Towards a just, equitable, humane and sustainable society

பறை இசையும் பாட்டும்

0
No votes yet
0
Post a comment

அசிம் பிரேம்ஜி ஃபவுண்டேஷன் கடந்து வந்த பாதையின் வரலாற்று அடிச்சுவடுகளைச் சற்றே திரும்பிப் பார்த்தோமேயானால், அதில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும் நிகழ்வு கற்றல் திருவிழா. 2018-ஆம் ஆண்டு திணையளவெணும் சாதித்து விடமாட்டோமா என்ற எண்ணம் மலையளவு எழுந்ததினால் ஒன்றுபட்ட எங்கள் ஆசிரியச் சமூகம், கற்றல் திருவிழாவில் கற்றுக் கொண்ட விஷயங்கள் ஏராளம்! ஏராளம்! அவற்றினை இயன்றவரை வகுப்பறை களத்திலே மாணவர் மத்தியிலே எப்படியாவது கொண்டு சேர்த்து விட வெண்டும் என்ற ஆவல் எங்களை உந்தித் தள்ளியதால் கற்றல் திருவிழாவில் எங்களை மிகவும் ஈர்த்த சில கலைகளில் நாங்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டது. பல்கலைகள் எங்களை ஈர்த்திருந்த போதும் “பறை இசை“ கலை எங்களை மிகவும் கவர்ந்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கேட்ட வினாடியே தாளமிட வைத்த உன்னத இசை அது. அதனை முறையாகத் தெரிந்து கொள்வதன் மூலம் பள்ளிப் பாடங்களை மாணவர்களுக்குப் பறை இசையுடன் கூடிய இனிய அனுபவமாக வழங்க முடியும் என்ற எண்ணம் எங்களுக்கு வந்தது.அடிப்படையில் நான் கர்நாடக சங்கீதம் கற்றறிந்திருந்த போதும், ஒட்டு மொத்த உடல் மொழியையும் வெளிப்படுத்தித் தாளத்துடன் ஆடப்படும் பறை எனக்குள் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தியது. எங்களின் எண்ணத்தை அசிம் பிரேம்ஜி ஃபவுண்டஷன்க்கு வேண்டுகோளாக விடுத்தோம். அதனை ஏற்று புத்தர் கலைக் குழுவின் மூன்று நாள் பறை இசை பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இந்த 3 நாள் முகாம் மே, 10, 11, மற்றும் 12 - ம் தேதிகளில் வில்லியனூர் விவேகானந்தா அரசு மேனிலைப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பயிற்சிப் பட்டறையில் கிட்டத்தட்ட 40 ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்களும் பங்கேற்றனர். புத்தர் கலைக் குழுவினர் நிறுவனரும் பயிற்றுனருமான திரு. மணிமாறன் அவர்களும் அவருடைய மனைவி. திருமதி. மகிழினி மணிமாறன் மற்றும் அவர்களின் இரண்டு மகன்கள் என நால்வரும் எங்கள் அழைப்பினை ஏற்று எங்களோடு வந்து தங்கியிருந்து இந்த 3 நாட்களும் எங்களுக்கு மிகச் சிறந்த பயிற்சியினை அளித்தனர்.

முதல் நாள் பயிற்சிப் பட்டறைக்குச் செல்லும்போது பொதுவாக எங்களுடைய  மனோநிலை ஒரு தொன்மையான கலையைக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற அளவில் மட்டுமே இருந்தது.

ஆனால் பயிற்சியானது திரு. மணிமாறன் அவர்களின் நோக்க உரையோடு தொடங்கியதுமே எங்களுக்குப் புரிய ஆரம்பித்து விட்டது. நாங்கள் கற்கவிருக்கும் பறை என்பது வெறும் இசை மட்டுமல்ல. அது தமிழ் கலாசாரத்தின் அடிப்படை அடையாளங்களுள் ஒன்று. சாதி மத வேறுபாடுகளின்றி அனைத்துத் தமிழர்களும் ஆனந்தமாய் ஒலித்த உயர்ந்த இசைக் கருவி என்று.

“ பறை! பறை! இது வெறும் சப்தமிடும் கருவியன்று. சமதர்ம சமுதாயம் படைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணம் உடைய உன்னத மனிதர்களைக் கொண்ட புண்ணிய பூமியாம் நம் தமிழ் திருநாட்டில், சாதி, மத பேதமற்ற நல்லதொரு சமுதாயம் படைக்கும் சீரிய முயற்சியில் நமக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை உரத்துச் சொல்ல உதித்த பறை! வீரத் தமிழன் காக்கும் பறை! ஆதித் தமிழன் ஒலித்த பறை! அடிமைத் தளையை உடைத்த பறை! கேட்போர் செவிகளுக்கு விருந்தான பறை! காண்போர் கண்களுக்கு மருந்தான பறை! ”

இத்தகைய மேன்மை மிக்கப் பறை இந்த மூன்று நாள் பயிற்சிப் பட்டறையிலே எங்களைக் கிறங்க அடித்தது என்பது மறுக்க முடியாத உண்மை.பறை இசையின் தொன்மையை முதன்மையானதாகப் பறைசாற்றினார் திரு. மணிமாறன் அவர்கள். அவரின் வரிகள் இதோ அப்படியே உங்களுக்காக!

பறை! பறை !! பறை!!! விரையம் என்கிற சொல்கூட விரையம் என்கிற “ஆக்காதே” என்று சொல்வதற்குப் பயன்படும். உலகில் எதுவும் விரையமில்லை என்பதன் வெளிப்பாடுதான் பறை! உலகில் விலங்குகளை மனிதன் வெற்றிக் கொண்டான் என்பதன் அடையாளம் தான் பறை? இது சாவுக்கான பறை அல்ல! வாழ்வுக்கான பறை! எமது பறை முழக்கம் சாமிகள் ஆடுவதற்கு அல்ல! ஆதிக்கம் ஆட்டம் காண்பதற்கு ! ஓங்கி அடிப்பதில் கிழியட்டும் - பறைகள் அல்ல! சாதிகள்!  அவரின் இந்த வரிகள் எங்களுக்குள் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.

பறை இசை - அது வீணை போன்ற மெல்லிசை அல்ல. புல்லாங்குழல் போன்று மனதை வருடும் இசையும் அல்ல. நம் நாடி நரம்புகளை முறுக்கேற்றும் போர்த் தமிழ் இசை. அதுவே தமிழனின் இசை. ஆனால் இந்திய மண்ணில் புரையோடிப் போயிருக்கும் சாதிப் பிரிவினை இந்த ஆதிக் கருவியை சாதிக் கருவியாய் மாற்றிவிட்டது. சாவுக்கான இசையாய் ஒலிக்கவிட்டது. இந்த இழிநிலையை மாற்றி பறை மீது படிந்திருக்கும் கறையினைத் துடைத்து அதைக் கொண்டாட்டத்திற்கான இசைக் கருவியாக மாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எங்களுக்குள் முளைவிட்டது இந்தப் பயிற்சிப் பட்டறையின் போதுதான். ஒரு கலையை கற்றுக் கொள்வதின் மூலம் தீண்டாமை ஒழியும் என்றால் ஏன் அந்தக் கலையைப் பரவலாக்கக் கூடாது என்ற கேள்வி எங்களுக்குள் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது.

பறை இசையினைக் கற்பதினால் மட்டும் சாதிகள் எவ்வாறு ஒழியும் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்வி. நம் சமூக அமைப்பில் புரையோடிப் போயிருக்கும் சாதி முறைகளும் வருண தர்மமும் மக்களில் மட்டுமல்லாது கலைகளிலும் ஏற்ற தாழ்வுகளைப் பார்க்கும் மனப்பான்மையை மக்களிடயே ஏற்படுத்திவிட்டது. கிராமிய கலைகளை உயர்வாகவும், நாட்டுநாட்டுப்புறக் கலைகளைத் தாழ்வாகவும் எண்ண வைத்துவிட்டது. இந்நிலையில் வேற்றுமைகளை வேரறுக்கும் முயற்சியினை, முதலில் கலைகளிருந்து தொடங்குவதே சாலச்சிறந்தது. பறையிசையினையும் அதன் மேன்மைகளையும் மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலம் அது ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளம் என்பதனை விடுத்தது தமிழ் பண்பாட்டின் அடையாளம் என்ற கருத்து மாணவர்களிடையே வலுப்பெறும். இதன் மூலம் அக்கருவியின் பெயரால் வழங்கப்படும் மக்கள் ஒரு குறிப்பிட சாதியினர் என்ற கருத்தாக்கம் மறைந்து அனைவரும் தமிழ் மக்கள் என்ற உணர்வு வலுப்பெறும். மேலும் பறை இசையினைப் போன்று சாதி அடையாளங்களாக இனம் காணப்பட்டுள்ள பல்வேறு நாட்டுப்புறக் கலைகளை மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் மூலமாகவும் பெற்றோர்கள் மூலமாகவும் அறிந்துகொள்ள உந்துகோலாய் இருக்கும். சாதி ஒழிப்பிற்கான ஒரு சிறு நடவடிக்கையாக இது அமையும்.

இந்த 3 நாள் பயிற்சிப் பட்டறையில், பறை இசையை மட்டும் நாங்கள் கற்றுக் கொள்ளவில்லை. சாதியற்ற சமதர்ம  சமுதாயம் படைக்கும் முயற்சியில் ஒரு சிறு அங்கமான எங்களின் பங்கும் இருக்கிறது என்ற எண்ணத்தை எங்கனுக்குள் விதைத்த பெருமை இந்தப் பயிற்சிப் பட்டறைக்கு உண்டு.

நாங்கள் ஓர் இசைக் கருவியைத் தொடவில்லை. ஒரு மானுடத்தின் வரலாற்றைத் தொடுகிறேம் என்ற உணர்வை எங்களுக்குள் ஊட்டியது இந்தப் பயிற்சிப் பட்டறை.

பறையைத் தொடுவது என்பது ஓர் இசைக் கருவியைத் தொடுவது அல்ல. அது ஆதி மனிதனைத் தீட்டு என்று ஒதுக்கி வைக்காமல் அந்த மனிதனைத் தொடுவது. இத்தனை காலமும் சாதியத்தை தன் வலது தோளிலே சுமந்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் அந்த எண்ணத்தை அடியோடு இறக்கி வைத்து விட்டுத்தான் பறையை தன் தோளில் ஏற்றுகிறான் என்ற உண்மையை உணர வைத்ததே இந்தப் பயிற்சிப் பட்டறையின் முத்தாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம்.

செவ்வியல் கலைகளைப் போலவே பறை இசையிலும் தாளங்கள், சதிகள், அடவுகள் உள்ளன என்பதையும், இசை என்பதற்கு இங்கே சொற்கட்டுக்கள் என்ற வார்த்தையைக் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் கற்றுக் கொண்டோம்.   

ஆசிரியர்களை ஆடவைத்த ஆதிக்கலை பறையிசையாட்டம்

-இரா.அனிதா, அதொப, அகரம்.

தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழிசைக்கருவி. 5000 வருடங்களுக்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பிய இலக்கண நூலிலேயே குறிப்பிடப்பட்ட இசைக் கருவி.ஏல்லாத் தோல் இசைக்கருவிகளுக்கும் தாய்க்கருவி அதுவே பறையிசைக்கருவி.

கோடை விடுமுறையில் APF அளித்த பயிற்சிகளில் மூன்று நாட்கள் ஆசிரியர்களை ஆடவைத்து பாடவைத்து ஆட்டுவித்த ஆதிக்கலையான பறையிசையாட்டம் பற்றிய என் அனுபவம் இதோ!

பறையிசையாட்டத்தை உலகெங்கும் ஒலிக்கச்செய்வதும் அதை பரப்புவதுமே தங்களின் கொள்கைப் பாதையாக வகுத்து அண்டமெல்லாம் வலம் வரும் 'புத்தர்” கலைக்குழு கலைக்குடும்பமாகவே வாழ்ந்துக்கொண்டிருக்கிறது.

திரு. மணிமாறன் மகிழினி, திருமதி.மகிழினி மணிமாறன் தம்பதியினரும் அவர்களின் குமாரர்களுமான செல்வன் சமர் செல்வன், இனியன் ஆகியோரும் பறையை நடனமாக, பாடலுக்குத் தாளமாக, தங்கள் கருத்துகளுக்கு உறுதுணையாக… அதை தங்களின் இரத்த ஒட்டமாகவே கருதுகின்றனர்.வாழ்வுக்காகவும் கொண்டாட்டத்திற்காகவும் எழுச்சிக்காகவும், சமத்துவத்திற்காகவும் இசைத்து ஆடுவதே பறையின் இலக்கணமாக திரு.மணிமாறன் மகிழினி குறிப்பிடுகிறார்.

பறை இசைக் கருவி:

சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வரை தள்ளி இருப்பவர்களைக் கூட தன்வசப்படுத்தி கேட்கவைக்கக் கூடிய திறனை தன்னகத்தே கொண்ட இசைழுழக்கம் நிறைந்த கருவி என கருவியின் பலங்களை ஆங்காங்கு பயிற்சியில் எடுத்துறைத்தார்.

வெற்றியைப் பறைசாற்ற திருமண நிகழ்வுகளில் போர்காலங்களில் என்று கிட்டத்தட்ட 35 வகை நிகழ்வுகளுக்கும் பயன்பட்டு வந்த வரும் அபூர்வமான ஒர் இசைக்கருவி பறை என்று பறையின் பெருமையை அடுக்கிக் கொண்டே போகலாம். அடிக்குச்சி, சிண்டுகுச்சி அடிக்க பறை ஒலிக்கிறது.

பயிற்சியில் பறை:

தாய் தந்தை குரு பறை

தக தக திம்

தகு கூ தா

தகு கூ த க திம்

சஞ் சஞ் நகுடி – நக்கா

என்று பதினோறு பறை தாளங்களை அறிமுகப்படுத்தி நாளொன்றுக்கு ஐந்து தாளங்கள் வீதம் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.; பயிற்சியில் சுமார் 31 ஆசிரியர்களும் 10 குழந்தைகளும் பாடி ஆடி பறையோடு கலந்தனர்.குழந்தைகள் ஆசிரியர்களாகவும் ஆசிரியர்கள் குழந்தைகளாகவும் அவ்வப்போது மாறியத் தருணங்கள் மறக்க முடியாதது.

பாடல் பயிற்சி:

திருமதி. மகிழினி மணிமாறன் அவர்கள் அளித்த பாட்டுப்பயிற்சி அவர்களுடன் நாங்கள் பாடிய நிமிடங்கள் இவையணைத்தும் நெஞ்சில் நிறைந்த நிகழ்வுகள்.

பாடலுடன் வகுப்பில் குழந்தைகளை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கு இது போன்ற பாடல்கள்  கிடைக்கப்டிபற்றது பெரும்வசதியே. கண க்குப்பாடல்இ சமத்துவப்பாடல்,அரசுப்பள்ளி மாணவர்கள் பற்றிய பாடல் … என பாடல் வரிகளும் பாடல்களும் எங்களுக்காகவே எழுதப்பட்டது.

காட்டுக்குள்ளே பள்ளிக்கூடம் நடக்குது - அங்கே

கரடி ஆனை சிங்கமெல்லாம் படிக்குது   (2)

சிங்கந்தான் ஹெட்மாஸ்டெரு சிறுத்ததான் டீச்சரு

ஒட்டகம் பி டி மாஸ்டரு பாம்பு க்ளாஸு  லீடரு

காட்டுக்குள்ளே பள்ளிக்கூடம் நடக்குது - அங்கே

கரடி ஆனை சிங்கமெல்லாம் படிக்குது   (2)

மேசமீது குந்திகிட்டு குரங்கு தாளம்போடுது

மேட மேல ஏறிகிட்டு குத்தாட்டம் போடுது

நாங்க   அப்டி செய்வதில்ல

நாங்க யாரும் குரங்கு இல்ல (2)

காட்டுக்குள்ளே பள்ளிக்கூடம் நடக்குது - அங்கே

கரடி ஆனை சிங்கமெல்லாம் படிக்குது   (2)

காடெருமை வகுப்பரையில் காட்டுகத்து கத்துது

பள்ளிக்கூடம் வராமலே பார்க்கு பீச்சு சுத்துது

நாங்க   அப்டி செய்வதில்ல

நாங்க யாரும் எருமை இல்ல (2)

காட்டுக்குள்ளே பள்ளிக்கூடம் நடக்குது - அங்கே

கரடி ஆனை சிங்கமெல்லாம் படிக்குது   (2)

 

சுட்டிப்பாப்பா சுட்டிப்பா

குட்டிக்கதை கேளு

எட்டிப்பரிச்ச மாம்பழம்

எண்ணிப்பாத்தேன் நாலு

அனில் கடிச்ச மாம்பழம்

சுவையா இருக்கும் முன்னு

வகுப்பு தோழன் சேஷ்வரு

வாங்கிக் கிட்டான் ஒண்ணு

மிச்சமுள்ளது ஒண்ணு

அத என்ன பண்ணுவேன் நானு

அஞ்சு பேருக்குக் குடுக்கனும்

அதையும் சமமா கொடுக்கனும்

கொட்ட தனியா தோலு தனியா

பிரிச்சுபுட்டேன் பாரு

அது எண்ணோட சேர்ந்து ஆறு

எல்லோரும் சமமா

பங்குபோட்டோம் கேளு

இப்படி வகுப்பறைக்கு ஏற்ற பாடல்கள் கற்றுக்கொண்டோம்.  பாடல்களும் பாடல்களைக் ஆசிரியர்கள் குழந்தைகளோடு இணைந்து கற்றுக்கொண்ட விதமும் அருமையாக இருந்தது. பள்ளியில் எங்கள் வகுப்புக் குழந்தைகள்  பாடுவது இன்னும் அருமை.

ஆடலும் பாடலும்:

ஆடலும் பாடலும் கலந்து பாடங்களைப் உள்வாங்கும் போது குழந்தைகளின் மூளையும் உடலும் புத்துணர்வு அடைந்து கற்றல் செம்மைப்படும் என்பது நிதர்சனம்.

வகுப்பறைக் கற்றலை உயிரோட்டமாக்க ஒலிக்கு உரிய இடமுண்டு. அவ்வொலியை ஒங்கி ஒலிக்கசெய்யும் பறையை இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி

கூட்டுறவை வளர்த்தெடுக்கவும் வரலாற்றை எடுத்தியம்பவும் ஆசிரியர்கள் பழகிக் கொண்டனர். நம் கலையை காப்பாற்றிய பங்கு நமக்கும் கிட்டும்.

உழைக்கும் மக்களின் வாழ்வியலோடு உறவாடும் தோழன் பறை இசைப்போரையும் இரசிப்போரையும் ஈடில்லா எண்ணிக்கை கொண்டது பறை கைத்தட்டத் தெரிந்த அனைவரும் எளிதாக கற்றுக்கொண்ணக்கூடிய அரியதொரு இசை பறை!

ஒங்கிக் கொட்டுவோம் பறையை !

ஒழித்துக்காட்டுவோம் சாதியை !!

Term:

0
No votes yet
0
Post a comment