Towards a just, equitable, humane and sustainable society

ஜனநாயகம் – பாடமும் மாணவ பங்களிப்பும்

0
No votes yet
0
Post a comment

படிப்பதுவேறு நடப்பதுவேறாக இருக்கக்கூடாது மாணவர்கள் வளரும் காலத்தில் நல்ல ஒழுக்கங்கள் குடிமைப் பண்புகள் பொருந்தியவர்களாக வளரவேண்டும். சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும். சமுதாயத்தை முன்னின்று வழி நடத்தும் ஆற்றல் மிக்கவர்களாக உருவாகவேண்டும்.

6 ம் வகுப்பு, முதல் பருவத்தின் சமூக அறிவியல் பாடத்தில் வரும் இந்த வரிகள் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் பலப்பல. அப்படி உருவாக்கி இருக்கிறோமா? பள்ளியும், சமுதாயமும் ஒன்றுபோல் இருக்கிறதா? அல்லது படிப்பது வேறாகவும் நடப்பது வேறாகவும் இருக்கிறதா? இப்படி எத்தனையோ கேள்விகளை என்னுள் எழுப்பியது. இந்தக் கருத்தினைச் சோதனைக்கு உள்ளாக்கினால் என்ன என்ற எண்ணம் முளைவிட்ட அந்தத் தருணம்தான் இந்தக் கட்டுரையின் கருத்தாக அமைந்துள்ளது.

குடிமையியலும் – ஜனநாயகமும்

ஒரு சமூக அறிவியல் ஆசிரியர் என்ற வகையில், குடிமையியலைப் போதிப்பதன் முக்கிய நோக்கம், மாணவர்கள் மிகச்சிறந்த குடிமக்களாக உருவாக வேண்டும் என்பது தான் என்று எண்ணுகிறேன். நாளைய உலகை ஆளப்போவது இன்றைய குழந்தைகள் தான். எனவே அவர்கள்  மக்களாட்சியின் மாண்பினைப் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும், மக்களாட்சியின் அடிக்கல்லான தேர்தலைப் பற்றியும், ஜனநாயகம் பாடத்தின் மூலம்  அறிய வைக்க முற்பட்டேன். 6ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்புவரை ஏறக்குறைய எல்லா வகுப்பிலுமே மக்களாட்சியின் தத்துவம் என்பது ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டேதான் வந்துள்ளது. எனவே ஒரு ‘மாதிரி தேர்தல்’ நடத்தினால் என்ன? என்ற எண்ணம் உதிக்க அது பற்றி மாணவிகளிடம் உரையாடினேன்.

மாணவிகளுக்கான தேர்தல்

மாணவிகள் உடனே மிகுந்த மகிழ்ச்சியோடும் உற்சாகத்துடனும் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் தயாரானார்கள். நம்முடைய வகுப்பறையில் ‘உங்கள் வகுப்புத்  தலைவரை நீங்களே தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுத்தால் என்ன?’ என்ற எண்ணத்தை முன் வைத்தேன். மாணவர்களின் ஆர்வம் என்னை மட்டுமல்ல என் சக ஆசிரியர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் புரட்டிப் போட்டது.

என் கருத்தை மாணவிகளிடம் முன்வைத்து, அன்றே யார் யார்?  தேர்தலில் போட்டியிட விருப்பப்படுகின்றார்கள் என்று உடனடியாக முடிவு செய்து 4 மாணவிகளை வேட்பாளர்களாக அறிவித்தனர்.  அவர்களுக்குரிய சின்னத்தையும் தேர்ந்தெடுத்து அதைக் கரும்பலகையில் வரைந்து வைத்தனர்.  4 வேட்பாளர்களும் தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்திய பொழுது “ஒருநாள் கால அவகாசம் கொடுங்கள் மிஸ் நாங்கள் தயார் செய்துகொள்கின்றோம்,” என்று கோரசாகக் கேட்டனர்.

வாக்குச் சேகரிப்பு:

அடுத்த நாளும் வந்தது. என்னை விட மாணவர்கள் வெகு ஆர்வத்துடன் காத்திருந்தனர். சமூக அறிவியல் பாடவேளையும் வந்தது. தேர்தல் களத்தில் நான்கு வேட்பாளர்களும் மிக அருமையாகப் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து ஆசிரியர்கள் வியந்து போனோம். நம்முடைய மாணவிகளிடம் இத்தனை திறமைகளா? அவர்கள் பேசிய விதம், சொன்ன விதம், சொன்ன கருத்துகள் என்று வகுப்பறையையே ஒரு கலக்கு கலக்கிவிட்டனர்.

நாம் நாளையே தேர்தலை வைத்துக் கொள்வோம் என்றதும் மாணவிகள் பலரும்  கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஒருமாணவி எழுந்து மிஸ் ஓட்டுப்போட்டால் அனைவரும் கையில் ‘அழியாத மை’ வைப்பார்கள் இல்லையா, அதுபோல் நாமும் செய்தால் என்ன? என்று கேட்டாள். அழியாத மைக்கு எங்கே போவது? மை வேண்டாம். நாம் மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தலாம் என்று மற்றொரு மாணவி கூறியதும் அனைவரும் சரி என்று கத்தினார்கள். உடனே நானும் சரி என்று கூறிவிட்டேன்.

தேர்தல் அறைக்கான ஆயத்தம்:

வகுப்பறையே வாக்களிக்கும் இடமாக மாற்றி மேசையில் வாக்கும் சேகரிக்கும் பெட்டியை வைக்க முடிவு செய்தனர். வகுப்பில் உள்ள அனைத்து மாணவிகளின் பெயரையும் எழுதி வேட்பாளர்களின் சின்னங்களை வரைந்து வாக்கு சீட்டுகள் தயாரித்தனர். வாக்களித்ததை உறுதிபடுத்தும் வகையில் கையில் அடையாளக் குறியிடுவதற்கு மார்க்கர் பேனாவைப் பயன்படுத்தினர். வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள், முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவிகளின் வாக்குப்பதிவிற்கு உதவ முயற்சி செய்தனர். பின்னர் அனைவருக்கும் வாக்களிக்கும் முறைப் பற்றி எடுத்துக்கூறி பயிற்சியும் செய்தனர். தேர்தலுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாகச் செய்து, ஏதோ திருவிழாவிற்குத் தயாராவது போன்ற தோரணையில் மாணவிகள் அனைவரும் காணப்பட்டனர்.

தேர்தல்:

மறுநாள் சூரிய உதயத்திற்காக மாணவர்களோடு சேர்ந்து நானும் காத்திருந்தேன். மட்டில்லா மகிழ்ச்சியோடு மறுநாள் மாணவர்களே தேர்தலை நடத்தியும் முடித்து விட்டனர். உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடத்தி வெற்றி பெற்றவரை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர் மாணவர்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்க இரண்டு ஆசிரியர்களை அழைத்து மாணவர்களின் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அனைத்து மாணவிகளின் முகத்திலும் ஒரே பதட்டம்.  வேட்பாளர்களின்  நிலையோ அதைவிட மோசம். அப்படி ஒரு பதட்டத்தை இதுவரை மாணவிகளிடம் பார்த்ததில்லை.

மாதிரி சட்டபேரவை:

வெற்றியை அறிவித்ததும் மாணவிகளிடையே ஒரே ஆரவாரம் தான். வெற்றி களிப்பு முடிந்தவுடன் வெற்றி பெற்றவர்களுக்குப் பதவியேற்பு விழாவும் நடத்தி ஒரு மாதிரி சட்டபேரவையை உருவாக்க நினைத்தோம்.

அதன் படியே ஒரு மாதிரி சட்டப்பேரவையை நடத்தினோம். கல்வி அமைச்சர், சட்ட அமைச்சர் நலத்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளுக்குத் தேர்தல் நடந்தது. அதுமட்டுமல்ல ஒரு மாதிரி நீதி மன்றத்தையும் வடிவமைத்தோம். அதன்படி மாணவிகள் செய்யும் தவறினைப் பட்டியலிட வேண்டியது அல்லது பதிவு செய்ய வேண்டியது சட்ட அமைச்சரின் பொறுப்பு மேலும் அந்த பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அங்கு மாணவர்களாலேயே நீதிவிசாரணை நடத்தப்பட்டு யாருக்கு எவ்வாறு நீதி வழங்கலாம் என்பதும் முடிவெடுக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டது.

தலைமயாசிரியரின் வாக்குறுதி:

இந்தச் செயல்பாடுகளைப் பார்வையிட வந்திருந்த எங்கள் தலைமை ஆசிரியைக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மாணவிகள் மிகவும் கம்பீரமாகப் பேசுகிறார்கள். நான் கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கவில்லை. இப்பொழுதே  நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன் என்று கூறி அடுத்த கல்வி ஆண்டில் நம் பள்ளி முழுமைக்கும் சிறப்புத்  தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறியதும் மாணவிகளின் கரவொலி அடங்குவதற்குச் சிறிது நேரம் பிடித்தது.

நடைமுறையில் ஜனநாயகம்:

இப்படித் தேர்தல் ஒருபுறம் நடந்து முடிந்தாலும் இன்னொரு முயற்சியாக மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் ஒன்றைக் கொடுத்தேன். அது என்னவென்றால் உண்மையிலேயே நடப்புத் தேர்தலில் ஓட்டுப்போட்ட பொது மக்களிடம் ஒரு மூன்று கேள்விகளைக் கேட்டு அதற்கானப் பதிலை எழுதிவர வேண்டும் என்று பணித்தேன். அந்தக் கேள்விகள்:

  • எந்தக் காரணத்திற்காக வாக்களித்தீர்கள்?
  • அந்தக் காரணம் நிறைவேறியதா?
  • ஜனநாயகம் என்றால் என்ன?

பிள்ளைகள் கொண்டு வந்த பதில்களைப் பார்த்ததும் கொஞ்சம் பதறித்தான் போனேன். ஒவ்வொன்றும் அப்பட்டமான உண்மை வார்த்தைகள். படிப்பதற்கும் உண்மையில் நடப்பதற்குமான வேறுபாடுகளைத் தெள்ளத் தெளிவாக உணர முடிந்தது. ஜனநாயகத்தின் மாட்சிமையைப் பற்றி நாம் மாணவர்களுக்குப் போதிப்பது ஒருபுறம் இருக்க உண்மையில் நம் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்பது மறுபுறம் பார்க்கும் பொழுது மனம் கணக்கத்தான் செய்கின்றது. இன்னும் அதிக அளவு ஆற்றலோடு நாம் பணியாற்ற வேண்டி இருப்பதை என்னால் உணர முடிந்தது.

பாடங்களை மதிப்பெண்களுக்காக மட்டும் நடத்துவது கூடாது என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்ட  தருணம் இதுதான். மதிப்பெண்களுக்காக மானுடம் காக்க நாம் வளர்க்க வேண்டிய மகான்கள் அவர்கள் என்பதை நாம் உணர்ந்து நடந்து கொண்டால், நிச்சயம் படிப்பது வேறு நடப்பது வேறு என்று இல்லாமல் படிப்பது போலவே நடப்போம், நடப்பதையே படிப்போம் என்ற நிலை நிச்சயம் உருவாகும்.

Subject: 
Social Science

Term: Term 3

0
No votes yet
0
Post a comment