Towards a just, equitable, humane and sustainable society

ஒரு கதை சொல்லவா?

0
No votes yet
0
Post a comment

கருவறையிலிருந்தே  இவ்வுலகத்தில் வாழக் கற்றுக் கொள்ளும் வழிகளை, கதைகளாய்  வாழும் கலையை தாயிடமிருந்து கற்கின்றோம். கதைகளின் வாயிலாக நாம் கேட்டதைப் பிறகு கண்களால் பார்த்து தாய், தந்தை உறவுகளின்  இனிய மொழிகளைக் கதைகளாய் உள்வாங்கி மொழியறிவைப் பெறுகிறோம். இதை  இதிகாசங்ளும் நமக்கு விளக்குகின்றன.

கதைகள் என்பது நம்மில் ஊறிப்போன ஒன்றாகும் என்பதில் துளியும் ஐயமில்லை. கதை கேட்க விரும்பாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். கதைகளின் மூலம் குழந்தைகளின் கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் பொழுது குழந்தைகளால் மகிழ்வுடன், எளிமையாகவும் இனிமையாகவும் கற்கமுடிகிறது. குழந்தைகளின் திறன் மேம்பட  புதிய முறையில் வடிவமைத்த செயல்பாடுகள் மொழியில் மாற்றத்தை  ஏற்படுத்துயிருக்கின்றது என்பது உண்மை.

அதுபோல, கதை சொல்வது என்பது மேம்போக்காக உணர்வில்லாமல் சொல்லும் பொழுத சுவாரசியமாக இருக்காது என்பதுடன் கதை கேட்கும் ஆர்வத்தை சிதறடிக்கும்… கதை கூறுபவர்க்கென்று சிலபல சிறப்புகள் வேண்டும்  என்பதை கற்றல் திருவிழாவின் பொழுது தான் நான் உணர்ந்து கொண்டேன். ஆகவே அத்தகைய ஒருவரை வரவழைத்து முதலில் குழந்தைகளை ஈடுபடுத்தினேன்.  (உ.ம) திரு. பூபதி ஐயா அவர்கள் கேட்டதும் ஒப்புக்கொண்டார்.  பள்ளிக்கு வந்து குழந்தைகளைப் பல கதைகளில் மகிழ்வித்தது மட்டுமின்றி கற்பித்தலில் எங்களுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தித்் தந்தார்.

அவர் எளிய மேக்கப் போட்டு குழந்தையோடு குழந்தையானார். சார்லி சாப்ளின் போல், ஜோக்கர் போல் நடித்துக் கதை சொல்வதை, குழந்தைகள் ரசித்ததுடன், அவர் கூறிய அத்தனைச் செய்திகளும் அவர்களின் மனதில் பதிந்தது. அவர் கூறிய கதைகளைக் குழந்தைகளின் பெற்றோர்கள் கேள்விப்பட்டதும் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.

கதை கூறும் தன்மைகள்

கதை கூறுபவர் எங்கு? யாருக்கு? கதை சொல்லப் போகிறோம் என்பதில் தெளிவு வேண்டும்.

எந்த வயதினருக்குச் சொல்லப் போகிறோமோ அதற்கு ஏற்றாற்போல் கதைக்கரு மற்றும் கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

கேட்போரின் சுவையறிந்து அதற்கு ஏற்றாற்போல் சொல்லுதல் வேண்டும்.

கதைகளை நேர்த்தியாகச் சொல்லுதல் ,உணர்வு பூர்வமாக நகைச்சுவையுடன் கூறுதல்.

கேட்பவர்கள் அனைவரையும் நடுநடுவே கதாபாத்திரமாக மாற்றுதல்.

கதையின் முடிவைப் பற்றிக் கவலைப்படாது சூழ்நிலைக்கு ஏற்றாற்போல்் ஏற்றுக்கொள்ளுதல்.

கதையின் போக்கை கதை கேட்பவர்களைச் சொல்லச் செய்தல்

அறிந்த தெரிந்த நிகழ்வுகளை அதிகம் கதைக் களத்திற்குப் பயன்படுத்துதல்.

இவற்றை உணர்ந்த பின் இப்படி ஒரு கதை  வேண்டும் என்று  போண்டா பள்ளியில் போண்டாட்டம் கதையைக் கூற, குழந்தைகள் மிக்க ஆர்வமும்; ஈடுபாடும் கொண்டனர் ,அதில் வரும் வார்த்தைகளை உச்சரிக்கவும் எழுதவும், கதையைத் திரும்பக் கற்கவும் ,நடிக்கவும் செய்தனர். ஒரு கதையின் மூலம் எத்தனை திறன்களை வளர்க்க முடிந்தது என்பதை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.

இதைத் தொடர்ந்து  கற்றல் உருவாக ஈசா பூச்சா கதையைத் தேர்வு செய்தோம்.

காரணங்கள் :

  1. பெயர் புதுமையாக கவரும் வண்ணம் இருந்தது.
  2. படங்கள் வண்ணப் படங்களாகவும் கவரும் வண்ணமும் அமைந்தது.
  3. குழந்தைகளுக்குத் தெரிந்த அறிந்த சூழல்.
  4. வார்த்தைகள் எளிமையாக மீண்டும் மீண்டும் இடம்பெற்றதும் குழந்தைகளுக்கு எழுத்து வடிவமும் மனதில் பதியும்.
  5. முடிவு சொல்லப்படவில்லை. அதனால் குழந்தைகளின் படைப்பாற்றலுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

குழந்தைகளுக்கு முதலில் கதையைக் கூறி குழந்தைகள் அனைவரும் கதையை ஆர்வத்துடன் முழுமையாகக் கேட்டனர். இடையிடையே கேட்ட அத்துணை கேள்விகளுக்கும் மிக அழகாக பதில் கூறினர். அனைவரையும் ஈடுபடச் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பின்னர் கதையைச் சில மாணவர்கள் முன்வந்து முழுமையாகக் கூறினர்.

குழந்தைகள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கென செயல்பாடுகளைச் சிறுதாளில் எழுதி மடித்துப் குழந்தைகளிடம் தந்தோம்.

  1. பேசாமல், கதை முழுவதையும் செய்கை மூலம் நடித்துக் காண்பித்தல்.
  2. கதையை நாடகமாக நடித்தல்
  3. கதை நிகழ்வுகளைப் படமாக வரைந்து படக்கதை மூலம் விளக்குதல்
  4. நடுவே காணாமல் போன 'ஈ” வர ஏன் தாமதம்? அங்கு என்ன நடந்திருக்கும் ? என்று கூறுதல்
  5. பூனையை ஈ துரத்தி   சென்றபின் கதையின் முடிவு என்னவாக மாறியிருக்கும்?
  6. கதை மாந்தர்களினால்   யாரைப்பிடிக்கிறது? ஏன்? யாரைப் பிடிக்கவில்லை? ஏன்?

ஒவ்வொரு குழுவுடனும் ஆசிரியர்கள் சென்று குழந்தைகளை வழிநடத்தினர்.

விதிமுறைகள்

  • அனைவரும் ஈடுபட வேண்டும்
  • கண்டிப்பாக ஒவ்வொருவரும் தத்தம் கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டும்
  • 20 நிமிடங்களுக்குப் பின் ஒவ்வொரு குழுவும் தங்கள் குழுச் செயல்பாடுகளை விளக்க வேண்டும்
  • ஆசிரியரின் வழிகாட்டுதல் மட்டும் தர வேண்டுமே தவிர தன் கருத்தைத் திணிக்கக் கூடாது.
  • குழந்தைகள் முழு சுதந்திரத்துடன் ஒன்றாகச் செயல்பட தம் கருத்தைப் பதிவு செய்ய வாய்ப்புத்  தரப்பட வேண்டும்.

முதல் குழு மிக அழகாக செய்கை மூலம் நடித்துக் காண்பித்தனர். முகமூடிகள் தயாரிக்கப்பட்டு முகமூடிகளுடன் இறக்கை போன்றவற்றை செய்து அழகாக பாத்திரமாகவே மாறி மிகவும் இயல்பாக நடித்தனர்.  குறுகிய காலத்தில் மேக்கப்பிற்கான  பொருட்களைத் தேடி  முழுமையாக நடித்துக் காண்பித்தனர் இது எந்த அளவு குழந்தைகள் கதையைப் புரிந்து கொண்டனர் என்பதை உணர்த்தியதுடன் அதில் அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியது.

இரண்டாவதாக கதையை நாடகமாக நடித்துக் காண்பித்தனர். மிக எளிமையாக தங்கள் சொந்த நடையில் வார்த்தைகளைப் பேசுவது சிறப்பாக அமைந்தது. குறுகிய காலத்தில் உரிய மேக்கப் போட்டு நடித்தது வியப்பாக இருந்தது (இந்தத் தாக்கம் முந்தைய நாள் கதை கூறியவரின் மேக்கப் என்பது  புரிந்தது)

மூன்றாவது குழு மிக அழகாக அதை படக்கதை புத்தகமாக மாற்றியிருந்தனர்.   பூனையின் வயிறு சப்பையாக இருப்பது; குண்டாக இருப்பது; ஈ இல்லையை இழுத்து வருவது என அனைத்தையும் கருத்தில் கொண்டு மிக அழகாக படக்கதைப் புத்தகம் உருவாக்கித் தந்தனர் அதைப் பார்த்த பொழுது இந்தக் குழந்தைகளால் இதைச்  செய்ய முடியுமா? என்று மிகவும்  ஆச்சரியமாக இருந்தது.

  • மாணவர்களிடம் கதையினை முன் கூட்டியே சொல்லியதனால், அவர்களுக்கு எளிமையாக கதையின் அமைப்புப் புரிந்து விட்டது.
  • கதையோ நடிப்போ அதற்குரிய தன்மையுடன் குழந்தைகளை நடித்தது அவர்களுக்கு அதில் உள்ள ஈடுபாடு விளங்கியது.
  • கதையில் வரும் வார்த்தைகள் திரும்பத் திரும்ப வந்ததால்  எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது.
  • மாணவர்கள் இதனை நாடகமாக நடிக்க ஆசைப்படுவதற்கு காரணம் இதிலுள்ள கதாபாத்திரங்களே. ,மாணவர்கள் தினமும் பார்க்கும் விலங்குகளாக இருந்தால் அவற்றின் கதாபாத்திரங்களை  உணர்ந்து அதற்கேற்றாற்போல்  வசனங்களை அவர்களாகவே உருவாக்கி பேசி நடிக்க முடிந்தது.
  • மாணவர்களே கேரக்டர்களை பகிர்ந்து கொண்டு அதற்கேற்றாற்போல்  மேக்கப் போட்டுக் கொண்டார்கள். மேக்கப்புக்குத் தேவையான பொருட்களை எளிமையாக இருந்தது. பொருட்களை அவர்களாகவே தேடித்தேடி எடுத்துக் கொண்டார்கள். மேடையில் நடிக்கும்பொழுது எந்தவிதமாக கூச்சமும்  இல்லாமல் நடித்தார்கள்.

ஆசிரியர்கள் பிரதிபலிப்பு

  1. மாணவர்கள் கதையை மிகச் சரியாக கூறினார்கள், இதுவே முதல் வெற்றி.
  2. ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு கதாப்பாத்திரம் தரும்பொழுது அவர்களால் செய்யமுடிந்தது.
  3. கதாப்பாத்திரங்களை மாணவர்கள் உள்வாங்கிக் கொண்டதால், அவர்களே முகமூடி செய்வதிலும், வசனங்கள் பேசுவதிலும் ஆர்வம் காட்டினர்.
  4. மாணவர்கள் கதாப்பாத்திரத்தின் நன்மை தீமைகளை அவர்களே ஆராய்ந்து அறிந்தனர்.

குழுக்களின் படைப்புகள்

குழு  நான்கு - இலையைத் தேடிச் சென்ற ஈ

ஈச்சா இலையைத் தேடி வெகுதூரம் சென்றது. அப்போது செல்லும் வழியில் ஒரு பலாமரம் இருப்பதைக் கண்டது. அப்பலாமரத்தில் ஒரு இலையைப் பறிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. அதனால் பறிக்க முடியவில்லை. மரத்தின் கீழே ஒரு குச்சியினைக் கண்டது.   அந்தக்குச்சியின் அருகே சென்று தன் கதையைக் கூறி உதவி கேட்டது. குச்சியானது உன்னால் முடிந்தால் என்னை எடுத்து அடித்துக்கொள் என்றவுடன், குச்சியை தூக்க முயன்றது. ஈச்சாவால் குச்சியைத் தூக்கமுடியவில்லை. சரி நாமே மறுபடியும் முயற்சி செய்யலாம் என்று  தட்டித்தட்டிப் பார்த்தது. இலை கீழே விழவில்லை. அதனைப் பார்த்துக்கொண்டிருந்த பலாமரம். ஈச்சாவிடம் என்ன வெகுநேரமாக ஏதோ செய்து கொண்டிருக்கிறாயே... என்ன செய்கிறாய் எனக் கேட்டது. தன்கதையை ஈச்சா பலாமரத்திடம் கூறியது. இதை நீ என்னிடம் முதலிலேயே கூறியிருக்கலாம் என்று சொல்லி தன் இலை ஒன்றினை உதிர வைத்தது. கீழே விழுந்த இலையை ஆவலுடன் தூக்க முயன்ற ஈச்சா, தூக்கமுடியாமல் அவதிப்பட்டது. சோகத்துடன் அங்கேயே அமர்ந்தது. இதனைப் பார்த்த காகம் ஏன் சோகமாக உட்கார்ந்திருக்கிறாய் என ஈச்சாவிடம் கேட்பது. ஈச்சா தன் கதையைக் கூறி இந்த இலையை என்னால் தூக்கமுடியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. என் நண்பன் அங்கே பசியுடன் இருப்பன் என்றது. சரி இதில் உனக்கு நூல் ஒன்றினை கட்டித்தூக்கு என்று கூறி நூலினை எடுத்துவந்து,  இலையில் கட்டிக் கொடுத்தது. ஈச்சா அதனை மெல்ல மெல்ல இழுத்துச் சென்றது. அங்கே செல்லும் வழியில் ஒரு கல்லில் இலை மாட்டிக்கொண்டது.  இலையை இழுக்க முடியாமல் ஈச்சா சிரமப்பட்டது. அதனைக் கண்ட எறும்பு ஒன்று என்ன செய்கிறாய் என்றது. ஈச்ச தன் கதையைக் கூற எறும்பு சரி நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று  இலையின் அடியில் சென்று அதனைத் தூக்கி விட்டது. பிறகு இலையை இழுத்துக்கொண்டு மெல்லமெல்ல சென்றது. ஈச்சா உதவி செய்த எல்லோருக்கும் நன்றி கூறியது. எதிரே பூச்சா வேகமாக ஓடி  வருவதனை ஈச்சா கண்டது.

குழு ஐந்து

ஈச்சா இலையை எடுக்கச் சென்றது என்று தொடங்கிய கதையை மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கற்பனைக்குத் தோன்றியதைக் கூறிக்கொண்டே இருந்தார்கள். அதில் ஒரு மாணவன் காகம் நூலைத் தந்த கதையைக் கூறியது சிறப்பாக இருந்தது. ஆசிரியர் ஈச்சாவிற்கு பலர் உதவி செய்வதுபோல் கதையை ஆரம்பிக்கலாம் என்று கூறியதும் மாணவர்கள் குச்சி, காகம், எறும்பு என்று அவர்கள் எவ்வாறு உதவி செய்தார்கள் என்பதனை சிறுசிறு வாக்கியமாகக் கூறினார். பின் அதனைத் தொகுத்து வழங்கினார்.

Term:

0
No votes yet
0
Post a comment