Towards a just, equitable, humane and sustainable society

விடுமுறையும் வாசிப்பும்

0
No votes yet
0
Post a comment

சமூகப் பழக்கவழக்கங்கள் பள்ளியில் பிரதிபலிப்பதை ஒவ்வொருமுறையும் உணர்வேன். இம்முறை பள்ளி அனுபவம். மாணவர்களின் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உறுதியாக உணர்ந்தேன்.

பருவத்தேர்வுகள் முடிந்தவுடன் ஆசிரியர்களிடம்  'happy holidays' என வரிசையாக வாழ்த்துகளை மாணவர்கள்  தெரிவிப்பர்.  வெறும் வாழ்த்து வார்த்தையாகப் பதில் கூறுவதிலிருந்து  வித்தியாசமான செயல்பாடு ஒன்றைச் செயப்படுத்த முடிவு செய்தேன், அதன்படி  இவ்வாண்டு முதல், பருவ விடுமுறையின் பொழுது  அவர்களுக்குக் கதைப்புத்தகம் கொடுத்து அனுப்பினேன். இதன் மூலம் அவர்களுடைய விடுமுறையை மகிழ்ச்சியான விடுமுறையாக்க  வேண்டும் என எனக்குத் தோன்றியது.  Happy Holiday happy story – என்று  மாணவர்களுக்கு தெரிவித்தேன். Reading corner -  இல் உள்ள புத்தகங்களில் ஒவ்வொருவரும் மூன்று புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம் என்றேன். வகுப்பறை, மகிழ்ச்சி ஆரவாரத்தில் துள்ளிக்குதித்தது. அவர்கள் எடுத்துச்செல்லும் புத்தகங்களைப்பதிவு செய்யும் முறை அவர்களுக்குத் தெரியும்.  பெயர்களை வரிசையில் நின்று பதிவு செய்தனர். இதற்கிடையே, “கதைப்புத்தகங்களைப் படிப்பதால்  என்ன ஆகும் என்று ஒரு குழந்தை கேட்டாள்? “ இவ்வாய்ப்பைப்  பயன்படுத்தி,  என்னவாகும் என்பதை  இப்பொழுது அதைப்பற்றிச் சொல்ல வேண்டாம்.   விடுமுறை முடித்து வந்து என்ன ஆயிற்று என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும் என்றேன்.

விடுமுறை முடித்து  முதல் நாள் முதல் வகுப்பிலேயே அனைவரும் கதைப்புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு கதைப்புத்தகம் என்ன செய்தது என்பதைச் சொல்லத் தயாராகினர்.  தாங்கள் விடுமுறையில் புத்தகங்களை எப்படி படித்தனர் , என்ன செய்தனர் எனப்பகிர்ந்து கொண்டனர். அவர்கள் சொன்னதை அப்படியே சொல்லமுடியாவிட்டாலும் நினைவில் உள்ளவற்றைத் தகவல்களாகவாவது பதிய செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.

"மிஸ் , நான் எனக்குப் பிடித்த படங்களை வரைந்தேன்",

" நான் description எழுதியிருக்கிறேன்"

"மிஸ் , நானே ஒரு புதுக்கதையை எழுதியிருக்கிறேன்"

"மிஸ் ,நான் படிச்ச கதை story book மாதிரியே நானும் ஒரு குட்டி story book செஞ்சேன்"

வகைவகையாய்ப் புத்தகங்களுடன் விளையாடியிருந்தனர் என் வகுப்பு குழந்தைகள். அடுத்து இவர்களுடைய அனுபவங்களைப் பதிவு செய்யலாம் என எண்ணி  ,  அடுத்து என்னுடைய கேள்விகளைத் தொடர்ந்தேன்.

கதைப்புத்தகம் படித்தது உங்களுக்கு  எப்படி இருந்தது?

  • மிஸ் , நான் என் அக்கா, அண்ணனுடன் சேர்ந்து கதை படிச்சேன்"
  • "மிஸ் , என்னை எங்க அம்மா ஊருக்குக் கூட்டிட்டு போனாங்க. நான் கதைப்புத்தகத்தை எடுத்தேன். கதை புக்லாம் எடுத்துட்டு வர வேணாம் என்று சொல்லிட்டாங்க.. ஆனால் நான் என் துணிக்கு அடியில் புக்கை ஒளிச்சு வச்சு எடுத்துட்டு போனேன். ஊரில் போய் என்( பெரியம்மா மகளுடன் ) அக்காவுடன் சேர்ந்து படிச்சேன். ஜாலியா இருந்தது"
  • மிஸ் மிஸ் நானும் ஊருக்கு எடுத்துக்கொண்டு போனேன். பஸ்ஸில் ஒரே குளிர். அம்மா புடவையில் போத்திவிட்டார்கள். நான்அப்படியே அம்மா புடவையைப் போத்தி, குளிருக்குக் குணிந்து கொண்டு அப்படியே கதை படித்தேன். அது ரொம்ப நல்லா இருந்த்து.”
  • நண்பர்களுடன் படித்தேன். ஆயாவிற்குப் படித்துக்காட்டினேன். அப்பா அம்மாவிற்குப்  படித்துக்காட்டினேன்.
  • மிஸ் அந்த மூனு புஸ்தகத்தையும் நிறைய தடவைப் படித்தேன்.
  • நான் படித்ததைச் செல்போனில்  வீடியோ எடுத்து மற்றவர்களுக்குக் காட்டினாங்க.

இப்படி  அவர்கள் குறிப்பிட்ட நீண்ட அனுபவங்களில்  தன் தெருப் பிள்ளைகளுடன் சேர்ந்து கதையை நாடகமாக நடித்ததும். கதைப் புத்தகங்கள் படித்ததால் புத்தகங்கள் அவர்களுக்கு நண்பனாகி விட்டதும்… என  அவர்களின் பகிர்வு  எனக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டியது. சமூகப்பழக்க வழக்கங்கள் பள்ளியில் பிரதிபலிப்பதை ஒவ்வொருமுறையும் உணர்வேன். இம்முறை பள்ளி அனுபவம் சமூகத்தில் மாணவர்கள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த முடியலாம் என்பதை உறுதியாக உணர்ந்தேன்.

இவர்களுடைய அனுபவங்களைப் பதிவு செய்யலாம் என எண்ணி அவர்களை எழுதிக்கொடுக்கச்  சொன்னேன் . மிகவும் அழகாகத் தங்கள் அனுபவங்களை எழுத்து மூலம் பதிவு செய்தனர்.

(மாணவர்களின் எழுத்து இடம் பெறும்)

எழுதுவது, சொந்தமாக எழுதுவது, அனுபவங்களை எழுதுவது என் வகுப்பறைக்குப் புதிதல்ல என்றாலும் இவைகளைப் படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும், மாணவர்களின் ஆனந்தக்களிப்பைப் பார்க்கும் பொழுதும் நான் ஆசிரையையாக ஆவதற்குக் கொடுத்துவைத்தவள் என்ற உணர்வு ஏற்படுகிறது. கதைகளும் புத்தகங்களும் வாசிப்பிற்கானது மட்டுமல்ல சமூக மாற்றத்திற்கானது. இந்தப் புத்தாண்டு புத்துணர்ச்சியோடு தொடங்கியிருக்கிறது.

            

 

 

Subject: 
EVS

Term: Term 3

0
No votes yet
0
Post a comment