Towards a just, equitable, humane and sustainable society

சத்தீஷ் - கதை கூறலும் கலந்துரையாடலும்

0
No votes yet
0
Post a comment

கதை சொல்லி சத்தீஷ் அவர்கள் வருகைக்கு முன் ஆசிரியர்களும் சிறுவர்களும் இணைந்து பாடிய வண்ணம் இருந்ததால் பயிற்சியின் ஆரம்பமே மிக அருமையாக தொடங்கியது.

ஆசிரியர்களின் பாடல்களின் இடையில் திடீரென்று தோன்றினார் “கோமாளியா” மாறிய சத்தீஷ். அவரை கண்டவுடன் சிறுவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு ஆரவாரம் செய்து மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

கோமாளியாக வந்திருந்த அனைவரையும் வரவேற்கும் விதமாக சத்தீஷ் “ வந்தனம் ஐயா வந்தனம்” என்ற பாடலுடம் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார். வயது வரம்பற்று கூடியிருந்த ஆசிரியர்களும் சிறுவர்கள் போலவே அவரோடு இணைந்து பாடியது சிறப்பு.

பின்பு அனைவரும் அறிந்த காக்கா வடை சுட்ட கதையை நகைச்சுவை கலந்து,  வசீகரமான அசைவுகளுடன், ஆச்சரியமான திருப்பங்களுடன் வித்தியாசமாக சிலபல மாற்றங்களோடு மிக அழகாக அங்கும் இங்கும் ஓடி குழந்தைகளோடு  இணைந்து அவருக்கே உரிய பாணியில் கதையை ஒரு நாடக வடிவில் கூறியது பாரட்டலுக்கு உரியதாகும். கதையை சொல்லி முடித்தபின், அவர் கதை சொல்லும் விதத்தில் இருக்கும்  சிறப்பு அம்சத்தைப் பற்றி ஆசிரியர்களைக் கூற சொன்னார்.

ரொம்ப நேரம் மெய்மறந்து கதைக் கேட்ட ஆசிரியர்கள், அவர் கதை  சொல்லல் எவ்வாறு வித்தியாசமாக இருந்தது என்பதைக் கூறினர். அதாவது, நல்ல விசயங்களை மட்டும் திரும்ப திரும்ப கதையில் வலியுறுத்துவது மற்றும் நகைச்சுவை , பல உத்திகளின் மூலம் பார்வையாளரை தொடர்ந்து ஈடுபத்துவது, பார்வையாளர் கவனத்தை முழுவதும் கதையுடன் கட்டி வைத்தது போன்றவற்றை கூறினர்.

அடுத்து அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடல் மூலம் பின்வரும் வினாக்களுக்கு விடை காண முடிந்தது.

1.கதை என்றால் என்ன?

  கதை என்பது கதைதான், அதற்கு ஆரம்பமும் இருக்காது, முடிவும் இருக்காது மற்றும் அறநெறி பண்புகள் மையப்படுத்திதான் கதைகளைச் சிறார்களுக்குச் சொல்ல வேண்டும் என்பது அவசியமில்லை.

2.ஏன் மாணவர்களுக்கு கதைக் கூற வேண்டும்?

          மாணவர்களிடம் ஆர்வத்தை  வளர்ப்பதற்கு

    ஞாபக சக்தி திறன் வளர்ப்பதற்கு

    கற்பனை மற்றும் படைப்பாற்றல் திறன் வளர்ப்பதற்கு

               புரிதல் திறன் வளர்ப்பதற்கு

    மொழி திறன் வளர்ப்பதற்கு

    முடிவு எடுக்கும் திறன் வளர்ப்பதற்கு

3.அவர் ஏன் கோமாளி வேடத்தைத் தேர்ந்து எடுத்தார் போன்ற பலவித வினாக்களுக்கு மிக தெளிவாக பதிலளித்தார். பின்

ஆசிரியர் மற்றும் சிறுவர்கள் விரும்பிய புத்தகத்தை எடுக்கச் சொன்னார் சத்தீஷ். அவர் கூறிய சில நொடிகளில் அனைவரும் ஓடிப்போய் ஆளுக்கொரு  புத்தகத்தை எடுத்து அப்புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தனர்.

அனைவரின் கவனமும் புத்தகத்தின் மீதே இருக்கும் தருவாயில் சத்தீஷ் தன் கையைத் தட்டி அனைவரின் கவனத்தையும் அவர்மீது ஈர்த்து மீண்டும் கலந்துரையாடலில் இறங்கினார்.

எடுக்கப்பட்ட புத்தகத்திலிருந்து ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டும் எடுத்து வாசிக்க சொன்னார். பின்பு ஒவ்வொருவராக கூப்பிட்டு அவர்கள் படித்த பகுதியை சந்தோஷமாக, அழுதபடி, குரல் உயர்த்தி, கோபத்துடன் என பல வடிவங்களில் படிக்கச் சொல்லி அதனால் ஏற்படும் மாற்றங்களை கலந்துரையாடல் மூலம் விளக்கினார்.

இவ்வாறு சத்தீஷ் கதை கூறல்  மற்றும் கலந்துரையாடல் பகுதி பாடல், கதை , நடிப்பு, வாசிப்பு, கலகலப்பு மற்றும் கலந்துரையாடல்  என பல பரிணாமங்களில் சென்றது. ஒரு கதை சொல்லியாக  மாற இக்கலந்துரையாடல் சிறந்த தூண்டுதலாக  அமைந்தது என்றே கூறலாம்.

Term:

0
No votes yet
0
Post a comment