Towards a just, equitable, humane and sustainable society

புதுவையில் கல்வி - ஒரு வரலாற்றுப் பார்வை

0
No votes yet
0
Post a comment

சங்க காலம்தொட்டே கல்விக்கென தனித்த வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட சீர்மிகு புதுவையில், 2005-06-களில் அரசுப் பள்ளிகளுக்கும் பெயர் சூட்டுமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று கல்வித் துறையால் அனுப்பப்- பட்டது. இதற்கும் முன்பே நிறைய பள்ளிகளுக்குப் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும், இந்த சுற்றறிக்கையினால் கிட்டத்தட்ட 48 பள்ளிகள் தங்களுக்கென்று பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தது. அதனை முறைப்படுத்தி அரசு இதழிலே பதிவு செய்யும் பணியைச் செவ்வனே செய்து முடித்தது நம்முடைய DDW அலுவலகம்.

நம் நாட்டுத் தலைவர்களின் பெயர்கள், அறிஞர்களின் பெயர்கள், புலவர் பெருமக்களின் பெயர்கள் என்று மிகவும் பிரபலமானவர்களின் பெயர்களைப் பல பள்ளிகள் தாங்கியிருந்தன. இருந்த போதிலும், குறிப்பாகப் புதுச்சேரி நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதுச்சேரி குடிமக்களின் பெயர்களில் நிறைய பள்ளிகள் இருப்பதைக் காண முடிந்தது. இவர்கள் அந்தந்தப் பகுதிகளில் சிறப்பு வாய்ந்தவர்- களாக இருந்திருக்கின்றனர். இவர்களின் பின்னணி என்ன? சமூகத்தின் மேல் இவர்களுக்கு இருந்த அக்கறை என்ன? எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் தங்களுடைய இடங்களை தருமப் பள்ளிகளுக்காக வழங்கிய நல்லிதயம் படைத்தப் பெருமக்களின் வாழ்க்கைப் பின்னணியை சற்றே ஆராய்ந்து, அவர்களை, மீண்டும் மக்களின் முன் நிறுத்த நினைக்கும் என் எண்ணத்தின் வெளிப்பாடே இக்கட்டுரை எழுதக் காரணம்.

இதை எழுத நினைக்கும்போதே, புதுவையில் முதன் முதலில் அமைக்கப்பட்ட பள்ளிக்கூடம் எதுவாக இருக்கும்? அது தற்போது எந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது? அதிலிருந்து தொடங்கினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் என் மனதில் எழும்பியது. இந்தக் கேள்விகளுக்குக்கான பதில்களைத் தேடி பல புத்தகங்களைப் புரட்டியபோது சங்ககாலம் தொட்டே புதுவையில் கல்விச் சாலைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதைக் காண முடிந்தது.

கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே நிருபதுங்கவர்மன் என்ற பல்லவ மன்னன் ஆட்சியில் வாகூர் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாகூரில் சமஸ்கிருத பள்ளி (Vidhyasthana) இருந்தமைக்கான சான்றுகள் பாகூர் செப்புத்தகடுகளில் உள்ளன. அதே போன்று கி.பி.19-ஆம் நூற்றாண்டின் முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் திருபுவனையில் சமஸ்கிருத பள்ளி இயங்கி வந்துள்ளது.

ஆனால் கல்வி, அந்நாளில் அந்தணர்களுக்கும் பணக்கார வர்க்கத்தினருக்கும் உரியதாகவே இருந்து வந்திருக்கின்றது. எல்லோருக்குமானதாக கல்வி இல்லை என்பதே கசப்பான உண்மை. பிரெஞ் சுக்காரர்கள் இங்கு வந்த பின்புதான் கல்வியில் புரட்சி என்பது ஏற்பட்டிருக்கிறது. அதற்கும் முற்பட்ட காலத்தில் “திண்ணைப் பள்ளிகள்” மூலமாகவே கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், அதுவும் உயர் சாதி குடும்பதினருக்காகவே மட்டுமே இயங்கி வந்திருக்கின்றன. இந்தப்பள்ளிகள், அந்தந்த வட்டார மொழிகளில் மதத்திலும், கணிதத்திலும் திறமை வாய்ந்த பண்டிதர்களால் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. ‘அனைவருக்கும் கல்வி’ உருவாக்கப்பட்டது பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில்தான்.

இவர்களின் முக்கிய நோக்கம், பிரெஞ்சு மொழியில் புலமை வாய்ந்த, பிரஞ்சு இலக்கியத்தில் ஆர்வ- முள்ள, பிரெஞ்சின் நன்மதிப்புகளை உணர்ந்த பிரெஞ்சு குடிமகன்களை உருவாக்க வேண்டும். அதனை கல்வியின் மூலம்தான் சாதிக்க முடியும் என எண்ணி கல்வியைப் பரவலாக்கினர்.

 

1664-ல் இந்தியாவில் கால்பதித்த பிரெஞ்சு ஆதிக்கம், 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலேயே நவீன கல்வி முறையைப் புதுவையில் கொண்டுவந்ததற்கான சான்றுகள் உள்ளன. முதன் முதலில், 1703-ல் ஜெசெயுட்-ஆல் பிரெஞ்சு காலனி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சில பள்ளிகள், நகரங்களின் வளர்ச்சியால் மக்களின் தேவைகளை ஈடுகட்ட முடியாமல் தவித்தன. இந்நிலையில் ‘Superior Council’ மேற்படிப்புக்காக பிள்ளைகளைப் பிரான்சிற்கு அனுப்பலாம் என்று பரிசீலனை செய்தது. ஆனால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.

சில வருடங்களுக்குப் பிறகு, மதுரையில் கல்லூரி ஒன்றை ஆரம்பிக்கிறார்கள் ஜெசெயுட் பல ஏற்றத்- தாழ்வுகளைக் கண்ட இந்தக் கல்லூரி, பிரெஞ் சில் ஜெசெயுட்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 1764-ல் மூடப்பட்டுவிட்டது. 31.3.1787 அன்று அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்காத நிலையில் இந்தக் கல்வி நிறுவனம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. இக்கல்லூரியைத் தவிர வேறு இரண்டு கல்வி நிறுனங்கள் புதுவையில் இருந்திருக்கின்றன. ஒன்று 1771 Mgr.Pignean de Behainev-ஆல் வீராம்பட்டனத்தில் நிறுவப்பட்ட ‘Seminare General!’ மற்றொன்று ‘College Malabare’.

1738-ல் Dumas அழைப்பின் பேரில் ursuline கள் பெண்கள் பள்ளி நடத்துவதற்காகப் புதுவை வருகின்றனர். Counseil Superior இடம் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக 3 வருடங்களுக்கும் பிறகு அவர்கள் புதுவையை விட்டுச் சென்றனர். ஆனால் கல்வியைப் பொறுத்தவரை பெண்களின் இன்றைய நிலைக்கு அதுவே வித்தாக அமைந்தது.

1816 - பிரிட்டிஷாரிடம் இருந்து, புதுவை, பிரெஞ்சு வசம் வந்தவுடன், கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தியது. புதுவையின் கல்வி வளர்ச்சி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் 1826-28 வரை கவர்னராக இருந்த Viscount Debassys e Richemont. அவர் ஆரம்பித்த கல்வி நிறுவனங்களில் ஒன்றுதான் ‘‘college Royal" தற்போதுள்ள Lyce Francies. இது 1826-ல் இப்பள்ளி துவங்கப்பட்டது. 1848-ல் இப்பள்ளி Colonial College என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Viscount அவர்கள் காலத்தில் சட்டக்கல்லூரி மருத்துவக் கல்லூரி ஆசிரியர் பயிற்சி கல்லூரி போன்றவை ஆரம்பிக்கப்பட்டன. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதும் இவர் காலத்தில் தான். முதல் பெண்கள் பள்ளியை ஆரம்பித்த பெருமை இவரையே சாரும். 'Pemsionnet des jeunes filler' - என்ற பள்ளி இன்றளவிலும் நம் புதுவையில் இயங்கி வருகிறது. பிப்ரவர் 12, 1827-ல் இப்பள்ளி துவக்கப்பட்டது.

Ecoles premaries தொடக்கப் பள்ளிகளும், Ecoles Central நடுநிலைப்பள்ளிகளும் இவர் காலத்தில் மிகுந்த எண்ணிகையில் ஆரம்பிக்கப்பட்டன. 1877-ல் கலவை கல்லூரி ஆரம்பிக்கும்வரை எந்தப் பள்ளியிலும் ஆங்கில வழி கல்வி இருந்ததில்லை. அதுவரை எல்லாப் பள்ளிகளும் பிரெஞ்சு வழி கல்வியே பின்பற்றப்பட்டது. பிரெஞ்சுயோடு சேர்த்து தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் போதித்து வந்தனர். இதிலிருந்து அந்நாளில் நம் புதுவையில் ‘மும்மொழிக் கல்வி முறை’ பின்பற்றப்பட்டுள்ளது தெளிவாகிறது.

மேலும் தற்போது பாண்டிச்சேரியில் பள்ளிகளின் தனிப்பட்ட வரலாற்றை நாம் தேடிப் பார்த்தால் பாண்டிச்சேரியின் வரலாற்றோடு கல்வி வளர்ச்சியின் வரலாற்றையும் நாம் இங்கு பதியலாம். இது ஒரு நல்ல முற்சியாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் நமது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகளின் வரலாற்றையும் சிறப்பையும் எடுத்து கூறும் விதமாக அமையும். நம் வரலாற்றைத் தேடும் முயற்சிகள் தொடரும்.

கட்டுரைக்கு உதவிய சில குறிப்புதவி நூல்கள்:

1. History of Pondicherry . A. Ramasamy.

2. A Socio Cultural study of Franco Pondicherrians - by Raju Sugumar​

 

Subject: 
Social Science

Term: Term 1

0
No votes yet
0
Post a comment