Towards a just, equitable, humane and sustainable society

என் நினைவில் இன்றும் நிலைத்திருக்கும் ஆசிரியர்

பன்னிரெண்டு ஆண்டுகள் அரசுப் பள்ளியிலே படித்து, இன்று அரசுப் பள்ளியின் ஆசிரியை என்ற பெருமிதத்தோடு இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன்.

அன்றும் சரி, இன்றும் சரி மாணவர்களின் நலனில் அக்கரை செலுத்தும் ஆசிரியர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர்களை, மாணவர்கள் என்றும் மறப்பதும் இல்லை / வெறுப்பதும் இல்லை. அதேபோல் ஒரு வரமாக வந்தவர்தான் என் கணித ஆசிரியர். ஒருவருக்காக நாம் கொடுத்திடும் சிறந்த பரிசு எதுவென்றால்  அவர்களுக்காக நாம் செலவிடும் நேரம் தான்.

    என் பணி அனுபவ காலங்களில் சில ஆசிரியர்கள் பள்ளியின் வேலை நேரங்களைத் தாண்டி ஒரு நொடிக்கூட எங்களால் செலவிட முடியாது என்று கூறுவார்கள்.

ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் கணித ஆசிரியர் பள்ளிக்கு வரும் நேரத்தையும், பள்ளியை விட்டு செல்லும் நேரத்தையும் யாராலும் கூறமுடியாது. சேவலை இவர் எழுப்புவாரோ அல்லது இவரை சேவல் எழுப்புமோ தெரியாது அவ்வளவு முன்னரே பள்ளியில் இருப்பார்.

மாணவர்களைப் பொதுத்தேர்விற்குத் தயார்படுத்த காலை, மாலை என சிறப்பு வகுப்பு வைத்து தன் வேலை நேரங்களையும் தாண்டி செலவிடும் ஒரே நாயகன் இவரே ! ஒரு மணி நேரத்தில் மூன்று அல்லது நான்கு சிறப்பு வகுப்புகளையும் கையாளும் திறமைசாளி. இவர் நாற்காலியில் அமர்ந்து நான் பார்த்ததே இல்லை இது வரை.

ஆற்று நீர் போல் இங்கும் அங்குமாய் ஓடி ஓடி கற்பிக்கும் காட்டாறு. தோற்றத்தில் எளிமை கற்பித்தலில் தெளிவு, நடையில் சுறுசுறுப்பு, பேச்சில் கருணை, கண்டிப்பில் உச்சம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தகைய சிறப்பு மிக்க இந்நாயகனின் மாணவியாகும் வாய்ப்பே எனக்கு கிடைக்கவில்லை. பத்தாம் வகுப்பில் ஆறு பிரிவுகள் உண்டு. அதில் மூன்று பிரிவுகளுக்கு இவர் கணித ஆசிரியராக இருப்பார். ஆனால் எனக்கு மட்டும் ஏக்கம். இவர் வகுப்பில் நாம் இல்லையே என்று. இவரின் அருமை அறியாத சில மாணவிகள் புலம்பித் தள்ளுவார்கள்.

நான் பனிரெண்டாம் வகுப்புப் படிக்கும் போது என் ஏக்கம் அதிகமாயிற்று. காரணம் அவ்வகுப்பு கணித ஆசிரியர் தான். எனக்கு மிகவும் பிடித்தமான பாடம் கணிதம். பத்தாம் வகுப்பில் நான் எதிர்பார்த்த அளவில் மதிப்பெண் கணிதத்தில் பெற முடியவில்லை.  அவ்வாசை பனிரெண்டாம்  வகுப்பிலாவது நிறைவேறும் என்று கனவும் பொய்யாகிவிடும் அளவிற்கு ஒரு கணித ஆசிரியை.

இப்பயமும் ஏக்கமும் என்னை அழைத்துக்கொண்டு போனது என் கணித நாயகனிடம். ஆம், என்  ஆசைகளையும் அவர் வகுப்பின் மீது நான் கொண்ட ஆர்வங்களையும் அவரிடம் சென்று சுறினேன். சிரித்த முத்ததோடு என்னைப் பார்த்துக் கூறினார், “வியப்பாக இருக்கிறது, என்னைப் பார்த்தால் என் வகுப்பு என்றாலே அலறும் மாணவர்கள் மத்தியில் என் கற்பிப்பிற்காக ஏங்கும் மாணவியா?” என்று.

அன்று முதல் அவர் சிறப்பு வகுப்பில் எனக்கும் ஓர் இடம் கிடைத்தது. என் கனவும் நிறைவேறியது. வணிகவியல் கணிதத்தில் பள்ளியலே முதலிடம் பெற்றேன். இன்று மட்டுமல்ல என்றுமே என் முன்மாதிரி ஆசிரியர், என் பள்ளிப்பருவ நாயகன் ஐயா, சரவணன் அவர்கள் தான்.

என் போன்ற ஏழை மாணவர்களுக்கு ஐயா சரவணன் போல் ஆசிரியர்கள் அமைந்துவிட்டால் போதும் வாழ்க்கை வரமாகும். அவர் கடல் அவரின் மாணவியாகிய நான் கடுகு போல் சிறிதளவேனும் எம்மாணவர்களுக்கும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்ககோடும் விருப்பத்தோடும் பணியாற்றி வருகிறேன்.

சூரிய உதயத்தைவிட அழகு

பள்ளியில் உங்கள் உதயம்!

தேனீக்கள் கூட எடுக்கும்

நீங்கள் விரும்புவதுக் கூட இல்லை

உங்கள் கண்டிப்பில் உண்டு

எங்கள் எதிர்கால பாதை!

ஐயா, இன்றும் உங்கள் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என் போன்ற மாணவர்களுக்காக மேலும் மேலும் பல மாணவர்கள் உங்களால் சிறப்படைய வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். இத்தருணத்தில் இம்மாணவியின் ஆசிரியர் தின வாழ்த்துகளையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னை ஏற்றிவிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் என சிறம் தாழ்ந்த நன்றியையும் ஆசிரியர் தின வாழ்த்துகளையும் சொல்லிக் கொள்கிறேன்.

நன்றி

 

Rate: 
0
No votes yet
Perspective Type: 
Teacher as Reflective Practitioner