Towards a just, equitable, humane and sustainable society

சமூகவியல் பயிற்சிப்பட்டறை

0
No votes yet
0
Post a comment

அனைத்து வகுப்பு மாணவர்களுக்காக மாதந்தோறும் நடக்கும்  பயிற்சி பட்டறையின் செயல்முறை மற்றும் அதன் கற்றல்.

திரு. பச்சையப்பன் செவித்திறன் குறையுடையோர் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மொத்தம் 87 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் இரண்டாம் நிலை மொழி (ஆங்கிலம்) தவிர மற்ற பாடங்கள் எல்லாம் சமச்சீர்க் கல்வி திட்டத்தின்படி தாய்மொழியான தமிழ் மொழி வழியாகப் படிக்கின்றனர்.

செவித்திறன் குறைவுடைய காரணத்தினால் எம் மாணவர்களுக்கு மொழியை முழுமையாகக்  கற்றுக்கொள்வது என்பது கடினமான ஒரு செயலாக உள்ளது. எம்மாணவர்கள் எந்த வகுப்பில் படித்தாலும், என்ன பாடம் படித்தாலும் அந்தந்த பாடங்களில் உள்ள மையக்கருத்து, பாடத்தின் பொருளறிவுடன் (Knowledge & Concept) மொழியறிவையும் சேர்த்து அவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய ஒரு கட்டாயம் எம் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.

மாதா மாதம் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஏதாவது ஒரு பாடத்தில் (கணக்கு, அறிவியல், சமூகஅறிவியல், தமிழ்) பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது எம்பள்ளியில் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் சென்ற மாதம் சமூகவியல் பயிற்சிப்பட்டறையை அனைத்து வகுப்பு மாணவர்களும் திறமையாக செயல்பட்டு  சிறப்பாக  நடத்தினார்கள்.

சமூகவியல் பயிற்சிப்பட்டறையின் நோக்கங்கள்:

  1. சமூகவியல் பாடத்தில் உள்ள கருத்தை (Concept) நன்றாகப் புரிந்து    கொள்ளுதல்.
  2. அந்தப் படைப்புக்குரிய தகவல்கள் மட்டுமல்லாது அதனுடன் தொடர்புடைய தகவல்கள், நிகழ்வுகளையும் சேகரித்து ஒப்பிட்டுக்காட்டுதல்
  3. அந்தப் படைப்பை மற்ற மாணவர்களுக்குப் புரியும்படி கூறுவதற்குத்  தயார் செய்து கொள்ளுதல்.
  4. மற்ற மாணவர்கள் புரிந்து கொள்ளும்படி  பேசுவதற்குப் பயிற்சி மேற்கொள்ளுதல்.
  5. கற்றலில் பின்தங்கிய மாணவர்களும் கலந்து கொண்டு விடையளிக்கப் பயிற்சியை மேற்கொள்ளுதல்.
  6. மாணவர்களுடைய பேச்சாற்றலின் தனித்திறமைகளை வெளிப்படுத்துதல்
  7. அனைத்து மாணவர்களையும் பங்குகொள்ளச் செய்தல் ஆகியவைகளாகும்.

 

இந்த நோக்கங்களின் அடிப்படையில் சமூக அறிவியல் ஆசிரியர் ஒவ்வொரு வகுப்பிற்கும் தகுந்தாற்போல் தலைப்புகளை மாணவர்களுடன் கலந்துரையாடி தேர்ந்தெடுத்து பின்னர், எந்தத் தலைப்பை எந்த மாணவன் (அ) மாணவி செய்யப்போகிறார் என்பதையும் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுடனும் கலந்தாலோசித்து முடிவெடுப்பர்.

பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ - மாணவி தன் வகுப்பு மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியரின் மேற்பார்வையில் படைப்புகளைத் தயாரிப்பார்கள்.

     

மேல் உள்ள படத்தில் போல மாணவர்கள் படைப்புக்கு ஏற்ற தலைப்பையும், விளக்க வரைபடத்தையும் (Chart) தயாரித்து எழுதுவார்கள.

·    பயிற்சிப்பட்டறை நாளை முடிவு செய்து, அந்த நாளில் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாணவன் - மாணவி தலைப்புடன் கூடிய படைப்பைக் காட்சிக்கு வைப்பார்.

பயிற்சிப் பட்டறைக்கு எடுத்துக்கொண்ட தலைப்புகள்:

1.    நதிநீர் இணைப்பு - புவியியல்

2.    நடராஜர் கோவில் ( சிதம்பரம்) - வரலாறு

3.    தஞ்சைப்  பெருவுடையார் கோவில் - வரலாறு

4.     சீ்ஸ்மோகிராப் – நிலநடுக்கத்தை அளவிடும் கருவி - புவியியல்

5.    குடவோலை முறை - அரசியல்

6.    பழங்கால நாணயங்கள் மற்றும் அயல்நாட்டு பணம்,     நாணயங்கள் - வரலாறு

7.    புதுச்சேரியின் சுற்றுலாத் தளங்கள் - வரலாறு

8.    உறிஞ்சுத் துளைகள் - புவியியல்

படைப்பை, அந்தப் படைப்பிற்குப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட மாணவன் - மாணவி அவற்றைப் பற்றி விளக்கமாகவும் புரியும் படியாகவும் பார்வையாளருக்கு எடுத்துக் கூறுவர்.

இது மட்டுமின்றி ஒவ்வொரு படைப்பிற்கும் ஓர் ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டு மாணவன் - மாணவி விளக்கம் அளிப்பதில்  ஏதாவது சிரமம் ஏற்பட்டால் உதவி செய்வார். இந்தப் பட்டறையில் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும், பெற்றோர்களும் ஒவ்வொரு படைப்பிற்கும் இரண்டு பேர் என்ற எண்ணிக்கையின் பேரில் பார்வையாளராகக் கலந்து கொள்வார்கள். பல சமயங்களில் அருகில் உள்ள வேறுபள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் இந்தப் பட்டறையில் பார்வையாளராகக் கலந்து கொள்வர்.

இப்படி ஒவ்வொரு மாதமும் வெவ்வெறு பாடங்களில் பயிற்சிப் பட்டறை நடத்துவதால் மாணவர்களுக்கு ஏற்படும் நன்மைகளாவன

  1. குறிப்பிட்ட  தலைப்புப் பற்றிய தகவல்களை முழுமையாக அந்த வகுப்பு மாணவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.
  2. படைப்புகளை அந்த வகுப்பு மாணவர்கள் சேர்ந்து செய்யும் போது குழுவாக ஒற்றுமையாகச் செயல்பட க் கற்றுக்கொள்வர்.
  3. அவர்களுக்குள் தன்னம்பிக்கை பெருமளவில் அதிகரிக்கிறது.
  4. மாணவர்கள் புரியும்படி பேச முயற்சி செய்கிறார்கள்.
  5. மற்ற பள்ளி மாணவர்களுக்குச் செவித்திறன் குறையுடைய மாணவர்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுகிறது.
  6. பெற்றோர்கள் இந்தப் பயிற்சிப்பட்டறைகளை நேரில் பார்த்து நிறையத் தகவல்களைத் தெரிவித்துக் கொண்டு தங்கள் பிள்ளைகளுக்குப் பாடத்தோடு ஒப்பிட்டுக் காட்டி கற்பிக்க உதவியாக உள்ளது. மேலும் தங்கள் பிள்ளையிடம் இருந்து கற்றுக் கொள்வதில் பெற்றோர் பெருமிதம் அடைகின்றனர்.

    இதைக் கண்டும் கேட்டும் தெரிந்தும் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நம் பழமையான கோவில்களின் பெருமையைப் புரிந்துகொண்டதுடன் அதை எப்படி கட்டியிருப்பார்கள் என்று அதிசயித்துத் தமிழர்கள் மீதும் தமிழின் மீதும் பெருமிதம்  கொண்டனர்.

மற்றுமொரு படைப்பான சீஸ்மோகிராப் மூலம் அனைவருக்கும் நிலநிடுக்கத்தை எப்படி அளவிட முடியும் என்பதை ஓரளவு கண்கூடாகக் கண்டு  தெரிந்து கொண்டனர்.

     நதிநீர் இணைப்பு என்கிற படைப்பின் மூலம் எம் மாணவர்கள்  இந்தியாவில் உள்ள நதிகளை எல்லாம் இணைந்து எப்படி நம் நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்திச் செய்யலாம் என்கிற மேலோங்கிய திட்டத்தை நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டினர்.

 

Teacher: திரு. பச்சையப்பன் செவித்திறன் குறையுடையோர் பள்ளி

Subject: 
Social Science

Term: Term 3

0
No votes yet
0
Post a comment