Towards a just, equitable, humane and sustainable society

சுற்றுச்சூழலிலிருந்து செயல்திட்டங்களின் மூலம் கற்றல்

0
No votes yet
0
Post a comment

எங்கள் பள்ளி: பள்ளி வாடகை கட்டிடத்தில் இயங்குகிறது. இங்கு 7 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். சென்ற வருடம் 142 ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 168 ஆக உயர்ந்துள்ளது. எங்கள் பள்ளியில் பெரும்பாலும் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களே பயில்கின்றனர். பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலைக்குச் செல்வதால் மாணவர்களின் கவனிப்பு குறைவாகவே உள்ளது. எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்களிடம் அதிக அக்கறை கொண்டு தனி கவனம் செலுத்திக் கற்பிக்கின்றனர்.

மாணவர்கள் விரும்பும் வண்ணம் கற்பித்தலில் புதிய உத்திகளைக் கற்றுக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தல் மற்றும் கணக்கு மற்றும் சூழ்நிலையியல் பாடங்களைக் கற்பிப்பது எனக்குப் பிடிக்கும்.

சூழ்நிலையியலில் செயல்திட்டங்கள் தீட்டி கற்பிப்பது, மாணவர்களைக் களப்பயணம் அழைத்துச் செல்வது போன்றவற்றில் ஆர்வமாக ஈடுபடுவேன்.

சுற்றுச்சூழலிலிருந்து செயல்திட்டங்களின் மூலம் கற்றல்

நான் சென்ற வருடம் ( 2017 - 18) ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குச் சூழ்நிலையியல் பாடம் கற்பித்தேன். சூழ்நிலையியல் பாடங்களை மாணவர்கள் ஆர்வமுடன் கற்க அவர்கள் வாழும் சுற்றுப்புறத்தைக்கொண்டு அவர்களாகவே கற்குமாறு செயல்திட்டங்கள் வடிவமைத்தேன்.

செயல்திட்டம்  1

நோக்கம்: பலவகையான விலங்குகளின் வாழ்க்கை முறையை அறிதல்;

மாணவர்கள் தங்களுடைய வீட்டின் அருகில் வாழும் விலங்குகளைப் பற்றி தகவல் சேகரித்தனர். ஆவணம் தயாரித்தனர் (Animal profile). அதாவது விலங்குகளின் படத்தை வரைந்து அதன் செல்லப் பெயர், நிறம், அது உண்ணும் உணவு, உறங்கும் நேரம், அதை கவனிப்பது யார், அதன் குணாதிசியங்கள் போன்ற தகவல்களைச் சேகரித்து அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டேன். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விலங்கைப் பற்றி செய்தி சேகரித்து வந்தனர். மாணவர்கள் எழுதி வந்த தகவல்களை வகுப்பறையில் பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் 25 விலங்குகள் பற்றிச் செய்திகளை அறிந்து கொண்டனர்.

செயல்திட்டம் 2

நோக்கம்: உணவுகள் எவ்வாறு கெட்டுப்போகிறது. அது கெட்டுப்போக ஆகும் காலம் அவற்றை எவ்வாறு பாதுகாப்பது போன்றவற்றைப் பற்றி அறிதல்.

திட்டம்: செயல்திட்டத்திற்குத் தேவையான பல்வேறு வகையான உணவுகளை மாணவர்களே தங்களுடைய வீட்டிலிருந்து கொண்டுவரச் செய்தல், அட்டவணையைத் தயாரித்தல். மாணவர்களை ஐந்து குழுவாகப் பிரித்தல்.

செயல்பாடு : ஒவ்வொரு குழுவிற்கும் சில உணவுப் பொருள்களைக் கொடுத்தேன் ஒவ்வொரு உணவையும் நான் சிறிய ஒளி புகும் பிளாஸ்டிக் கொள்கலனில் அடைத்து வைத்து, அவற்றில் ஒன்றை மூடியும் மற்றொன்றைத் திறந்தும் வைத்து ஒரு வாரம் உற்று நோக்குச் செய்த பிறகு ஒன்றை வெயிலிலும் மற்றொன்றை வகுப்பறையிலும் வைத்து அவற்றில் ஏற்படும் மாறுதல்களை அட்டவணையில் குறித்தனர். (உணவுப்பொருளின் பெயர்,வாசனை, நிறம், தன்மை) மேலும் உணவுப் பொருளை ஓர் அறையினுள் திறந்து வைக்கும் பொழுதும் மூடி வைக்கும் பொழுதும் சூரிய ஒளியில் திறந்து வைக்கும் பொழுதும் மூடி வைக்கும் பொழுதும் ஏற்படும் மாற்றங்களை உற்று நோக்கி அட்டவணையில் குறித்தனர்.

மாணவர்கள் தொடர்ந்து ஏழு நாட்கள் உணவுப் பொருள்களை உற்று நோக்கி அதன் தன்மைகளை அறிந்து கொண்டனர். முட்டை, பால் போன்றவை இரண்டு நாட்களிலே கெட்டுப்போய் வாடை வந்து துர்நாற்றம் வீசியதால் அதைக் குப்பையில் வீசி விட்டோம். மாணவர்கள் ஆர்வமாக உற்றுநோக்கி செயல்திட்டங்களில் ஈடுபட்டனர். உணவுகள் எவ்வாறு கெட்டுப்போகிறது என்பதையும் அதற்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையும் அறிந்துகொண்டனர். உணவுப் பொருள்களை, காய வைத்தல், ஊறுகாய் போடுதல், உப்போடு சேர்த்து வைத்தல் போன்றவற்றால் உணவுப்பொருட்கள் கெட்டுப்போவதைத் தவிர்க்க முடியும் என்பதை அறிந்து கொண்டனர்.

செயல்திட்டம் 3:

நோக்கம்: அருகில் உள்ள நீர்நிலைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுதல் இதன் மூலம் பாரம்பரிய நீர்நிலைகளின் தற்போதைய நிலையைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்.

திட்டம்: களப்பயணம் அழைத்துச் செல்லும், சுல்தான் பேட்டை குளத்தையும் மாணவர்கள் செல்லும் வழியையும் அதற்கு ஆகும் நேரத்தையும் முன்னரே பார்த்துத் திட்டமிட்டேன்.

செயல்பாடு: மாணவர்களைக் களப்பயணமாகப் பள்ளி அருகில் உள்ள சுல்தான்பேட்டை குளத்திற்கு அழைத்துச் சென்றேன். மாணவர்கள் அனைவரும் குளத்தை உற்றுநோக்கி தற்போது எப்படி உள்ளது என்பதை அறிந்து கொண்டனர். குளம் பராமரிப்பின்றி தற்போது வறண்டு, சிறுசிறு செடிகள் முளைத்துச் சுற்றுச் சுவர்கள் பெயர்ந்து காணப்பட்டது. மாணவர்கள் இதனைப் பற்றிப் புரிந்துகொள்ள என்னிடம் சில கேள்விகள் வினவினர் (எ-கா: ஏன் இந்தக் குளம் இந்நிலையில் உள்ளது, யார் இதைப் பராமரிப்பது?) மேலும் மாணவர்கள் அவ்வூர் பெரியவரிடம் இக்குளத்தைப் பற்றிப் பலச்செய்திளை, கேட்டுத் தெரிந்துகொண்டனர். குளத்தின் வரலாறு, குளத்தை யார் பராமரிப்பது, குளத்திற்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறது, குளம் தற்போது எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறது போன்ற செய்திகளை மாணவர்கள் அறிந்தனர். மாணவர்கள் மகிழ்ச்சியாகக் களப்பயணம் சென்று ஆர்வமுடன் கேள்விகளைக் கேட்டு, வகுப்பறைக்கு வந்தவுடன் தாங்கள் பெற்ற செய்திகளை வாய்வழியாகப் பகிர்ந்து கொண்டனர். இதன்  மூலம் அவர்கள் நீர்நிலைகளின் அவசியத்தையும் அவற்றின் தற்போதைய நிலைகளையும் புரிந்து கொண்டனர்.

மேலும் மாணவர்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள நீர்நிலைகள் ( குளம், கிணறு) பற்றி விவரங்களை வகுப்பறையில் பகிர்ந்தனர்.

இச்செயல் திட்டங்கள் மூலம் மாணவர்கள் நீர்நிலைகளின் அவசியத்தையும் பாரம்பரிய நீர்நிலைகளின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொண்டனர். மேலும், நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் உணர்ந்தனர்.

செயல்திட்டம் 4:

நோக்கம்: போக்குவரத்து வாகனங்களைக் கணக்கெடுத்து வரைபடம் தயாரித்தல், பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவை அறிந்து கொள்ளுதல்.

திட்டம்: மாணவர்களை ஐந்து குழவாகப் பிரிந்து அவர்கள் கணக்கெடுக்கும் வாகனத்தைப் பிரித்துக் கொடுத்தல், மேலும் வாகனங்களைக் கணக்கெடுக்கும் முறை மற்றும் நேரம் பற்றி விளக்கிக்கூறுதல்.

செயல்பாடு: வகுப்பறையில் உள்ள மாணவர்களை 6 - குழுவாகப் பிரித்து அவர்களுக்கு ஒவ்வொரு வாகனத்தையும் பிரித்துக் கொடுத்து கணக்கெடுக்கக் கூறினேன். மாணவர்களைப் பள்ளிக்கு அருகில் உள்ள சுல்தான் பேட்டை பிரதான சாலைக்கு பாண்டி - விழுப்புரம் சாலைக்கு அழைத்துச் சென்று அங்கு வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தனர். ஒவ்வொரு குழுவும் தங்களுக்குரிய வாகனங்களை, அரை மணி நேரத்தில் சாலையில் சென்ற போது ஒவ்வொன்றாக எண்ணி கணக்கெடுத்தனர். (மிதிவண்டி, பேருந்து மற்றும் சிற்றுந்து, ஆட்டோ, மோட்டார் சைக்கிள், கார், சரக்கு வாகனம்)

மாணவர்கள் கணக்கெடுத்து முடித்தவுடன் வகுப்பறையில் வந்து, அரை மணி நேரத்தில் கடந்து சென்ற வாகனங்களின் மொத்த எண்ணிக்கையைக் கூறினர். அந்த எண்ணிக்கையை வைத்து, அனைவரும் சேர்ந்து வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரைபடம் தயாரித்தோம். மேலும் வாகனங்களுக்குத் தேவைப்படும் எரிபொருள் பற்றியும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் உரையாடி தெரிந்து கொண்டனர். இதன் மூலம் மிதிவண்டி பயன்பாடு மிகவும் குறைந்துள்ளது என்பதைப் புரிந்துகொண்டனர்.

மாணவர்கள் தங்கள் வீடுகளில் வாகனங்களின் பயன்பாட்டைப் பற்றி (பயன்படுத்தும் எரிபொருள், பயன்படுத்தும் தூரம்) குறித்துக்கொண்டு அதற்கும் வரைபடம் (bar chart) வரைந்தனர். பின்பு வாகனங்களின் எண்ணிக்கையைப் பற்றியும் வாகனங்களில் பயன்படும் எரிபொருளைப் பற்றியும் உரையாடினோம். எரிபொருள் சிக்கனம் பற்றியும், மிதிவண்டி பயன்பாடு குறைவாக இருப்பதைப் பற்றியும் விரிவாக உரையாடினோம். மேலும் எரிபொருள்களைச் சிக்கனமாகப் பயன்படுத்த என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கலந்துரையாடினோம். (எ-டு) குறைவான தூரத்திற்கு நடப்பதும், மிதிவண்டியைப் பயன்படுத்துவது, நீண்ட தூரத்திற்குப் பேருந்து, தொடர்வண்டி பயன்படுத்த வேண்டும் என்றும் உணர்ந்தனர். இச்செயல் திட்டத்தில் சூழ்நிலைக்கேற்ப கணிதப் பாடத்தில் தாங்கள் கற்ற வரைபடம் பற்றிய புரிதல்களையும் பயன்படுத்தினர். அதன் மூலம் சூழ்நிலையியல் கணிதத்தையும் தொடர்புபடுத்தி கற்றனர்.

இச்செயல்திட்டங்களின் மூலம்

  • புத்தகங்களிலிருந்து தகவல்களைப் பெற்றதோடு தாங்களாகவே சுற்றுப்புறங்களிலிருந்து கூடுதல் தகவல்களைச் சேகரித்து பாடத்திட்டக் கருத்துகளைப் பெற்றனர்.
  • மாணவர்கள் ஆர்வமாகச் சூழ்நிலையியல் பாடங்களைக் கற்றனர்.
  • இதன் மூலம் பாடத்திட்டத்தில் உள்ளூர்சூழலைப் புகுத்த முடிந்தது. மேலும், நானும் ஓர் ஆசிரியராக நிறைய அறிந்து கொள்ள முடிந்தது.
  • மாணவர்கள் தாங்களாகவே ஆராயும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டனர் இவ்வாறு பல்வேறு திறன் - திறமைகளை வளர்த்துக் கொண்டனர்.(எ-டு) குழு மனப்பான்மை, கேள்வி கேட்டு தகவல்களைச் சேகரிக்கும் திறன், பகுத்தாய்வுத் திறன்.

இதனால் வரும் கல்வியாண்டில்

  • அடுத்த இச்செயல்திட்டங்கள் மேலும் செம்மைப்படுத்திக் கற்பிப்பது
  • அனைத்துப் பாடங்களுக்குக் குறைந்தது ஒரு செயல் திட்டமாவது செயல்திட்டங்களை உருவாக்கிக் கற்பிப்பது
  • புதிய புதிய செயல்திட்டங்களை உருவாக்கும்போது உள்ளுர் சூழலைக்கொண்டு சூழ்நிலையியல் செயல்திட்டங்களை வடிவமைப்பது
  • செயல்திட்டங்கள் மூலம் சூழ்நிலையியல் பாடத்தினை வேறு சில பாடங்களுடன் தொடர்படுத்திக் கற்பித்தல்.

Teacher: மு. ராமகிருஷ்ணன், தொடக்கப்பள்ளி ஆசிரியர்,, அரசு தொடக்கப் பள்ளி, சுல்தான் பேட்டை

Grade: 
5

Subject: 
EVS

Term: Term 3

0
No votes yet
0
Post a comment