Towards a just, equitable, humane and sustainable society

வெற்றியின் இரகசியம்

நோக்கம்: அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்

மடுகரை அரசு தொடக்கப்பள்ளி 1964 - ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2015 - ம் ஆண்டு இப்பள்ளியில் தலைமையாசிரியையாக பொறுப்பேற்றேன். எங்கள் பள்ளியில் 2014 - 15 ம் கல்வி ஆண்டில் 270 என்று இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2015 - 16 கல்வியாண்டில் 340 ஆக உயர்ந்தது. எங்கள் பள்ளியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில்கின்றனர், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரின் குழந்தைகள் அதிகமாக உள்ளனர். எங்கள் பள்ளியில் தற்போது 13 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் வரும்போது கூடவே வரத்தொடங்குவது இரண்டரை (21/2) / மூன்றரை (31/2)வயதுள்ள குழந்தைகளின் பெற்றோரின் மனக் குழப்பம், பயம் மற்றும் கவலை. தன் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் முன் மழலையர் (pre KG) மற்றும் மழலையர் (L.K.G) வகுப்பில் இடம் கிடைக்கப் போராட வேண்டியதை நினைத்து ஏற்படும் பதட்டம்தான். அது தவிர உறவினர்கள், நண்பர்கள் என்று ஆள் ஆளுக்குக் கேட்கும் கேள்வி, “எந்தப் பள்ளியில் சேர்க்கப் போறீங்க? பணத்தை ரெடி பண்ணீட்டீங்களா?” என்பது தான். ஆனால் ஒரு பள்ளியில் இடம் கிடைக்க உண்மையில்  என்ன தேவை? என்பதைப் பற்றி முழுமையாக அறிவது என்பது ஒரு புரியாத புதிராகவே இன்றும் உள்ளது.

இன்றைய கல்விச்சூழல்:

இன்று பள்ளிப்படிப்பு என்றாலே நடுத்தர வகுப்பினரைப் பொருத்தவரை மெட்ரிக் பள்ளிகள் (அ) CBSE பள்ளிகள் என மாறிவிட்டது. இதனால் சில அரசுபள்ளிகளில் புதுவை அரசு CBSE ஆங்கில வழிக் கல்விமுறைத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதில் மடுகரை ஆரம்பப்பள்ளியும் ஓன்று. அதனால் பெற்றோர்கள் இப்பள்ளியை நாடி, சேர்க்கைக்கு வருகின்றனர். தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகின்றது, அரசு பள்ளிகளில் முன் மழலையர் வகுப்புகள் (pre.KG) இல்லாததால் சில தனியார் பள்ளிகள் இந்த முன் மழலையர் வகுப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

புதிய புதிய தனியார் பள்ளிகள் தெருவுக்கு ஒன்றாக முளைத்து கொண்டு வருகின்றது. இந்தச் சூழ்நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்பது ஒரு சாவலான காரியமாக உள்ளது. கடந்த ஆண்டு எங்கள் பள்ளியில் புதிய குழந்தைகளைச் சேர்க்க, தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும் அளவுக்கு எங்கள் பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க எண்ணி சில புதிய வழிமுறைகளைக் கொண்டு வந்தோம்.

அனுபவப் பகிர்வு

நோக்கத்தை அடைய மேற்கொண்ட முயற்சிகள்:

நாங்கள் 2015-16 ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கையை ஷூன் மாதத்தின் முதல் வாரத்தில் திட்டமிட்டோம். இரண்டு மூன்று தடவைகள் பெற்றோர்-ஆசிரியர் சங்க (PTA) உறுப்பினர் கூட்டத்திற்கு வருமாறு அழைத்தோம். கூட்டத்திற்கு வெறும் பத்து உறுப்பினர்கள் (பெற்றோர்கள்) மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த உறுப்பினர்களிடம் / பெற்றோர்களிடம் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிக்கப்படுத்த என்னென்ன செய்யலாம்? என்பதைப் பற்றி கலந்துரையாடினோம். சில பெற்றோர்கள் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த நாங்கள் கூறிய சில யோசனைகளை செயல்படுத்த முழுமையான ஒத்துழைப்பை அளிக்க முன்வந்தனர்.

அதிகமான எண்ணிகையில் புதிய மாணவர்களைப் பள்ளிக்குக் கொண்டுவரும் முயற்சிக்கு எங்கள் பள்ளி ஆசிரியர்கள் முதலில் சற்று தயக்கம் காட்டினர். ஏனென்றால் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாதது, மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானால் அவர்களால் முழுமையான கவனம் செலுத்த முடியாது என்று கருதினர். மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப மேல்அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்வார்கள் என்ற எனது (தலைமையாசிரியையின்) யோசனை ஆசிரியர்களை புதிய மாணவர் சேர்க்கைக்கு ஊக்குவித்தது.

 பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் எங்கள் பள்ளி ஆசிரியர்கள் சிலர் எந்தெந்த பகுதியில் பள்ளியில் சேர்க்கக் கூடிய பருவத்தில் மாணவர்கள் உள்ளனர் என்பதைத் தயார் செய்தனர்.

இதற்கு பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் நல்ல ஒத்துழைப்பை நல்கினர். முதல் கூட்டத்திற்கு வந்த அந்தப் பத்து உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்களிடம் மற்றும் ஊர் பொதுமக்களிடம் சென்று அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பற்றிக் கூறினார்கள். துண்டு பிரசுரங்கள் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டது. துண்டு பிரசுரங்களை வீடுகளில் சென்று சேர்த்தல், மதில் சுவர்களில் ஒட்டுதல், பெற்றோர்களிடம் அரசுப் பள்ளியைப் பற்றி கூறுதல் போன்றவற்றைச் செய்தனர்.

எங்கள் பள்ளி அமைந்துள்ள மடுகரைக்கு அருகில் புதுச்சேரி-தமிழ்நாடு எல்லை பகுதி உள்ளது. அந்தப் பகுதியில் நிறைய மாணவர்கள் வருவதற்குச் சாத்தியக் கூறுகள் உள்ளது என்று கணடறிந்தோம். அந்தப் பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் நேரில் சென்று எங்கள் பள்ளியைப் பற்றி கூறினோம். இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் மற்றும் இரண்டு பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் நேரடியாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்குதல் மற்றும் நேரில் சென்று பள்ளியைப் பற்றி விளக்கிக் கூறுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

பள்ளியில் சில மாறுதல்களைச் செய்தோம். பள்ளி நேரங்களில் மாணவர்களைப் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுபதிப்பது இல்லை என்ற முடிவை எடுத்தோம். மாணவர்கள் சிறுநீர் இடைவெளியின் போதும் மதிய உணவு இடைவெளியின் போதும் பள்ளி வாளகத்தை விட்டு வெளியே செல்வதற்குத் தடை செய்யப்பட்டது.

பள்ளியில் தினமும் காலையில் கூட்டம் நடத்துதல், மாணவர்களுக்குச் சிறிய உடற்பயிற்சிகள், நாளிதழ் வாசிப்பு, தினசரி வீட்டுப்பாடம், பெற்றோர்களிடம் வீட்டு படத்தைப் பற்றிக் கேட்கச் சொல்லுதல், மாணவர்களுக்கு அடையாள அட்டை, காலணிகள் (shoe), பெல்ட் அணியச்செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டத்தில் புதிய வழிமுறைகளை கொண்டுவரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாணவர்களிடத்து உள்ள பல்வேறு திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவித்தோம். உதாரணமாக, ஓவியம் வரையும் திறன், நடனம் ஆடும் திறன், விளையாட்டு போன்றவற்றில் திறமையாக உள்ள குழந்தைகள் அடையாளம் கண்டு பள்ளிகளிடையே நடைபெறும் போட்டிகளுக்குக் கலந்து கொள்ளச் செய்தோம். இதில் பல மாணவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று வந்தனர்.

பள்ளியில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் கலை நிகழ்ச்சிகளிலும் குழந்தைகளை மேடை ஏற்றிப் பெற்றோரை மகிழ்விப்போம். மேலும், இதுபோன்ற விழாக்களில் யாராவது ஒரு பிரபலமான மனிதரை அழைத்துப் பள்ளி விழாக்களில் பங்கேற்க வைத்து, பள்ளிக்கு விளம்பரத்தைத் தேடிக்கொண்டோம்

 

இதுபோக, தனியார் பேருந்துகளில் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து வீட்டிற்குப் பாதுகாப்பாக அனுப்புகின்றோம். இதனை பெற்றோர்கள்பெரிதும் விரும்புகின்றனர். இது பள்ளியில் முன்னேற்றத்தின் வெற்றிக்கு முதல் படியாக அமைந்தது.

மாணவர்களின் பெற்றோர்களைப் பள்ளியோடு இணைக்கப் பல்வேறு முயற்சிகள் செய்தோம். பள்ளியில் நடக்கும் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் அதில் பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்களின் முழுமையான பங்கீடு தேவை என்பதை உணர்ந்து அவர்களை இணைத்துக் கொண்டோம். ஆசிரியர் தினம், தூய்மை இந்தியா தினம், குழந்தைகள் தினம் என்று எது நடந்தாலும் பெற்றோர்-ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் இருப்பார்கள். இதுபோன்ற விழாக்கள் மற்றும் பள்ளியில் அடையாள அட்டை மற்றும் காலணிகள் வழங்குதல் போன்றவற்றிற்குப் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுபினர்களிடம் சிறிய நன்கொடைகள் கேட்டு பெருவோம். அவர்களின் நன்கொடைகள் சிறியதாக இருப்பினும் அவர்களின் இந்தப் பங்களிப்பு ‘இது தங்களுடைய பள்ளி’ என்ற உணர்வை உருவாக்க உதவியது.

மாணவர்களுக்கு மனப்பாடம் செய்யும் திறன், தானே கற்றுக்கொள்ளும் திறன், எந்த பிரச்சனைகளையும் சமாளிக்கும் திறன் போன்றவற்றை எங்களது ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்.

குழந்தைகளின் குறைபாடுகளை புரிந்துகொண்டு அவர்களின் விருப்பங்களைக் கட்டாயப்படுத்தாமல், அவர்களை ஆசிரியர்கள் அரவணைத்து அவர்களின் திறமைகளை வளர்க்கின்றனர்.

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளுக்கும், கவனக் குறைபாடுகள் இருப்பின் மதிய உணவு இடைவேளையின் போது ஸிமீனீமீபீவீணீறீ வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். சில மாதப்பயிற்சியிலேயே அவர்கள் எல்லோரையும் போல எழுதமுடிவதால், பெற்றோர்கள் இதனைக் கண்காணித்து, தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேர்க்க ஆர்வமாக உள்ளனர்.

மதிப்பீடு:

• தொடந்து அரசுபள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருவதால், பல்வேறு வகையான இதுபோன்று உத்திகளைக் கையாண்டு பள்ளியைப் பிரபலப்படுத்தி, பெற்றோரையும் மாணவர்களையும் கவரும்வகையில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தி உள்ளோம்.

• கடந்த கல்வியாண்டில் (2015-16) 120 மாணவர்கள் பள்ளியில் புதியதாக வந்துள்ளனர். இதில் சுமார் 50 மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து எங்கள் பள்ளிக்கு வந்தவர்கள். கடந்த கல்வியாண்டில் (2014-15) 70 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தனர். தற்போது எங்கள் பள்ளியில் 340 மாணவர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டிற்காக (2016-17) 500 மாணவர்கள் என்ற இலக்கை வைத்துள்ளோம்.

• எங்களுடைய முயற்சிகள் எங்களுக்கு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்து உள்ளது. பெற்றோர்- ஆசிரியர் சங்கமும், பள்ளி மேலாண்மைக் குழுவும், மடுகரையிலுள்ள பொதுமக்களும் தனியார் பள்ளியிலிருந்து தங்கள் குழந்தைகளை மீட்டு இப்பள்ளியோடு இணைந்து மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை இவ்வாண்டும் அதிகரிக்கச் செய்வார்கள் என ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.

Subject: 
EVS

Term: Term 2