Towards a just, equitable, humane and sustainable society

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்

பெரியாரின் வாழ்க்கைப் புத்தகத்தின் பெரும்பாலான ஏடுகள் போராட்டங்களும் எதிர்ப்புகளும் நிறைந்தவையாகவே இருக்கின்றன.  முரண்பாடுகளையே, முக்தி பெறச் செய்யும் வழியென்று நினைத்திருந்த  முட்டாள் சமூகத்தினர் புத்தி பெறப் போராடிய மாமனிதன் தந்தை பெரியார். பறையரும் பாமரரும் பாராள வேண்டும் என்ற அவருடைய உயரிய எண்ணத்திற்கு உரமிட்டவர்கள் வெகு சிலரே.  அவரை விமர்சித்தவர்கள்தான் ஏராளம்.  இப்படிப்பட்ட சூழலில், தன்னலம் கருதாத் தியாக உள்ளத்தின் திரு உருவாக விளங்கியவரின் பெயரை ஒரு பள்ளித் தாங்கி நிற்கிறது என்றால் அதன் பின்புலம் யாராக இருக்கக்கூடும்?  பெரியாரைப் போலவே அந்தப் பள்ளியும் அவர் பெயரைச் சூடுவதற்குப் பல போராட்டங்களைச் சந்தித்து இருக்குமோ என்ற எண்ணம் என் உள்ளத்தினூள் ஓடிக்கொண்டிருந்தது.  அரியாங்குப்பம் தந்தை பெரியார் மேனிலைப் பள்ளிக்கு அப்பெயர் வரக் காரணமாக இருந்தவர்கள் யார்?  அதன் வரலாறு என்ன என்பதைத் தேடி என் பயணம் தொடங்கியது.  இம்முறையும் எனக்கு வழிகாட்டியவர் என் மதிப்பிற்குரிய ஆசான் திரு. இளங்கோ தாமோதரன் அவர்கள்தான்.  

யாரிடம் கேட்டால் இதுபற்றிய தகவல்களைப் பெறமுடியும் என்று கேட்க அவரை தொலைபேசியில் நான் தொடர்புக் கொண்டபோது, ‘பெரியாரின் பெயரை பள்ளிக்கு வைக்க வேண்டும்’ என்று முன்மொழிந்தவரின் சீடன் நான்: அவரோடு சேர்ந்து உழைத்தவர்களில் நானும் ஒருவன் என்றார். இவ்வளவு எளிதாக என் வேலை முடியும் என்று நான் சிறிதளவும் நினைக்கவில்லை. உள்ளத்தில் மகிழ்ச்சிப் பெருக்கு பொங்க உடனடியாகத் தயாராகிவிட்டேன் அவரிடம் அந்த உண்மைக் கதையைக்  கேட்பதற்கு. அவ்வளவும் தொலைபேசியிலா? அது சாத்தியமல்ல, நானே  நேரில் வருகிறேன் என்றார்.  சற்றே ஏமாற்றத்துடன் தொலைபேசியினைத் துண்டித்தேன்.  மழை வந்து தடைப் போடவே, நான் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.  ஒரு நாள் ஐயா அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வருகைபுரிந்தார்.  வெகு நாட்களாக படிக்கத் துடித்த ‘பொன்னியின் செல்வன்’ புத்தகம் கையில் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு.  ஆர்வம் மேலிட, பேனாவும் நோட்டுமாக அவருடன் அமர்ந்துவிட்டேன்.  அவர் சொன்னது சொன்னபடியே உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

ஆரிஃப் மியான் – என்றொரு அற்புதமான மனிதர்.  அவர்தான் அரியங்குப்பம் பள்ளிக்குத் தலைமை ஆசிரியர் அப்போது. 1976-ல் என்று நினைக்கிறேன்.  நான் அந்தப் பள்ளிக்கு மாற்றலாகிச் சென்றேன்.  அவருடன் பணியாற்றிய காலங்கள் என்றென்றும் மறக்கமுடியாதவை.  ஏனென்றால் அவர் ஒரு மிகச் சிறந்த நிர்வாகி மட்டுமல்ல ; மனிதனேய மாண்பாளரும் கூட.  அவரிடம் நாங்கள் கற்றுக் கொண்டது ஏராளம்.  அவர் ஒரு தமிழ் விரும்பி.  பெரியார் பற்றாளர். இப்படி அவரைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்.

அவர் எங்கள் பள்ளிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை staff council அமைத்ததுதான்.  ஏனென்றால் ஆசிரியர்கள் மத்தியில் அந்த அளவுக்கு நெருக்கம் இல்லாமல் இருந்ததுதான். பள்ளிச் சார்ந்த எந்த அலுவலாக இருந்தாலும் ஆசிரியர் செயற்குழுவைக் கலந்தாலோசித்த பிறகுதான் செய்வார். அப்படி ஒரு வழக்கத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார்.  ஆசிரியர்களை ஒரு குடும்பமாக நினைக்க வைத்த பெருமை அவரையே சாரும்.

எந்தப் பள்ளிக்குச் சென்றாலும்  வகுப்பறைகளுக்குப் பெயர் வைப்பது என்பது அவருடைய பழக்கம்.  அப்படித்தான் அந்தப் பள்ளியிலும் எல்லா வகுப்பறைகளுக்கும் பெயர் வைத்துவிட்டு அவருடைய அறைக்கும் பெயர் வைத்தார் – அது - “பெரியார் பாசறை”.  அவர் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் அவருடைய அறைக்குப் பெயர் பெரியார் பாசறைதான்.  அந்த அளவுக்குப் பெரியாரின் மீது ஈடுபாடுக் கொண்டவர். அவரைப் பின்பற்றியே நானும் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் என்னுடைய வகுப்பறைக்கு பெரியார் பாசறை என்று பெயர் வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.   

அந்த நாளில் பள்ளிகளுக்குப் பெயர் வைப்பது என்பது வழக்கத்தில் இல்லை. பின்பு பள்ளிகளுக்குப் பெயர் வைக்கும் உரிமையை அரசு அந்தந்தப் பள்ளி நிர்வாகங்களிடமே ஒப்படைத்திருந்தது. பள்ளி நிர்வாகம் மற்றும் அப்பள்ளியை சார்ந்த சமுதாய மக்கள் ஒன்றிணைந்து அளிக்கும் பெயரினை அங்கீகரிக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்தது.இந்நிலையில் ஒரு நாள், ஆசிரியர் கூட்டத்தினைக் கூட்டி, நம் பள்ளிக்குப் பெயர் வைக்கலாம் என்று நினைக்கிறேன். பகுத்தறிவாளரும் சமூக சமத்துவத்தை நிலைநாட்டுவதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவருமான சமூகச் சீர்திருத்தவாதி பெரியார் அவர்களின்  பெயரை வைக்கலாம் என்பது என்னுடைய கருத்து. அதையே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் விருப்பம் எதுவாக இருந்தாலும் கலந்தாலோசித்துச் சொல்லுங்கள்; நாம் மேற்கொண்டு நடக்க வேண்டியதைப் பார்க்கலாம் என்றார்.  ஆசிரியர்கள் அனைவரும் முழுமனதுடன் பெரியாரின் பெயரை வைக்க ஒப்புக்கொண்டனர். எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும் இந்தச் செயலில் அவருக்குப் பக்கபலமாக இருந்து அதை நடத்திக் கொடுத்தவர் ஆசிரியர் திரு.அரிமதி தென்னவன் அவர்கள்தான். அவரும் ஒரு தீவிரப் பெரியார் பற்றாளர்.

எங்களின் இந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்தும் செயலின் முதற்கட்டமாக, அன்று அந்தப் பகுதியின் MLA திரு.சுப்புராயன் அவர்களைச் சந்தித்தோம். அவரிடம் எங்கள் கோரிக்கையை வைத்தபோது, மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.  இவ்வளவு நாளாக இந்தப் பள்ளிக்கு எதிரிலேயே இருக்கிறேன்; எனக்கு இப்படி ஓர் எண்ணம் தோன்றவில்லையே; உங்களுக்குத் தோன்றியதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறிவிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.  சட்டமன்றம்வரை எங்களின் கோரிக்கையை எடுத்துச் சென்று அரசிடமிருந்து அதற்கான ஆணையையும் பெற்றுத்தந்தார்.  அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு எங்களின் எண்ணம் ஈடேறியது. பெயர் வைத்ததோடு நில்லாமல் பெரியாரின் கழுத்தளவுச் சிலை ஒன்றைப் பள்ளி வளாகத்திற்குள் நிறுவினோம். அதனை திரு. சுப்புராயன் அவர்களே திறந்தும் வைத்தார். அன்றிலிருந்து அரியாங்குப்பம் பள்ளி தந்தை பெரியார் அரசு உயர் நிலைப் பள்ளி ஆனது.  

ஆனால், இந்த விஷயம் அவ்வளவு எளிதாக நடைபெறவில்லை.  ஏதோ ஆரிஃப் மியான் ஐயா அவர்கள் நினைத்தார். திரு. சுப்புராயன் அவர்களை சந்தித்தார்,பெயர் வைத்தார் என்று சொல்லிவிட முடியாது. அந்த ஊர் மக்களில் பெரும்பாலானோர் அதனை ஆதரித்தபோதும், அப்பகுதியில் வாழ்ந்த உயர்வகுப்பு மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அதை நேரில் நின்றுப் பார்த்தவர்கள் நாங்கள். ஆனால் அதை இப்பொழுது சொல்லவும் கூடாது.  ஏன் இந்த எதிர்ப்பு என்று வினவினேன். பெரியாரின் சமத்துவக் கொள்கைகளை விடுத்து அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கை அதற்கு முக்கிய காரணமாக அவர்களால் மேற்கோள் காட்டப்பட்டது. அவர்களை பொறுத்தவரை பெரியார் என்றால் கடவுளை மறுப்பவர் மட்டும்தான். அவர் நாத்திகர் இல்லையா?  அவருடைய பெயரை வைப்பது எங்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது போல் உள்ளது என்று அவர்கள் வாதிட்டனர். தொந்தரவும் கொடுத்தனர். ஏன்! மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கே தொந்தரவுக் கொடுத்தனர். பெரியார் பெயரை பள்ளிக்கு வைக்கக்கூடாது என்று போரடினர். அவ்வளவையும் சமாளித்துதான் திரு. சுப்புராயன் அவர்கள் பள்ளிக்குப் பெயர் சூட்டினார். அதன் பின்னரும் பெரியார் எதிர்பாளர்களால் பள்ளிக்கு தொந்தரவுகள் வந்த வண்ணம் இருந்தன. ஓர் உதாரணம் கூற வேண்டுமென்றால்,பள்ளிக்கு உட்பட்ட பகுதிகளை பசுமையாக்கும் பொருட்டு "மரக்கன்றுகள்" பல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் நடப்பட்டன. ஆனால் அந்த மரக்கன்றுகள் நடப்பட்ட இரவே பெரியார் எதிர்பாளர்களால் அவைகள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருந்தன. இது போன்று பல சம்பவங்களை உதாரணம் கூறலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் மாண்புமிகு உறுப்பினர் அவர்களும் பெரியாரின் நாத்திக கொள்கையில் மையம் கொண்டிருந்த சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றில் உறுதியாக நின்றனர். பெரியாரின் போராட்ட குணம் இயல்பாகவே அவரின் சீடர்களிடத்திலும் அமைந்திருந்தது வியப்புக்குரியதன்று! எவ்வளவு சவால்கள் வந்தாலும் மாணவர் சேர்க்கை மட்டும் குறைவதில்லை. பள்ளி ஆசிரியர்களின் கடும் உழைப்பு, காலம் தவறாமை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் காரணமாக இது சாத்தியமானது. மூடநம்பிக்கைகளுக்கு ஆதிக்க வெறிக்கும் எதிரான முற்போக்குக் கருத்துக்களை, பள்ளியின் செயல்பாடுகளில் இன்றும் நாம் காணலாம். பாட திட்டத்துடன் சேர்த்து பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குப் பாரம்பரிய தமிழ் காளையான சிலம்பம் கற்பிக்கப்படுவது எனும் கற்றலுடன் இணைந்த கலை வளர்ப்பு நடவடிக்கை இதற்கு ஓர் உதாரணம்

எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதனை வினவி அறியும் பகுத்தறிவும், பெண் கல்வி, பெண்களுக்குச் சொத்துரிமை எனும் பெண் விடுதலை உணர்வும் , ஜாதி மத வர்க்க வேறுபாடுகளற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்ற சமத்துவ உணர்வும் தான் தந்தை பெரியார் அவர்கள் உயிர் மூச்சாய்  நினைத்த கொள்கைகள். அக்காலத்திற்கு மட்டுமின்றி எக்காலத்திற்கும் பொருந்தும் இக்கொள்கைகளை மாணவர்கள் புரிந்து கொண்டு அவர் கனவு கண்ட வளமான சமத்துவச் சமுதாயம் அமைக்கப் பாடுபட வேண்டும். 

Rate: 
0
No votes yet
Perspective Type: 
General Perspectives