Towards a just, equitable, humane and sustainable society

களப்பயணம் மூலம் வரலாற்றுச் சிந்தனையை வளர்த்தல்

0
No votes yet
0
Post a comment

வரலாற்றுப் பாடம் என்பது வரலாற்று நிகழ்வுகளையும் அவற்றைச் சார்ந்த தகவல்களையும் மாணவர்களுக்குத் தெரியவைப்பது அல்ல. மாறாக, வரலாற்று மனப்பான்மையை மாணவர்களிடையே வளர்ப்பது.

வரலாற்று மனப்பான்மையை வளர்ப்பதற்குப் பல செயல்பாடுகளை வகுப்பறைகளில் பயன்படுத்துகின்றோம். அவற்றில் களப்பயணமும் ஒன்றாகும்.

முன்னுரை

நாகரீகம் தோன்றியதிலிருந்து மனிதன் தன் மூதாதையரின் வாழ்க்கை ரகசியங்களை அறிவதில் ஆவல் காட்டி வந்துள்ளான். இந்த ஆவல் தோன்ற காரணம் யாது? நாம் இன்று வாழும் உலகம் நமது குறுகிய அனுபவங்களின் எல்லைக்குள் கட்டப்பட்டுள்ளதன்று. வரலாறு என்பது நிகழ்காலத்திற்கும், கடந்த காலத்திற்கும் இடையே நிகழும் முடிவற்ற உரையாடல் என்பதாகும். வரலாற்று மனப்பான்மையை மாணவர்களிடையே வளர்க்க வேண்டுமாயின் வரலாற்றின் முக்கியத்துவத்தை முதலில் உணர்த்தி நம் அன்றாட வாழ்வில் செய்யும் ஒவ்வொரு நிகழ்வும் வரலாற்றுடன்  தொடர்புடையதே ஆகும் என்பதை விளக்க வேண்டும்.

நோக்கங்கள்:

பள்ளிகளில் தொன்றுத்தொட்டு நடந்து வருவது வாய்மொழியாகக் கற்பிப்பது ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் படங்களைக் காண்பிப்பது, அது போன்ற மாதிரிகள் செய்துவருவது மற்றும் வீர தீர அரசர்களைப் பற்றி உணர்வுப் பூர்வமாக நடிப்பது போன்றவை மாணவர்களின் வரலாற்றுச் சிந்தனையை வளர்க்கும். இவற்றைத் தவிர மாணவர்களை நேரடியாக வரலாற்றுத் தளத்திற்கு அழைத்துச் செல்வது அவர்களை வரலாற்று காலத்திற்கே அழைத்துச் செல்லும் உணர்வைக் கொடுக்கும் என்பதால் எம்பள்ளி மாணவர்களைத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் அழைத்துச் செல்ல முடிவெடுத்தோம்.

களப்பயணம்:

6,7,8 வகுப்பில் மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடத்தில் மதங்களின் வளர்ச்சியும், கோயில்களின் அமைப்புகள் பற்றிய பாடப்பொருளினை விளக்குவதற்காகவும், மாணவர்கள் கோயில்கள் பற்றி நேரடியாக அறிந்து கொள்வதற்காகவும், அவர்களுக்குப் புதுமையான அனுபவத்தைப் பெறுவதற்காகவும், மதங்களின் வளர்ச்சியைப் பற்றி கூறுவதற்ககாகவும், மாணவர்களைத் திருப்பூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள காங்கயம் பகுதிக்கு அழைத்துச் செல்ல, முதலில் சென்ற ஊர் பரஞ்சேர்வழி. இவ்வூரின் சிறப்பு கோயில்கள் அமைந்திருப்பதே. மிகவும் பிரசித்திப் பெற்ற ஈஸ்வரன் கோவில். இக்கோயில்களைச் சுற்றிலும் புத்தமத சிலைகளும், ஜைனமத படுக்கைகளும் அமைந்திருந்தது. இவற்றைப் பார்த்த மாணவர்கள் பல்வேறு வகைப்பட்ட வினாக்களை எழுப்பினார்கள்.

வினாக்கள் :

  1. ஈஸ்வரன் கோவிலுக்கு இடையில் புத்தமத சிலைகள் எவ்வாறு    தோன்றியது?
  2. புத்தமதமும், இந்துமதமும் ஒன்றா?
  3. முதலில் ஈஸ்வரன் கோவில் தோன்றியதா? இல்லை புத்த சிலைகள் தோன்றியதா?
  4. இப்போது புத்த சிலைகள் சிறப்பாக இல்லாதிருப்பதற்கு என்ன காரணம்?

நாங்கள் எதிர்பார்த்த கற்றல் விளைவு ஏற்பட்டது. இவ்வினாவிற்கான விளக்கங்களை மாணவர்கள் தாங்களே நேரடியாகக் கேட்டு விளக்கம் பெற்றனர்.

முதலில் இப்பகுதியில் புத்த சிலைகள் தான் தோன்றியது. புத்தமதத்தைச் சார்ந்தவர்கள் அவ்வூரில் உள்ள மக்களுக்குப் பல்வேறு உதவிகள் செய்துவந்தனர். புத்தர்களின் செல்வாக்கு மிகுந்தது. தங்களுடைய மதம் வலுவினை இழந்துவிடும் என்று பயந்த மக்கள் ஈஸ்வரன் கோயிலைக் கட்டினார்கள். அதற்கு விழாவும் எடுத்தார்கள். முதலில் தோன்றியது புத்தசிலைகள் என்பதை விளங்கிக் கொண்டதோடு, வரலாற்று உண்மையையும் மாணவர்கள் புரிந்துக் கொண்டனர்.

மடவிலாகம்

பச்சோட்டு ஆவுடையார் கோவிலில் மாணவர்களுக்கு மேலும் ஒரு அற்புதமானக் காட்சி காத்திருந்தது. மடவிலாகம் ஊரில் இருந்த பச்சோட்டு ஆவுடையார் கோவிலில்  மிக உயர்ந்த தீபகம்பம் உள்ளது. இக்கோவிலின் ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்பானையில் சாம்பல் எழும்புவது அதன் சிறப்பாகும்.

இக்கோவிலில் இரண்டு சுயம்புலிங்கம் உள்ளது. பச்சை நாயகி அம்மை இவருடன் இணைந்துஅருள்பாலிப்பது மிகவும் சிறப்பாகும். இவ்விளக்கங்களைப் பெற்ற மாணவர்கள் எழுப்பிய வினாக்கள் பின்வருமாறு.

  • பச்சோட்டு என்ற சொல்லின் பொருள் யாது?
  • ஆற்றின் நடுவில் மண்பானை வருமா?
  • மண்பானையைப் பார்த்தவர்கள் யார்? யார்?
  • மேலே வரும்பொழுது மண்பானை உடைந்துவிடுமா?
  • தீபகம்பம் என்றால் என்ன?
  • சுயம்புலிங்கம் என்றால் என்ன?

வெள்ளைக்கோவில்:

இப்பகுதியில் உள்ள தெய்வத்தின் சிலையானது ஒரே ஒரு கல்லினால் ஆனது. இந்த வெள்ளைக் கல் அவ்வூருக்கு வெளிச்சத்தினை அளிப்பதாகக் கூறுகின்றனர். வெள்ளைக்கல் எனும் பெயரே மருவி வெள்ளைக் கோவில் என்றாயிற்று.

ஒவ்வொரு இடத்திற்கான பெயர் என்பது ஏதோ தானாகத் தோன்றியது அல்ல. வரலாற்றின் பின்னனியில் தோன்றியதே. சிறப்பினைக் கொண்டே பெயரிடப்படுகிறது. மயிலின் பெயரைக் கொண்டே மயிலிரங்கம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒரே கல்லினால் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பு என்றால்,  மற்றொரு சிறப்பு, விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்டது. இதற்கு காரணம், இவர்கள் வைணவ மதத்தின் மீது கொண்ட பற்றே; ஒற்றைக் கல்லால் ஒளி வீசிக் கொண்டிருக்கும் சிற்பம்.

இவற்றைக் காங்கேயம் மக்கள் பெற்றுள்ளச் சிறப்பு என்றே கூறலாம். காங்கேயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முத்து, பவளம், போன்ற விலை உயர்ந்த கற்களுக்குப் புகழ் பெற்று விளங்குகிறது. இங்குள்ள கற்களால் செய்யப்படும் ஆபரணங்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பெண்களால் இவை விரும்பி அணியப்பட்டுள்ளது. வெள்ளைக்கல் என்பதே மருவி இன்று வழக்கில் உள்ள வெள்ளைக்கோயில் என்று மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் செயலிற்கும் ஒரு காரணம் இருக்கின்றது என்பதை உணர்ந்தனர். (உ.தா. புத்தமதங்களின் எழுச்சியே கோயில்கள் தோன்றுவதற்குக் காரணம்)

ஆசிரியருக்கானச் செயல்பாடுகள்:

1. மாணவர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் உள்ளூரில் உள்ள கோவிலுக்கு அழைத்துச்சென்றால் சிற்ப கலைகளைப் பற்றி நன்கு அறிந்து கொள்வர்.

2. அழைத்துச் செல்வதற்கு முன்பாக மாணவர்களுக்கு விளக்கங்கள் கொடுக்க வேண்டும். செல்லும் இடங்களில் பார்த்தவற்றைப் பற்றி குறிப்புகள் எடுக்க வேண்டும்.

3. இவ்வாறு அழைத்துச் செல்வதற்குப் பொருட்செலவு ஆகும் எனில், அருகில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

4. மாணவர்களிடம் ஏன்? எதற்கு? என்ற  கேள்விகளை ஆசிரியரும் கேட்க வேண்டும் மாணவர்களையும் கேட்கச் செய்ய வேண்டும்.

வரலாற்றுச் சிந்தைனையை வளர்ப்பதற்கான வழிகள் :

பள்ளிகளில் அறிவியல் கழகம், தமிழ் மன்றம் போன்றவை நடைமுறையில் உள்ளன. இதேபோன்று வரலாற்றுக் கழகங்கள் ஏற்படுத்த வேண்டும்.

மாதம் ஒரு முறையோ, அல்லது வருடத்திற்கு மூன்று முறையோ அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

மாணவர்களிடம் புதுமையானச் சிலைகளை உருவாக்கச் செய்தல்:

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீரர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடி அந்த நாளில், அவர்களைப் பற்றிய கருத்துக்களை மாணவர்களைப் பேசச் செய்தல் போன்றவற்றின் வழியாக மாணவர்களிடையே வரலாற்றுச் சிந்தனையை வளர்க்கச் செய்யலாம்.

ஒவ்வொரு நாளும் ஒரு வரலாற்றுச் செய்தியைக் கூறுதல்.

முடிவுரை:

வரலாற்றுப் பாடமானது புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு நேரடியாக அனுபவத்தினை வழங்கினால், அவர்களுடையச் சிந்தனைப் போக்கு மேம்படும். மாணவர்களை, இது போன்ற நெடுந்தரைப் பயணங்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள இடங்களுக்கும் அழைத்துச் செல்லலாம்.

வரலாற்றுச் சிந்தனையை வளர்ப்பதற்கு நேரடியாகச் சென்றுதான் பார்க்க வேண்டும் என்பதில்லை. ஆசிரியருக்குக் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி எளிதில் கற்பிக்கலாம். (உ.தா) அவர்கள் வீட்டில் இருக்கும் பழமையானப் பொருட்களைச் சேகரித்து வரச்சொல்லுதல்; வயதானவர்களிடம் செய்திகளைக் கேட்டறிதல் போன்றவை).

Author: Jayanthai

Subject: 
Social Science

Term: Term 3

0
No votes yet
0
Post a comment