Towards a just, equitable, humane and sustainable society

புதுவையில் கல்வி - ஒரு வரலாற்றுப் பார்வை II

புதுவையின் கல்வி வரலாற்றிலே, புதுச்சேரி பள்ளிகளின் தனிப்பட்ட வரலாற்றைத் தேடி என்னுடைய பயணம் முதலில் தொடங்கிய இடம் புதுச்சேரி கல்வித் துறை வளாகத்தின்  5 ஆவது மாடியில் உள்ள கல்வி அலுவலகம் தான்.  அங்கு என்னுடைய நண்பர் வினோத் அவர்களின் உதவியை நாடிச் சென்றிருந்தேன்.  கேட்டவுடன் கிடைத்தது புதுச்சேரி அரசுப் பள்ளிகளின் பட்டியல். கொஞ்சம் மலைத்துவிட்டேன்.

நவீன கல்வி முறையை பிரெஞ்சுகாரர்கள் புதுவையிலே கொண்டு வந்த காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.  அன்றிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 400 ஆண்டுகளைக் கடந்து வந்துவிட்ட நிலையில் , இன்று  நம் புதுவையில், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 414.  தனியார் பள்ளிகளையும் சேர்த்துப் பார்த்தால் 735 பள்ளிகள்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுச்சேரி, கரைக்கால், மாஹே, ஏனாம் என நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் புதுவையில் 272 அரசுப் பள்ளிகள், காரைக்காலில் 101 , மாஹேயில் 17 மற்றும் ஏனாமில் 24 பள்ளிகளும் உள்ளன. இதில் நாம் களம் காணப்போவது புதுவைப் பகுதியில் உள்ள பள்ளிகளைத்தான். இதில் தலைவர்களின் பெயர்களை சூடிக்கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கையப் பார்த்தோமானால், 70 – க்கும் குறைவாகவே உள்ளன.   இந்தப் பெயர்கள் சொல்லும் சரித்திரம் என்ன என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

நமது கல்வித்துறையின் பட்டியல்படி முதல் இடம் பிடிப்பது 1827–ல்  புதுவைக்கான பிரெஞ்ச் கவர்னர் Viscount Debassys e Richmont அவர்களால் பெண்களுக்கென்று துவங்கப்பட்ட pensionat des jeunes filles – என்ற பள்ளிதான்.  ஆனாலும், என் மனம் என்னவோ, 1771 – ல் Mgr. Pignean Bechaine – ஆல் வீராம்பட்டினத்தில் நிறுவப்பட்ட seminaire General – ஐ நோக்கியே சென்றது.  அந்தப் பள்ளி என்னவாயிற்று? இப்பொழுதும் இருக்கின்றதா? என்ற கேள்விகள் என்னைத் துரத்தவே அதற்கான பதிலைத் தேடி அலைந்தேன்.

என்னுடைய வழிகாட்டியும் ஆசானுமான திரு. இளங்கோ தாமோதரன் ஐயா அவர்களைச் சந்தித்தேன்.  அவர் தன்னுடைய நண்பர் திரு. ராமஜெயம் என்பவரை அறிமுகப்படுத்தினார்.  இவர் ‘நெய்தல் குரல்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியர். பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இலக்கியவாதி. 28 –க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரைச் சந்திக்கச் செல்லும்வரை இவ்வளவு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் என்பது எனக்கு  எள்ளளவும் தெரியாது. அவர் தந்த தகவல்களை இதோ உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

1771 – ல் நிறுவப்பட்ட செமினார் ஜெனரல், காலப்போக்கில் பிரெஞ்சுக்காரர்களால் பராமரிக்கமுடியாமல் போகவே, கல்விச் சேவை அங்கே தடைபட்டுவிட்டது.  வீராம்பட்டினத்து மக்கள், கல்வி கற்க அரியாங்குப்பம் செல்ல  நேரிட்டது. அவர்களுக்குக் கல்வி புகட்டிய  பள்ளி, தற்போது மாதா கோவில் எதிரில் உள்ள அரியாங்குப்பம் அரசு உயர் நிலைப் பள்ளிதான்.  கல்வித் துறையின் ஆவணப்படி, இப்பள்ளி, 1925 – ல் நிறுவப்பட்டது. 1771 – க்கும் 1925 – க்கும் இடைப்பட்ட காலத்தில் இயங்கிக்கொண்டிருந்த செமினார் ஜெனரல், எப்பொழுது தன் இயக்கத்தை நிறுத்தியது என்றும், எத்தனை காலம் இவர்கள் அரியங்குப்பம் சென்று கல்வி பயின்றனர் என்பதும் திட்டவட்டமாகத் தெரியவில்லை.

இப்பகுதி மக்கள், கல்வி கண் கொடுத்த கடவுளாக வழிபடுவது பெருந்தலைவர் ந.ஜீவரத்தினம் அவர்களைத்தான். ஏனென்றால், செமினார் ஜெனரலுக்குப் பிறகு,  அந்த ஊரில் பள்ளிக்கூடமே இல்லை.  மீண்டும் வீராம்பட்டினத்திற்கு பள்ளிக்கூடத்தை கொண்டுவந்தவர்   ந. ஜீவரத்தினம் அவர்கள்தான்.

இவர், பெரிய வீராம்பட்டினம் நடேச செட்டியார் அவர்களுக்கும் தனகோடி அம்மையருக்கும் , 11.11.1911 அன்று மகனாகப் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் பயின்று, அரிய நகரில் படித்து, சென்னை துறைமுகத்தில் வேலைக்கு  அமர்ந்தார்.  சென்னை இராயபுரம் பனைமரத்தொட்டி அவருடைய இருப்பிடமானது.  ஆயினும், இந்த சராசரி வாழ்க்கையில் அவர் மனம் திருப்தி அடையவில்லை.

மக்கள் நலனும் சமுதாயச் சிந்தனையும் கொண்ட இவரை சென்னை வாழ்க்கை சுதந்திரப்போராட்டத்திலே ஈடுபடுத்தியது.  மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கம், சத்தியா கிரகம் போன்ற பல போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.  நாடு சுதந்திரம் பெற பல இன்னல்களை அனுபவித்தார்.

சுதந்திரத்திற்குப் பின், பெரியாரின் வழியைப் பின்பற்றினார்.  பகுத்தறிவுக் கொள்கையோடு முற்போக்கு சிந்தனையும் இணைந்த அறிஞர் அண்ணா அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பெரியாரை விட்டு விலகியபோது இவரும் அண்ணாவுடன் வந்துவிட்டார்.  சென்னை இராயபுரம் இராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியாகவும், அறிஞர் அண்ணாவின் பக்கபலமாகவும் இருந்தவர் தலைவர் ந. ஜீவரத்தினம் அவர்கள். இக்காலத்தில், டார்பிடோ (பீரங்கி) என்ற பத்திரிக்கை ஒன்றையும் நடத்தினார்.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைத் தன் வழிகாட்டியகக் கொண்டவர். ந.ஜீவரத்தினம் அவர்களின்  பேச்சிலும் சிந்தனையிலும் சிங்காரவேலரின் கொள்கைகளே நிரம்பி வழிந்தது.

மீனவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமன்றி தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டவர் தலைவர் ந.ஜீவரத்தினம் அவர்கள்.  தலித் சமுதாயத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரை சுயேச்சையாக வெற்றிபெறச் செய்து நகரசபைக்கு அனுப்பி வைத்த பெருமை இவரையே சாரும்.

ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமானால், கல்வி மிகமிக அவசியம் என்று முழங்கினார். பணக்காரனுக்கு மட்டுமல்ல பாமரனுக்கும் கல்வி  சென்றடையவேண்டும் என்பதிலே முனைப்பாக இருந்தார். குறிப்பாக பெண் கல்விக்கு ஆதரவாகப் போராடினார். தான் பிறந்த மண்ணான வீராம்பட்டினத்தில் பெண்களுக்கு என்று பள்ளிக்கூடம் இல்லாததால் கல்வி கற்க முடியாத சூழல் இருப்பதைக் கண்டார். அவர்களின் கல்விக்காக   பொதுமக்களிடம் காலணா, அரையணா, முக்காலணா, ஒரு பணம் என்று நிதி திரட்டி மேற்கொண்டு அவரும் பணம் போட்டு ஒரு கட்டிடத்தைக் கட்டி மக்களை அதில் படிக்க வைத்தார். அவரே மாணவர்களுக்குச் சொல்லியும் கொடுத்தார்.

பிற்காலத்தில், அரசு, அதே கட்டிடத்தில் 3-ம் வகுப்பு வரை ஆரம்பித்தது.  பின் 5 – ம் வகுப்பு, 8 – ம் வகுப்பு வரை உயர்ந்து பின் 10-ம் வகுப்பு வரை உயர்த்திவிட்டது. இன்று உயர் நிலைப் பள்ளி சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரிலும், நடு நிலைப் பள்ளி ந. ஜீவரத்தினம் அவர்களின் பெயரிலும் இயங்கி வருகிறது.

ஒரு காலத்தில், வெறும் 90 மாணவர்களே பயின்று வந்த வீராம்பட்டினத்தில், இன்று 1500 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் தலைவர் ந. ஜீவரத்தினம் அவர்கள் ஆற்றிய அரும்பணிதான் என்று சொன்னால் அது மிகையல்ல.

அன்னாரின் நாட்டுப்பற்றும், நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டும் மாணவர்களிடையே சீரிய சிந்தனைகளையும் சிறந்த நெறிமுறைகளையும் உருவாக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

திரு. ந, ஜீவரத்தினம் அவர்களின் உயரிய சமுதாய மற்றும் கல்வி வளர்ச்சி சிந்தனைக்கு வித்திட்டு எல்லா மக்களுக்கும் கல்வி சென்றடைய வழி வகுத்த சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரின் பெயருக்கு சான்றாக விளங்கும் சிற்பி சிங்காரவேலன் உயர்நிலைப்பள்ளியின்  வரலாற்றுடன் அடுத்த இதழில் இந்த வரலாற்றுத்தேடலைத் தொடரலாம். இந்த பள்ளிகளின் பெயர்களின் வரலாற்றை தேடும் பொழுது புதுவையின் அரசியல் மற்றும் சமுதாய வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்களின் வரலாறும் நமக்கு கிடைப்பதில் மகிழ்ச்சியே.

Subject: 
Social Science

Term: Term 1