சிகள் அமைத்தோம்.  இது உண்மையாக நடந்த நிகழ்ச்சி என்பதால் கட்டுக்கதை எழுத முடியாது. நம் விருப்பம் போல் காட்சிகளை மாற்ற முடியாது கொடுக்கப்பட்ட நேரமோ 15 நிமிடம் அதற்குள்ளாக என்ன? எதை? எப்படி? கொடுப்பது என்பது மிகவும் சிக்கலாகவே  இருந்தாலும் துணிந்து கடுமையாக உழைத்து களத்தில் இறங்கினோம்.

நடித்துப் பழகினோம். எங்களால் நடிக்க இயலவில்லை. ஒவ்வொரு முறையும் பயிற்சி செய்யும் பொழுது அழுது நின்ற நேரம் அதிகம். நான் தான் ஆயிஷாவுடன் வாழ்கிறேன் என்றால் என்னுடன் இந்த நாடகத்தில் நடித்த அத்தனை பேரும் ஒவ்வொரு முறையும் அழுதோம்.  அப்பொழுதுதான் தெரிந்தது ஆயிஷா என்னை மட்டும் தாக்கவில்லை, பலரின் இதயத்தை தாக்கியிருக்கிறாள். பல நல்ல ஆசிரியர்களுடன் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அதனால் தான் அரசுப்பள்ளிகள் இன்றும் செழிப்பாக ஆலமரமாய் கம்பீரமாக நிற்கின்றன என்பதை அறிந்தேன்.

நடிப்பின் நுணுக்கங்கள்

அந்தப் புத்தகம் உரைநடையில் ஒரு வரலாறு போல் இருக்கும். கடந்த கால மற்றும் நிகழ்கால நிகழ்வுகளை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இத்தருணத்தில் நாடகத்துறையில் அனுபவம் பெற்ற திரு. அருணகிரி அவர்கள் மிகச் சிறப்பாக எங்களை வழிநடத்தி  நடிக்க வைத்தார்.

நாடகம் என்றால் சும்மா கையை அசைத்து வசனம் பேசுவது என்ற என் எண்ணம் முழுதாக மாறியது. இதை இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும், இங்கு நின்று தான் அதைச் சொல்ல வேண்டும் என்ற வரைபடமும் தேவை என்பதை உணர்ந்தேன். குழந்தைகளை நாடகம் நடிக்க வைக்கும் பொழுது என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டேன்.  இதைப்போல செய்தால்தான் அது பார்வையாளர்களைக் கவரும்.  மேலும் சொல்லக் கூடிய விஷயமும் அவர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தேன்.

ஒவ்வொரு முறையும் திருத்தம் செய்யும் பொழுது வருத்தமாகவும், கோபமாகவும் தான் இருந்தது. நாளை நாடகம் நடத்தப்பட வேண்டும் என்பதால் எனக்கு பயம் வந்து விட்டது. ஒரு கட்டத்தில் என்னால் முடியாது என்ற முடிவுக்கே வந்து விட்டேன் ஆசிரியரும் மற்றும் அனைவரும் என்னை ஊக்கப்படுத்தி நடிக்கச் செய்தனர் ஆசிரியர் என்னைச் செதுக்க ஆரம்பித்து விட்டார். அதற்கு நான் முழு ஒத்துழைப்பு தருவதில் ஆர்வமும் ஈடுபாடும் இருந்தாலும் நேரம் இல்லையே என்பது எங்களின் வருத்தமாக இருந்தது. முயன்று நடித்துப் பழகினோம்.   நாடகம் முடிந்த பிறகுதான் ஐயோ, நடிக்காமல் போயிருந்தால் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை  நான் இழந்திருப்பேன் என்று தோன்றியது.

நேரமின்மை காரணமாகவோ பயம் மற்றும் கோபம் காரணமாகவோ நான் நடிக்கமுடியாது என்று நினைத்து என் முயற்சியைக் கைவிட்டிருந்தால் இன்று நான் ஆயிஷா டீச்சர்  என்ற பெயரை எடுத்திருக்க முடியாது. அனைவரும் என்னை ஆயிஷா டீச்சர் என்று அழைப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது முயற்சியுடன் உழைப்பும் தான்.  என்னால் முடியாது என்று  நினைத்து  தோல்வியைக் கண்டு துவண்டு, முயற்சியை விடும் பொழுது வெற்றி நம்மை விட்டு தூர ஓடி விடும்.  நம் இலக்கை நாம் அடைய முடியாது என்பதை உணர்ந்தேன்.

இதைப்போன்றுதான் அனைத்து செயல்களையும் தவறாமல் செய்து முயன்று வெற்றி பெற வேண்டும். ஒரு பிள்ளையைப் படிப்பு வராது, நீ லாயக்கில்லை, நீ உருப்பட மாட்ட, திருந்த மாட்ட போன்ற எத்தனை வசவுகளால் கொல்கின்றோமோ!  அக்குழந்தை தளர்ந்து எனக்கு வராது என்ற முடிவுக்கு வந்து விட்டால்... யார் பொறுப்பு? சிற்பி அணு அணுவாக முயற்சித்தால் மட்டுமே அழகிய சிலை செய்ய முடியும.  அதை விடுத்து ஆத்திரமும், அவரசமும் கொண்டால் கல் சுக்கு நூறாக உடைந்து விடும் என்பதை உணர்ந்தேன. முடியாது என்ற வார்த்தையை மறந்தும் கூட பயன்படத்தக் கூடாது என்று முடிவு செய்ததோடு எம் பள்ளிக் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இதை உணர்த்த முயல்கிறேன்.

எங்கள் இதயத்தைத் துளையிட்ட ஆயிஷா

ஆயிஷா வெறும் கதையாகிவிடக் கூடாது. ஒரு குழந்தையை அடித்துத் துன்புறுத்தினால் தான் அவர்கள் மனம் பாதிக்கும் என்பதல்ல.  கடினமான ஒரு சில  வார்த்தைகள் கூட வேண்டாம், அவர்கள் சொல்ல வந்ததை நாம் கேட்காமல் அலட்சியம் செய்தால் கூட அவர்கள் மனம் வாடும், உடனே சோர்ந்து விடுவர். ஏன், நமது பார்வை ஒன்றே (கோபம், அலட்சியம், அதிகாரம், ஆணவம் கலந்த பார்வை) அவர்களை அடங்கி ஒடுங்கச் செய்து விடும் என்பதை உணர்த்தவே இதை நான் காட்சிப்படுத்த எண்ணினேன். சிறிது யோசித்தால் நமக்கே உண்மை புரியும். நம் குழந்தையாக இருந்தால் என்ன செய்வோம். அவர்கள் கேட்கும் முன் அவர்களின் தேவையறிந்து எதையும் செய்யத் தயாராக இருக்கின்றோம், இல்லை என்ற பதில் சொல்ல நமக்குள் எவ்வளவு தயக்கம். அது போலத்தான் நம்மை நாடி வரும் குழந்தைகளும், அவர்களிடம் நாம் காட்டும் அலட்சியம்,  பாரபட்சம்,  அடக்குமுறை அவர்களைத் தானாகவே ஒடுக்கி விடும் என்பதில் துளியும் ஐயமில்லை. வகுப்பறை என்பது நமது இடம் அல்ல; நமக்கான ஒன்றல்ல; அது குழந்தைகளுடையது; அவர்களுக்கானது. இந்த எண்ணம், நம்பிக்கை குழந்தையிடம் ஏற்படும் பொழுது மட்டுமே குழந்தை ஈடுபாட்டுடன் கற்க முன்வரும். ஏன்? நாமும் அப்படித்தானே? நமக்குப் பிடித்தால் மட்டுமே, நம்பிக்கை, ஆர்வம் இருந்தால் மட்டுமே நாம் செயல்களில் ஈடுபடுவோம். முயற்சி செய்ய அடுத்த அடி எடுத்து வைப்போம். நமக்கே இவ்வாறென்றால், நம்மை நாடி வரும் குழந்தைகளை நாம் எப்படி தயார்படுத்த வேண்டும். குழந்தைகள் ஒவ்வொருவரும் கண்ணாடி பாத்திரம் போன்றவர்கள். மிக கவனமாக கையாள்வது ஆசிரியராகிய நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை நாம் மறக்கவோ மறைக்கவோ முடியாது. ஆசிரியர் என்ற அதிகாரத்தை விடுத்து, கற்றலுக்கு உதவி செய்பவர், சூழலை ஏற்படுத்தித் தருபவர் என்ற நினைவோடு வரும் காலங்களில் அடியெடுத்து வைப்போம்.

எங்களை  உருமாற்றியவள்

ஏன் ஆயிஷா 2001-ல் எனக்கு அறிமுகமானாள். என் ஆயிஷா  என்னுள் ஏற்படுத்திய பாதிப்பால் அன்று முதல் இன்று வரை எந்த சந்தர்ப்பமாக, எந்த நேரமாக, எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், என்னிடம் செய்தியைச் சொல்ல வரும் குழந்தையிடம் பிறகு கேட்கிறேன், சும்மா இரு கையைக்கட்டு, வாயை மூடு  போன்ற அர்த்தமற்ற வார்த்தைகளை சிறிதும் பயன்படுத்தாமல் அவர்களுக்கு மதிப்பளித்து, அவர்கள் கூறும் செய்தியைக் கேட்டு பதிலளித்தபின்தான் எனது பணியை நான் தொடருவேன். என்னுடைய பணியில் எத்துணை ஆயிஷாக்களுக்கு நான் உயிர் கொடுத்திருக்கிறேன் என்று இன்று நினைக்கும் பொழுது எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதுடன் கொஞ்சம் திமிராகவும் தான் இருக்கின்றது. நல்லாசிரியராக நான் உருவாகக் காரணமாக இருந்த ஆயிஷாவுக்கு நன்றி கூறுவதுடன், இந்த நாடகம் என்னை ஆயிஷா டீச்சராக மாற்றி மீண்டும் எனக்கு மறு ஜென்மம் கொடுத்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. இந்த அனுபவத்தைப் பகிர்ந்தால் இன்னும் எத்தனை ஆயிஷா டீச்சர்கள் உருவாகி ஆயிஷாக்கள் என்னும் வேரைத் தாங்கும் ஆலமர விழுதுகளாக உருவாகத் தயாராக இருக்கின்றனரோ!!!

ஆயிஷா – அரிதான அனுபவங்கள்

ஆயிஷா மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம்.  ஒவ்வொரு முறை படிக்கும் போதும் கண்ணீர் சிந்த வைக்கும் புத்தகம்.  இந்தப் புத்தகம் நாடகமாக அரங்கேறியது.  இந்த ஆண்டு மேடையில் திசைமானியில். சிலிர்க்க வைத்த அனுபவம். சிறிய கதாபாத்திரம் என்றாலும் நாடக ஒத்திகை நான்கு நாட்களில் கிடைத்த அனுபவம் விலைமதிப்பில்லாதது.    எங்கு ?  எப்படி?  வசனம் பேசுவது எவ்வாறு, அரங்கு அமைப்பது எப்படி  என்பது போன்ற நுணுக்கங்கள் அறிந்தேன். பொதுவாக நாம் வகுப்பறையில் நாடகம் சொல்லிக்கொடுக்கும் போது வசனத்தில் மட்டுமே கவனம் செலுத்துவோம். ஆனால் இந்த ஆயிஷா நாடகத்திற்குப் பிறகு வசனங்கள் மட்டும் நாடகத்திற்கு உயிர் ஊட்டுவதில்லை அதையும் தாண்டி காட்சி அமைப்பு, கதாபாத்திரங்கள் நிற்கும் இடங்கள், நடக்கும் முறை, உரையாடும் முறை அரங்கில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என அனைத்துமே நாடகத்திற்கு உயிரோட்டமானவை. இந்த நாடகத்தின் ஒத்திகை பார்க்கும்போது கற்றுக் கொண்டது அதிகம். அழுதுகொண்டே பேசுவது பார்வையாளர்களைக் கவராது என்றார் எங்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்.

ஆயிஷா புத்தகம் நாடகமாக மாறத் தொடங்கியதும் பற்பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. நாடகத்தின் துவக்கமே வித்தியாசமாக இருந்தது. நாலாபுறமும் பாடம் நடத்தும் ஆசிரியரின் குரல்கள், சந்தேகம் கேட்கும் மாணவர்களை அதட்டியும் கண்டித்தும் ஆசிரியரின் குரல்கள் எனத்தொடங்கியது.   இந்தச் சிறிய காட்சி ஆயிஷாவை அறிமுகப்படுத்தவில்லை, கதை மாந்தர்கள் யாரையும் அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் எந்த மாதிரியான நாடகம் எனப் பார்வையாளர்களைச் சிந்திக்க வைப்பதாக இருந்தது.   இதிலிருந்து  நாடகத்தின் துவக்கமே  பார்வையாளர்களை  எதிர்பார்ப்பை அதிகரிக்க வைப்பதாக இருக்க வேண்டும் என அறிந்தோம்.

ஆயிஷா நாடகத்தில் ஒருபுறம் படுக்கை,  புத்தக அடுக்கு,  மையத்தில் கரும்பலகை,  சிறிய சமையலறை என அமைத்தோம். இந்த அரங்கை வடிவமைக்கும் போது பயிற்சி அளித்த நாடக ஆசிரியர் அரங்கில் வைக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் உயிருண்டு; அவற்றைக் காட்சிகாக மட்டுமே அல்லாமல் பயன்படுத்தவும்  வேண்டும் என்றார்.

உணர்ச்சி வசப்பட்டு உரக்க பேசுவதால் மட்டுமே புரிய வைக்க முடியும் என்பது தவறு. அமைதியாகவும் அழுத்தமாகவும் நமது கருத்துக்களைக் கூறினால் போதுமானது என்றது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது.

நாடகத்தில் ஒருவர் நடிக்கும் போது, மேடையில் அந்தக் காட்சியில் இருக்கும் மற்றவர்கள் சும்மா இருக்கக் கூடாது என்றும், நின்று கொண்டும் நடந்து கொண்டு மட்டுமே நடிக்கக் கூடாது என்பதையும், மேடையை முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதும் நாங்கள் கற்ற சிற்சில நுணுக்கங்கள். மொத்தத்தில் ஆயிஷா எனது வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட ஒரு நெகிழ்வான அனுபவம்.

Rate: 
0
No votes yet
Perspective Type: 
General Perspectives