Towards a just, equitable, humane and sustainable society

தமிழகத்தின் மூத்த கல்வியாளர் எஸ். எஸ் இராஜகோபால் அவர்களுடன் ஒரு உரையாடல்

தமிழகத்தின் மூத்த கல்வியாளர் எஸ். எஸ் இராஜகோபால் அவர்களுடன்  ஒரு  உரையாடல் – ஆசிரியை உமா

இளம் வயதில் கல்விப்பணியைத் துவங்கியவர், இன்றும் அரசுப்பள்ளிகளைக் காப்பாற்ற அயராது உழைத்து வருகிறார்.  தேசிய தொழிற்கல்வியின் கல்விக்குழு உறுப்பினர். பல மாநிலங்களின் கல்விக்குழு ஆலோசகர், கல்வியாளர், சிந்தனையாளர், கல்வி செயல்பாட்டாளர்…என அறியப்படுபவர் எஸ். எஸ். இராஜகோபால்.

1.எந்த வயதில் தலைமை ஆசிரியர் ஆனீர்கள்?

1950 இல் அந்தியூர் மாவட்டக் கழக உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகச் சேர்ந்தேன். அக்காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளும், உதவி பெறும் தனியார் பள்ளிகளும் தான் கல்வி அளிக்கும் பொறுப்பினை ஏற்றிருந்தனர். அரசின் பங்கு மிக மிகக் குறைவு.

அரசு, ஆசிரியர் கல்வி நிறுவனங்களோடு இணைந்த மாதிரிப் பள்ளிகள் மட்டுமே கல்வித் துறையின் நேரடிப் பொறுப்பில் இருந்தன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மான்யம் அளிப்பதோடு சரி.

முதல் பதினாறு ஆண்டுகள்  கழகப் பள்ளிகளிலேயே பணி புரிந்தேன். அதில் படித்த மாணவர்களுள் ஏறக்குறைய அனைவரும் முதல் தலைமுறை மாணவர்கள். ஆங்கிலப் பாடத்திட்டம் கடுமையாக இருக்கும். ஆனாலும் கல்வி ஒன்றே தங்கள் வாழ்வில் ஒளியூட்டும் என்று உறுதியாக  நம்பிக் கற்று வெற்றி பெற்றனர். நான் எனது 25ஆம் வயதிலேயே தலைமையாசிரியர் ஆனேன்.

2. ஒரு தலைமையாசிரியராக உங்களுக்கான அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தினீர்கள்?

ஒரு முறை எனது பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமாயிடுச்சு. ஆனா, வாத்தியாருங்க பத்தல. அந்த ஊரில் டிகிரி படிச்சுட்டு ஒருத்தர் விவசாயம் செய்வது எனக்குத் தெரியும். அவரக் கூப்பிட்டு, ‘ஏம்ப்பா பள்ளிக்கூடத்துக்குப் பிள்ளைங்களுக்குச் சொல்லித் தர வாத்தியார் இல்ல, நீங்க வேலைக்கு வந்துடுங்க’ என்றேன். அதுக்கு அவரு, ‘ஏனுங்கய்யா, பருத்தி போட்டு லட்ச ரூபா சம்பாதிக்கிறேன், இது என்ன 100 ரூபா உத்யோகம்… அப்படீன்னா. நான் சொன்னேன்…. இது சம்பளத்துக்காக இல்லீங்க, சமுதாயத்துக்காக வாங்க…’ அப்படின்னு சொன்னேன், அவரும் சரின்னுட்டார், நானே அப்பாயின்ட்மென்ட் போட்டுட்டேன்.

ஃபைல் எழுதி வச்சிட்டேன், அதாவது பள்ளி திறந்து செயல்படும் நாளில் மாணவனுக்கு கல்வி தர ஆசிரியர் இல்லாத சூழல் என்பது மிகப் பெரிய பாவமும் குற்றமும் (sin and crime), ஆகவே தலைமை ஆசிரியராகிய நான் எனது பள்ளி மாணவருக்குப் புதிய ஆசிரியரை நியமிக்கிறேன்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுட்டேன், ஆனா கலெக்டர் இதனால ரொம்ப கோபமாய்ட்டார், ஏன்னா அவரு தான் பொறுப்பு, என்னைய ஒரு வார்த்தைக் கேட்காம செய்துட்டீங்களேன்னு கோபப்பட்டாரு. அதோடு இல்லாம, ஊரில் காலையில் 7:30 மணிக்கெல்லாம் கூப்பிட்டு அனுப்பிட்டாரு, அந்த ஹெட்மாஸ்ட்ர வரச் சொல்லுங்கன்னு….

நானும் போய்ட்டேன், உட்காரச் சொன்னார். …உட்கார்ந்தேன்..ரொம்ப சத்தம் போட்டார். என்னயக் கேட்காம எப்படி நீங்க வாத்யார நியமிக்கலாம்? அதோட sin and crime வேற எழுதி வச்சுருக்கீங்க என்று கலெக்டர் கேட்க , நான் உங்களப் பத்தி எழுதலயே, கல்வித் துறைக்குத் தானே எழுதினேன்னு தைரியமா சொன்னேன், அப்புறமும், நான் என்ன பண்றேன்னு பாருங்க, உங்கள வேற ஊருக்கு மாத்தப் போறேன்னார்.

சரி, அதனாலென்ன எங்க போட்டாலும் இது அரசுப்பணி, நான் போய் வேலை செய்வேன்னு சொல்லிட்டு வந்துட்டேன், வெளியில நான் நடந்து வரும்போது என்னைப் பார்த்த தோட்டக்காரர், “பெரியய்யா (கலெக்ட்டரை அப்படியே அழைக்கும் பழக்கம் அன்று இருந்தது) இந்த வாத்யாரு ஹெச்செம்மா  நம்ம ஊருக்கு வந்த பிறகுதான் பிள்ளைங்க நல்லாப் படிக்கிறாங்க, ரொம்ப நல்லவருன்னு அவர் கிட்ட என்னப் பத்தி சொல்ல, அந்த சமயத்தில் ஊர் பிரஸிடென்ட் நம்ம ஊர் வாத்தியார், நிறைய உதவி பண்றாங்க எனவும் கூற, கலெக்டர் அப்புறம் புரிஞ்சுகிட்டு என்னய மாற்றம் எதுவும் செய்யலங்க…” என்றார்.

3. உங்கள் பணிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பாடத்திட்டம் பற்றிய உங்கள் நினைவுகளைப் பகிருங்கள்

“நியூ மேத், நியூ சைன்ஸ் ஆகியவை கொண்டு வரப்பட்டன, அவை முந்தைய பாடத்திட்டங்களிலிருந்து முழுமையாக மாற்றப்பட்டது”. அது, ஸ்புட்னிக்கிற்குப் பின் அமெரிக்கக் கல்வித் திட்டத்தில் உருவாக்கப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கியதாம்.

4. தமிழக அரசின் புதிய பாடத்திட்டம் பள்ளிக் குழந்தைகளை எந்த அளவிற்கு அரசுப் பள்ளிகளை நோக்கி ஈர்க்கும்?

பாடத்திட்டம் எதுவும் ஒரு புரட்சியை உருவாக்காது. அரசின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளினின்று தான் கல்விக் கொள்கை பிறக்கும். அவற்றில் மாற்றம் இல்லையென்றால் எப்பாடத்திட்டமும் புரட்சியை உருவாக்காது. நாட்டு நலனை முன்வைக்காது தனி நபர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்களை உருவாக்கப்பட்டுள்ளன. எத்தகைய இந்தியா, எத்தகைய தமிழ்நாடு என்பவை வரையறுக்கப்படாது நீட் போன்றவற்றை மையப்படுத்தியுள்ளது. தொடக்கக்கல்வி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றது. நன்மாணிக்கங்கள் பலவும் எட்டாம் வகுப்பு வருமுன்னே மறைந்து விடுகின்றனர்.

வகுப்பறை தான் முக்கியம். உன்னத பாடத்திட்டமும் குப்பையாகலாம். மென்னையான பாடத் திட்டம் உன்னதத்தை எட்ட வைக்க நல்லாசிரியரால் முடியும்.

பாடத்திட்ட மாற்றத்தோடு வகுப்பறையை மேம்படுத்த வேண்டும். அது ஆணைகளால் முடியாது. ஆசிரியரின் அடிப்படை அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.

5. QR CODE…..முறை பற்றித் தங்கள் கருத்து?

QR CODE நவீன கணினி உத்திகள், கல்வி தனிநபர் வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. தாமதமாகக் கற்கவும், மதிப்பீட்டுக் கொள்ளவும் உதவும். கல்வி மறுக்கப்பட்ட எளியவர்க்கு ஆசிரியரே உற்ற துணை. சிறப்பான பயிற்சியும், அறிவும் தேவைப்படும் ஒரு உத்தி.

6. தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் எந்தக் காலகட்டத்தில் பெருகியது?

இன்று புற்றீசல் போலப் பரவியிருக்கும் தனியார் பள்ளிகள், தமிழகத்தில் 1978 ஆம் ஆண்டில் தான் கட்டணப் பள்ளிகளாகத் தொடங்கப்பட்டன. அதே போல, சரியாக அதே நேரத்தில் தான், பொதுப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிறைவு செய்யக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கியமான பாடங்களைச் சொல்லித் தர ஆசிரியர்கள் இல்லாமலேயே மேல் நிலைத் தேர்வை எதிர்கொள்ளும் அவல நிலைக்கு, எளிய குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையிலும் அந்த எளிய மாணவர்கள் பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேறினார்கள் என்றால் அவர்களது கல்வித் தரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

7. இந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் 800 பள்ளிகள் மூடுவதாக வந்துள்ள செய்திகள் பற்றி உங்கள் கருத்தும், ஆசிரியர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதும் என்ன?

1991 யில் உலகவங்கி, அனைவருக்கும் கல்வி 2000 பிரகடனம் வெளியிட அனைத்து நாட்டுத் தலைவர்களின் கூட்டத்தை ஜோம்டியான் நகரின் கூட்டியது. கட்டாயக் கல்வி என்பது தொடக்கக்கல்வி என்று சுருக்கிவிட்டது. இன்னமும் அவ்விலக்கை எட்டாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பெயரளவிற்கு நிதி உதவி என்று சொல்லிவிட்டு கல்வி பற்றிய முடிவுகள் அனைத்தையும் அதுவே மேற்கொண்டது. டிபிஈபி, எஸ்.எஸ்.ஏ போன்ற எல்லாத் திட்டங்களும் உலக வங்கியால் திணிக்கப்பட்டது. கல்வி, மருத்துவம் தனியார் பொறுப்பில் விட வேண்டுமென்றும் அரசின் பங்கு பெயரளவில் இருந்தால் போதும் என்ற உலக வங்கியின் பரிந்துரையை  ஏற்று தனியார் பள்ளிகளை வெகுவாக வளர்த்தது. இதன் விளைவு இன்று அரசுப் பள்ளிகள் மூடல், ஆசிரியர்கள் ஒன்றும் செய்வதற்கில்லை. ஒரு பள்ளி இருக்கும்பொழுது மற்றொரு பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்ற விதி காற்றில் பறக்கவிடப்பட்டது. அரசின் அறிவிக்கப்படாத கொள்கையை எதிர்த்து நிற்கமுடியுமா?

8. கல்வியாளர்கள் என்று யாரைக் குறிப்பிட வேண்டும். ஆசிரியர்களும் அவர்களும் ஒன்றா? ஆசிரியர்களுக்குத் தெளிவுபடுத்த இதை விளக்குங்களேன்.

தமக்கென்று ஒரு கல்விக் கொள்கையைத் தாமாகவே வகுத்து அதனைச் செயல்படுத்துவரே கல்வியாளர்கள். ஆசிரியர்க்குக் கல்விக் கொள்கை தேவையில்லை. வெறும் பாடம் கற்பிப்பவர். ஒரு கல்விக்கூட நிர்வாகியோ, பாடநூல் எழுதுபவரோ கல்வியாளர் ஆகமாட்டார்.

(மேன்மை இதழில் இருந்து எடுக்கப்பட்ட சிறுபகுதி. நன்றி மேன்மை)

Rate: 
0
No votes yet
Perspective Type: 
General Perspectives