Towards a just, equitable, humane and sustainable society

தக் ஷன் சித்ரா – ஆசிரியர்களுக்கான கல்விப் பயணம்

தக் ஷன் சித்ரா – ஆசிரியர்களுக்கான கல்விப் பயணம்

ஆசிரியப் பயணம் பள்ளிக் கல்வியை மேன்படுத்தும்!

அ. லலிதா ப்ரியதர்ஷனி

 

ஓட்டைப்பாத்திரத்தில் சிறிது சிறிதாகக் கசிந்து செல்லும் நீரைப்போல் நம் பாரம்பரியம் மற்றும் மரபு சார்ந்த நுட்பங்களைத் தொலைத்து வருகிறோம். இவ்வுணர்தலைப் பதியவைத்ததோடு அதை மீட்டெடுப்பதற்கான உத்திகளைக் கற்றுக்கொடுக்கும் களமாக தக் ஷன் சித்ரா பயணம் இருந்தது. இப்பயணத்தை நான் மூன்று விதமாகப் பார்க்கிறேன். எங்களது பயணம், தக் ஷன் சித்ரா எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது, ஆசிரியராக மாணவர்களுக்கு எடுத்துச்செல்ல முடிவது என்ற வகையில் பிரித்து பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தக் ஷன் சித்ராவில் கண்டதும் கற்றுக்கொண்டதும்:

காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை தக்ஷன் சித்ராவில் இருந்தோம். அறிமுக ஆவணப் படம், வரவேற்பு குளிர்பானம், 2 மணிநேரப் பயிற்சிப் பட்டறைகள், அருங்காட்சியக வீடுகளைப் பார்வையிடல், விளையாட்டுகள் விளையாடுதல் என்பதுபோல் திட்டமிடப்பட்டிருந்தது. இரண்டு மணிநேரப்பயிற்சியில் ஆசிரியர்கள் குழுவாகப் பிரிந்து வெவ்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டோம். பனை ஓலைப் பயிற்சியை

கிராமத்துப் பெண் ஒருவர் கற்றுக்கொடுத்தார். கிழித்துவைத்திருந்த பனை ஓலைக்குமுன் வட்டமாக எங்களை உட்காரவைத்து ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்கத் துவங்கினார். இதெப்படி நமக்கு வரும், இவரால் எப்படி சொல்லித்தரமுடியும் என்ற நமது அனுமானத்தை உடைத்தெரிந்தார். அவரது பயிற்சி தென்னை ஓலையில் அலங்கார தோரணம், ரோஷாப்பூ, கிளி, மோதிரம் என வகை வகையாய் செய்ய உதவியது. அவரிடம் கற்றுக் கொண்டு செய்தவற்றைச் சிறு பிள்ளையைப் போல் சுமந்துகொண்டு வந்தோம். அதைப்போலவே ஆரிகமிக்கு (காகிதப்பொருட்கள்) சென்றவர்கள் அவர்கள் செய்த தாமரைப் பூக்கள், மீன் போன்ற பொருட்களைப் பார்க்க அழகாகவும் ஆசையாகவும் இருந்தது. இதைப் போலவே ஸ்டென்சில் பயிற்சிக்கு சென்றவர்கள் கைக்குட்டையில் தாங்கள் செய்த வண்ண ஓவியங்களைக் காட்டி அவர்கள் கற்றுக்கொண்ட முறையை விளக்கியபடி வந்தனர். இங்கு வேறு ஒன்றையும் கூறியாக வேண்டும் எங்களுக்குக் கிடைத்த பயிற்சியைத் தவிர தக் ஷன் சித்ராவில் ஆங்காங்கு பல்வேறு பயிற்சிகள் நடந்தன. பானை செய்யும் பயிற்சி, பட்டம் செய்யும் பயிற்சி, ரங்கோலி பயிற்சிகளும் நடந்து கொண்டிருந்தது மரபு சார்ந்த விளையாட்டுகளான பல்லாங்குழி, ஆடுபுலி, தாயம் போன்ற விளையாட்டுகள் ஆங்காங்கே விளையாடுவதற்கான ஏற்பாடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒரு பாட்டியிடம் பத்துரூபாய் தந்துவிட்டு ஒரு ஆட்டம் பல்லாங்குழி ஆடிக்கொள்ளலாம். பாரம்பரிய கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருந்தன. விசிறி, பொம்மைகள், ஓலைக்கூடைகள் என வித விதமா பொருட்கள் இருந்தன. சில பார்ப்பதற்கும், சில வாங்குவதற்கும் உகந்ததாக இருந்தது. உணவும் கூட மரபு சார்ந்து காரைக்குடி காரக்குழம்பு, கேரளா அவியல் என்பது போன்று இருந்தது.

தக் ஷன் சித்ராவில் உள்ள வீடுகள் அருங்காட்சியகம், நாம் அறிந்திராத அல்லது பார்த்திராத ஒன்றாக இல்லை. ஆனால் அவற்றைக் கவனித்துப் பா ர் ப் ப த ற் கு ம் , இவையெல்லாம் நம்மிடமிருந்து எங்கே தொலைந்தது என்பதை யோசிப்பதற்குமானதாக இருந்தது. அதோடு நம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவின் வீடுகளைப் பார்க்கமுடிந்தது. நம் வீடுகளோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பார்த்தோம். தமிழ் நாடு வீடுகளில் திண்ணைக்கு இருந்த முக்கியத்துவம் மற்ற மாநிலங்களில் இல்லை. வட தமிழ் நாட்டில் உள்ள வீடுகளில் இருக்கும் பொருட்கள் மற்றும் வீடு அமைப்புகளில் இருக்கும் மாற்றங்கள் விசித்திரமாக இருந்தது. உயரமான ஆந்திர குடிசைகளில் உள்ள காற்றோட்டம் தமிழக வீடுகளில் இல்லை. இது தட்ப வெப்ப நிலையைப் பொறுத்ததா என யோசிக்க வைத்தது.

கேரள மர வீடுகள், கலைக்கூடத்தை நினைவு படுத்தியது. ஆந்திர பணக்கார வீடுகளுக்கும் குடிசைக்கும் உள்ள இடைவெளியை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. (தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளில் அமைக்கப் பட்டிருந்த திண்ணை, பெண்கள் உள்ளேயும் ஆண்கள் வெளியில் அமர்ந்து பேசும் வழக்கம் மற்றும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காமலிருக்கும் வழக்கத்தையும் நினைவு படுத்தியது.)

அவ்வீடுகளில் அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள், நாற்காலிகள், புகைப்படங்கள், ஓவியங்கள், விவசாயம் மற்றும் தொழிற்கருவிகள் என காட்சிப் படுத்தப் பட்டிருந்ததன. இதைத் தவிர அவ்வீடுகள் பற்றிய தகவல்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு வீடுகளிலும் உட்கார்ந்து, உற்றுப் பார்த்து, அங்கிருப்பவர்களுடன் கதை பேசி என நேரம் ஓடியது. குயவர் வீட்டிற்குள் பானை செய்துகொண்டிருந்த தாத்தாவுடன் சேர்ந்து பானை செய்ததோடு, கதை பேசிவிட்டு வந்தோம். நூலகம், கலைக் கூடமும் இருந்தன. வெளிநாட்டவர், விளம்பரப் படமெடுப்பவர்கள், ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் என காட்சிக்குக் குறைவில்லாமல் இருந்தது. கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, புதையலைக் கண்டுபிடிப்போம் போன்ற விளையாட்டுகள் உடலில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அடுத்து முக்கியமானதாக நான் கருதியது பயணம். ஆசிரியர்களாகப் பயணிக்கும்பொழுது அப்பயணம் கூட தொழில் சார்ந்ததாக மாறிவிடுகிறது. காலையில் பேருந்து கிளம்பியதிலிருந்து நாங்கள் பேசிக்கொண்டவற்றில் கல்வி, பாடம், பாடல், கதை, பள்ளி என்பதாகவே இருந்தது. தனமேரியும் கஜலட்சுமியும் கதை சொன்னார்கள். அனைத்து ஆசிரியர்களையும் மாணவர்களாக்கி அவர்கள் கதை சொன்ன விதம் அருமையாக இருந்தது. புதிர்ப் பாடல்களைப் பாடியதில் பயணம் என்ற உணர்வே இல்லாமல் இடத்தை அடைந்து விட்டோம். மாமல்லபுரத்தில் சாப்பாட்டிற்காக இறங்கினோம். ஆனால் வரலாற்றோடும், புத்தகப் பாடத்தோடும் இணைத்துப் பேசிக்கொண்டோம்.

ஆசிரியராக......

- மரபை அறிந்து கொள்வதும் பாதுகாப்பதும் நம் கல்வியின் முக்கியச் செயல்பாடாக இருப்பதை பாடங்கள் மூலம் அறிகிறோம். அவற்றை நம் ஊரில் உள்ள வீடுகள், தொழில்கள், பழக்கவழக்கங்களைக் கொண்டு மாணவர்களிடம் எடுத்துச் செல்லலாம் என்பதை உணர்த்தியது இப்பயணம். நம் ஊரில் உள்ள பானை செய்பவர்கள், நெசவாளர்கள் எப்படி வாழ்கிறார்கள் அவர்களது தொழில் என்னவாக இருக்கிறது என்று மாணவர்களைப் பார்க்கச் சொல்லலாம்.

- வீடு இன்று பொதுத்தன்மையுடைய ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. அப்படியல்லாமல் பொருளாதா ரத்திற்கேற்ற, பகுதிக்கேற்ற, தட்பவெட்ப நிலைக்கேற்ப, அங்குள்ள மண், மரம் போன்ற வளங்களுக்கேற்ப இருப்பதைப் பற்றி யோசிக்க வைத்தது.

- இரண்டு மணி நேரத்தில் பனை ஓலையில் பொருட்கள் செய்யக் கற்றுக் கொண்டதைப் போல் மாணவர்களுக்குச் சின்னச்சின்ன கைவினைப்பொருட்களைச் செய்யக் கற்றுக் கொடுக்க முயல்வது - அதையும் ஊரில் உள்ள பெரியவர்களைக் கொண்டு செய்யச் சொல்லுதல் நன்றாக இருக்கும். பூவரச இலையில் பீப்பீ செய்து ஊதுதல்- போன்ற நிகழ்வை வகுப்பறை நிகழ்வாக மாற்றுதல். ஒரே நேரத்தில் எல்லா மாணவர்களும் அதைச் செய்யவைக்கும்பொழுது அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றுவதோடு அதை வாழ வைக்கவும் முடியும்.

- தக் ஷன் சித்ராவின் வீடுகளுக்குள் அமைக்கப் பட்டிருந்த ஐந்திணை நிலங்களின் பண்பாடு குறித்த படங்கள், மொழி பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், வீடுகள் பற்றிய விளக்கங்கள் என எதைப் படித்தாலும் வகுப்பறையை மனதிற்கொண்டே பார்ப்பது போல் இருந்தது.

Subject: 
EVS

Term: Term 1