Towards a just, equitable, humane and sustainable society

பக்தி மற்றும் சூபி இயக்கங்கள் – பகுத்தறிவு வளர்த்தல்

0
No votes yet
0
Post a comment

பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய கிராமம், கல்வியிலும் கூட. எவ்விதமான வசதிகளும் இல்லாத கிராமம். விடத்தகுளம் சுற்றியுள்ள புதூர், நல்லதரை, அகத்தாகுளம் ஊர்களில் இருந்து மாணாக்கர்கள் 4.கி.மீ நடந்து வந்தே படிக்கின்றனர். சாலை, போக்குவரத்து, மருத்துவ வசதிகளும் இல்லை.

பள்ளியின் சவால்கள் :

  • பெண் குழந்தைகளின் கல்வி பெரும்பாலும் கேள்விக்குறியே. 18 வயதானவுடன் திருமணம் செய்து விடுகின்றனர். பெண்கல்வி மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது.
  • ஆண்களும் பெரும்பாலும் உயர்கல்விக்குச் செல்வதில்லை. விவசாயம், கூலி வேலை, பருத்தி ஆலைகள் போன்றவற்றில் வேலைகளுக்குச் செல்கின்றனர்.
  • எல்லா கிராமங்கள் போலவே, இக்கிராமமும் மூட நம்பிக்கைகள் நிறைந்து காணப்படுகிறது.

சமூக அறிவியல்  ஆசிரியராகப் பணிச் சார்ந்த ஆர்வங்கள்:

சமூக அறிவியல் ஆசிரியராக எப்பொழுதும், ஏதேனும் புதுமையான முறையில் சமூகம் பற்றிய புரிதலை மாணாக்கர்களிடம் கொண்டு செல்ல விரும்புவேன்.

வரலாற்று நிகழ்வுகளைப் பெரும்பாலும் கதைகளாகவும், நடப்பு நிகழ்வுகளுடனும் தொடர்புபடுத்தியும் கற்பிப்பேன். புவியியல் பாடங்கள் பெரும்பாலும் செயல் விளக்க முறையிலே கொண்டு செல்வேன். குடிமையியல் பாடத்திற்குக் கலந்துரையாடல் மற்றும் விவாத முறைகளே ஏற்றவையாகக் கருதுகிறேன். செயல்திட்டங்கள் மற்றும்  செயல்பாடுகளுக்கு, அவர்கள் அன்றாடம் சந்திக்கும் விசயங்கள், செய்தித்தாள்கள் மற்றும் நூலகத்திலிருக்கும்,  புத்தகத்தில் இருக்கும் விசயங்களையே கொடுக்கின்றேன். எடுத்துக்காட்டாக, விவசாயம் சார்ந்த பாடத்திற்காக உள்ளுரில் உள்ள விவசாயிகளிடம் விவசாயம் சார்ந்த வினாக்களும், கணக்கெடுப்புகளும் இருக்கும்.

பக்தி மற்றும் சூஃபி இயக்கங்கள் - கலந்துரையாடல்

இப்பாடத்திற்கான கற்பித்தல் முறையைக் கலந்துரையாடல் வழி தொடங்கினேன். பாடப்புத்தகத்தில், நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றிய சில தகவல்கள், தென்னிந்தியாவில் தோன்றிய பக்தி இயக்கங்கள் வட இந்தியாவில் எவ்வாறு பரவியது போன்ற தகவல்களால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் உண்மை காரணங்களையும், இலக்கியத்தையும் மறைத்து, வெறும் தகவல்களால் என்ன விதமான சிந்தனை தூண்டப்பெறும் என்று தோன்றியது.

அதனால்    முதல் வினாவாகப் பக்தி என்றால் என்ன? பக்தி எனும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனத் தலைப்பில் இருந்தே ஆரம்பித்தேன். ஒரு வினாதான்; ஆனால், வகுப்பிலிருந்து பல பதில்கள் வந்த வண்ணமே இருந்தன. பெரும்பான்மையான விடைகள், கோவிலுக்குச் செல்லுதல், காணிக்கை அளித்தல், மொட்டையடித்தல், பால்குடம் ஏந்துதல், கிடா வெட்டுதல் எனக் கிராமத்தின் பக்தி பக்கங்களைக் காட்டினர்.

இரண்டாம் வினாவாக ஏன் கடவுளை வணங்குகின்றோம்? கடவுள் எனும் கருத்து எப்படி, ஏன், எப்பொழுது உருவாகியது? மதம் என்றால் என்ன? எனச் சிறிது கடின கேள்விகளைத் தொடுத்தேன். இவற்றிற்குப் பதில் திகைப்பு மட்டுமே. ஏனெனில், இப்படியும் கேள்வி கேட்கலாமா? கடவுள் எனும் கருத்து உருவாக்கப்பட்டதா? என முதலில் எம் மாணாக்கர்களால் ஏற்றுக் கொள்ள இயலாததை அவர்கள் முகங்கள் காட்டின.

மூடநம்பிக்கையும் – அறிவியலும்.

என் பள்ளி அமைந்த கிராமம், மூடநம்பிக்கைகளிலும், பழமைவாதத்திலும் ஊறியுள்ளது. எல்லா கிராமங்களும், ஏன் மெத்த படித்தவர்களும் கூட சூரியக் குடும்பத்தைப் பற்றி படித்துவிட்டு, ஜோசியக் கட்டங்களுக்குள் அதே சூரியக் குடும்பத்தை நம்பி, தம் வாழ்க்கையை ஒப்படைக்கின்றனர். இதனால் மாணவர்கள் வளரும் சூழலே அறிவியலுக்குப் புறம்பாகவும், பகுத்தறிவிற்குப் புறம்பாகவும் இருக்கும்போது, பக்தி சார்ந்த அப்பாடத்தைப் பகுத்தறிவைப் பரப்பும் ஒரு கருவியாக்க முயற்சிசெய்ய முற்பட்டேன்.

மனிதர்களின் பயம், இயற்கைச் சார்ந்த புதிர்கள் அறிய இயலாத ஆதிகாலத்தில் தன்னை விட வலிமையானதை வணங்கியும், பணிந்தும் வழிபட்டனர். பின் நாகரீகம் வளர்ச்சியுற்று, எல்லாம் எல்லோருக்கும் எனும் கோட்பாடு உடைந்து, மன்னராட்சியும், நிலப்பிரபுத்துவமும், பேரரசும் எழுந்த போது, மக்களை அடக்கி ஆள கடவுள் மதம் ஆகியவை கருவியாக எவ்வாறு பயன்பட்டது என்று நான் புரிந்து கொண்டதை விவரித்து, நீங்களும் இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளின் உண்மையைப் புரிந்துகொள்ள முற்படுங்கள் என்று கூறினேன். இனி, மாணவர்களர்களின் பங்களிப்பிற்கேற்ற வகையில் விவாத முறையைக் கையிலெடுத்தேன்.

பக்தி என்றால் என்ன?

பக்தி இயக்கம் பரவிய காலத்தில், எழுதப்பட்ட இலக்கியத்தின் படி, சிவனடியார் கேட்டார் என்பதற்காகத் தான் பெற்ற மகனைச் சமைத்துக் கொடுத்த கதை, நீரில் விளக்கெரிந்த கதை மற்றும் கோவிலில் கீழே இருந்த பூவை நுகர்ந்ததற்கு ராணியின் மூக்கும், கைகளும் அறுக்கப்பட்ட கதைகளைக் கூறி, இதுவே பக்தியாக, இலக்கியம் மூலம், கதைகள் மூலம், நாடகங்கள் மூலம் மக்களிடையே நூல்களாகவும், தொலைக்காட்சி தொடராகவும் உள்ளன என்று விளக்கினேன்.

இக்கதைகளில் கூறப்பட்ட பக்தியைப் போல, கடவுள் உங்கள் முன் தோன்றி, உங்களின் பெற்றோரை என்னிடம் கொடுங்கள், என்றால் என்ன செய்வீர்கள்? எனக் கேட்டேன். இக்கேள்வி அவர்களுக்குச் சிரிப்பை வரவழைத்தது. பெரும்பாலான குழந்தைகள் அதெல்லாம் தர முடியாது என்று கூச்சலிட்டனர்.

ஏன்? நம்மை படைத்தது கடவுள் எனில் அவரிடமே, அவருக்குரியவர்களை கொடுப்பது தானே சரி? என்றேன். அதுவரை விளையாட்டுத்தனமாக இருந்த இமைகள் மறைந்தது, என்னை குறுகுறுப்பாகப் பார்க்க ஆரம்பித்தனர்.

இப்போது ஒரு கலகக்குரல், வகுப்பில் நான் கூறும் கருத்திற்கு எதிர்கருத்து வரும்போதுதான் வகுப்பில் பல சிந்தனைகள் உருவாகக் காரணமாகின்றது.

அதனால், மாணவர்களாகவே, இனி விவாதத்தை எடுத்துச் செல்லும் விதமாகச் சேக்கிழார் தொகுத்த பெரிய புராணத்தில் உள்ள 63 நாயன்மார்கள் கதைகளைக் கூறி, குழுவாகவோ அல்லது தனியாகவோ நடிக்குமாறு அறிவுறுத்தினேன். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கதை வீதம் கூறி, பேச்சு நடையிலே எளிமையாக நடித்துக் காட்ட வேண்டும். அடுத்ததாக, நடிக்கப்பட்ட கதையின் மீது, விவாதங்களும், வினாக்களும் மற்றவர்கள் எழுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.

நாடக வடிவில் - நாயன்மார்கள்

மாணவிகளில், ஆர்வமும், துடிப்பும் உடைய முனீஸ்வரி என்பவர் சிறுதொண்டர் கதையை நடித்துக்காட்டினார். சிவனடியாருக்கு உணவு பரிமாற, அவரின் விருப்பப்படி, தான் பெற்ற பத்து வயது மகனை அறுத்து, சமைத்தப்பின், அவரின் பக்தியைப் பார்த்து வியந்து, சிவன் அருளால் மறுபடியும் உயிர் வந்ததாகக் கதை முடிவு பெற்றது. மாணாக்கர்கள் பட்டாசு போல் பல வினாக்கள் கேட்டனர். பக்தியின் பொருட்டு ஒரு மனித உயிரைக் கொல்லாமா? போன உயிர் எப்படி வரும்? என ஆர்வமுடன் கேட்டனர். என் முக்கிய நோக்கமான பகுத்தறிவை நோக்கி மாணவர்கள் மெல்ல நகர்ந்தனர். இதுவே நல்ல தொடக்கம்.

  

அடுத்து தேவகி, தைரியமான பெண்; கண்ணப்ப நாயனார் கதையினைத் தனிநடிப்பாக நடித்துக் காட்டினார். நடிப்பிற்கு பின் விவாதத்தில், நிறைய கேள்விகள் எழுந்தன. ஏன் கோவிலில் கறி படைக்கக்கூடாது? நாங்கள் கிடா வெட்டிதான் குலதெய்வத்தை வழிபடுகிறோம்? கண்களைத் தோண்டி, எப்படி அறுவை சிகிச்சையின்றிப் பொருத்த முடியும்? எனக் கேள்விகளால் நிரம்பியது என் வகுப்பறை.

அதிபத்தர் கதையில், வறுமையில் உழலும் மீனவனாக இருந்தாலும், வழக்கப்படி தனக்குக் கிடைத்த முதல் மீனை, அதுவும் தங்கமீனைக் கோவிலில் படைத்து, நாயன்மாராக உயர்கிறார். பிரகாஷ் என்கிற மாணவர், நான் சிந்திக்காத கோணத்தில் கேள்வியொன்றை முன்வைத்தார். கண்ணப்பர் கதையில், கோவிலில் மாமிசம் படைக்கக்கூடாது எனக் கூறி, அந்தணர் தீட்டு கழிப்பார் எனப் பார்த்தோம். ஆனால் அதிபத்தர் கதையில், கோவிலில் தங்கமீன் மட்டும் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? என்று கேட்ட கேள்வியால், மகிழ்ச்சியால் என் மனம் துள்ளியது. எவ்வளவு கூர்மையாக, வெவ்வெறு நாளில் நிகழ்ந்த கதையினைத் தொடர்புப்படுத்தி, கேள்வி எழுப்பியுள்ளார். இரு கதையின் முரண்பாடுகளையும் எளிமையாகச் சுட்டிக் காட்டிவிட்டார்.

பாடமும், நாடகமுமாக மாணாக்கர்களே வினாக்களையும் எழுப்பி, விடையையும் விவாதித்தனர். என் பணி தொகுத்து வழங்குவதாக மட்டுமே இருந்தது.

தாக்கங்கள் :

வகுப்பில் ஒரு குரல் மட்டும் ஒலித்தது மாறி, பல குரல்களும், வினாக்களும் தன்னிச்சையாக எழுந்தன.

வினாக்கள் வகுப்பறைவிட்டு வெளியேறி, வீட்டிற்குள் நுழைகையில், மாணவர்களின் பெற்றோரின் கோபம் அவர்களுக்கு வித்தியாசமாகப்பட்டது. ஏனெனில், நான் கேள்வி எழுப்பத் தூண்ட, வீடுகளில் அவர்கள் கேள்விகள் எழுப்ப மறுக்கப்பட்ட, சுதந்திரத்தின் பொருள் புரிய ஆரம்பித்தது.

இப்பாடத்தின் கற்றல் அனுபவத்திற்குப் பிறகு, பின்வந்த வகுப்புகளில் எங்களிடையே தர்க்கரீதியான உரையாடலும், அறிவுப் பார்வையும் மேலெழும்பியது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான நுழைவுச்சீட்டுக்குப் பூஜை செய்தபோது, நேரடியாக என்னிடம் வந்து கடின உழைப்பின்றி பூஜை சடங்குகளால் பலன் பெற முடியுமா என்று குறும்பாகக் கேள்வி கேட்டே அகன்றனர்.

 

பெயர் : ச. முத்துகுமாரி

பள்ளியின் பெயர் : அரசு உயர்நிலைப்பள்ளி, விடத்தாகுளம்

திருச்சுழி, அருப்புக்கோட்டை விருதுநகர்.

Subject: 
Social Science

Term: Term 3

0
No votes yet
0
Post a comment