Towards a just, equitable, humane and sustainable society

குட்டிக்குழந்தைகளும் நானும்

2017 – 2018 கல்வியாண்டில் முன்மழலையர் வகுப்பில் 8 மாணவர்கள் சேர்ந்தனர். வழக்கம்போல ஒரு மாத காலம் அழுகையும் சினுங்கலும் சில குழந்தைகளிடம் காணப்பட்டது. முன் மழலையர் வகுப்பு ஆசிரியர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டதால் எனக்கும் அழுகையும் சினுங்கலும் வந்துவிட்ட்து. சென்ற வருடம் முதல் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பது என்று முடிவு  செய்தபொழுதே பயத்தோடு  அனுகிய அனுபவம் என்னுடையது. இதில் மூனு வயதுக்குழந்தைகளுக்கு எடுக்க வேண்டும் என்றால் என்னை நினைத்து எனக்கே பாவமாக இருந்தது.

குழந்தைகளை செம்மைப்படுத்துவதை என்னால் செய்யமுடியும் என்ற போதிலும் மூனு வயதிலேயே தன் குழந்தை எழுத, படிக்க, கணக்குப் போட  தெரிந்திருக்க வேண்டும் என்று அவசரப்படும் பெற்றோர்களை எப்படி மாற்றுவது என்ற பதட்டம் இருந்தது.

முதல்முறையாக 3 வயதுக் குழந்தைகலுக்கு அனைத்துமாய் இருக்க முடிவெடுத்து என்னை தயார் செய்தேன். கூட்டமாகப் பாயில் அமர்ந்து கதை பேசுவதே என் முதல் வேலை. தினம் ஒரு கதை தயாரித்த நான் பின் பல கதைகள் தயாரிக்கத் துவங்கினேன். கதை சொல்வதை மறந்து கதை கேட்பவளாக மாறினேன். காதுதான் போதவில்லை அவ்வளவு கதைகள். நொய் நொய் என்று அவர்கள் பேசுவதைக் கேட்பது பைத்தியம் பிடிப்பது போல் இருக்கும். ஆனாலும் கேட்டால்தானே குழந்தைகளுக்கு நல்லது என்பதால் காது கொடுத்துக் கேட்கத்துவங்கினேன். எப்படியோ நான் சொல்லும் கதைகளும் அவர்கள் சொல்லும் கதைகளும் எங்களை நட்புக்குள்ளாக்கியது. அடுத்து பாடல்கள் பாட்த்துவங்கினோம். தமிழ் மட்டும் ஆங்கிலப்பாடல்கள், படங்களைப் பார்த்து படிப்பது, சாக்பீஸ் கொடுத்து சுவர் கரும்பலகையிலும் சிலேட்டிலும்  கிறுக்க (படம் வரைய) வைப்பேன்.

ஒரு புள்ளி வைத்துவிட்டு, இதுதான் யானை என்று கூறிய குழந்தைக்கும் கைதட்டல் உண்டு. எது கிறுக்கினாலும் (வரைந்தாலும்) அதற்கு அவர்கள் சொல்லும் பெயர்கள் ஆச்சர்யத்தையும் சிரிப்பையும் எனக்குத்தந்தது. போகப்போக அவர்கள் மொழியும் உலகமும் எனக்குப் பழகிவிட்டது.

“குழந்தை வளர்ச்சிக்கான விளையாட்டு செயல்பாடுகள்” என்ற புத்தகத்தை எம் பள்ளி நூலக ஏட்டில் பார்த்து எடுத்து படித்தேன். 200 விளையாட்டுகள்/செயல்பாடுகள் கொண்ட இந்நூலில் குட்டிக் குழந்தைகளுக்கானவற்றைப் படித்து அவற்றை தினமும் விளையாட ஆரம்பித்தோம்.

  • கயிறுமேல நடத்தல், (தரையில் போடப்பட்ட கயிறு)
  • வளையங்களில் குதித்தல் (cooker cascades பயன்படுத்தப்பட்டது)
  • கயிறை இருமுனைகளிலும் கட்டி அதை பிடித்துக் கொண்டே நடத்தல்.
  • வடிவங்கள் மீது நட்ததல். எழுத்துக்கள் மேல் நட்த்தல்
  • பந்து எறிதல்
  • டயர் கட்டி அதன் வழியாக பந்து வீசுதல்
  • சத்தம் கண்டுபிடித்தல்.
  • களிமண்ணில் பொம்மை செய்தல் (எதுவேண்டுமானாலும்)
  • ப்ளாக்ஸ் அடுக்குதல்
  • தண்ணீர் நிரப்புதல்
  • கைக்குட்டை மடித்தல்
  • பட்டன் போடுதல்
  • பை ஜிப்பை மூடுதல்
  • முகமூடி அணிந்து விலங்குகள் போல நட்த்தல்
  • வண்ணம் தீட்டுதல்
  • உடற்பயிற்சி செய்தல்
  • தானே தலைமுடியை சீப்பால் சீவுதல்

இப்படி இன்னும் சில. இவ்விளையாடுகளில் சிலதை அறிவியல் கண்காட்சியில் செய்து காட்டியதோடு தெளிவாகவும் விளக்கினர். பாராட்டுகளும் குவிந்தன. எப்பொழுதும்போல் சிலருக்கு திருப்தியாக இல்லை. “இன்னும் ஏன் எழுதத்துவங்கவில்லை?” என்றனர். அப்படிக்கேட்ட ஒருவர் கையில் மார்க்கர் பேனாவைக் கொடுத்து “உங்கள் பெயரை எழுதுங்கள்” என்றேன் . சாதாரண பேனா வேணும், என்று கூறி நழுவினார். அவரை வற்புறுத்திய பொழுது கோணலும் மானலுமாக எழுதினார். பிறந்து மூன்று வருடமேயான குழந்தையின் செயல்பாடுகளைப் பற்றி உரையாட முடிந்தது.

விளையாட்டு, பாட்டு, ஆட்டம் என நான்கு மாதங்கள் ஓடின. இதனால் உடல் வளர்ச்சி, ஐம்புலன், உடல் இயக்க வளர்ச்சி, மொழி வளர்ச்சி, சமூக மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றில் உள்ள மாற்றங்களைக் கவனித்துவந்தேன். சில விஷயங்களில் மற்ற ஆசிரியர்களும் தேவைப்படும்பொழுதெல்லாம் உதவி வருகின்றனர். ஊழியர் அக்கா என் எல்லா செயல்பாடுகளிலும் உடன் இருப்பார்.

முதல் பருவம் முடிவடைந்த நிலையில் வாய்மொழியாகத் தெரிந்த எண்களை எழுத்த்தொடங்கினோம். கட்டம் வரைந்து அதற்குள் 1 எழுத வேண்டும். அவர்களுக்கு அது கடினமானதாக இருந்தது. அழகாகவும் தெளிவாகவும் தவறில்லாமலும் குழந்தைகள் எழுத வேண்டும் என்ற மனநிலையுடைய ஆசிரியர் நான். என் எண்ணத்தை மாற்றிய பொறுப்பு இக்குழந்தைகளையே சேரும். பின் பெரிய கட்டங்கள் வரைந்து அதில் எழுத ஆரம்பித்தோம். இரண்டாம் நாள் எனக்கு நம்பிக்கை தந்தனர்.ட்ரேசிங் ஷீட் கொடுத்த பொழுது அதில் ட்ரேஸ் செய்தனர். கட்ட்த்திற்கு வெளியே செல்லாமல் வன்னம் தீட்டுவது என்ற உள் நோக்கு அதில் இருந்த்தால் திரும்பத்திரும்ப செய்ய வைத்தேன். பின் பெரிய கட்டம் வரைந்து அதற்குள் 1 எழுத வைத்த பொழுது அவர்களால் முடிந்தது. அவர்கள் 1 எழுதுவதற்கு எடுத்த முயற்சி என்பது மலையை நகர்த்துவதுபோல் இருந்தது. ஆனால் நாம் எவ்வளவு சுலபமாக மதிப்பிடுகிறோம். குழந்தைகளை இவ்வளவு கஷ்டப்படுத்தவேண்டுமா என்ற கேள்வியுடன் அது தொடர்பான புத்தகங்களைத் தேடி படித்துவருகிறேன். திரும்பத்திரும்ப முயற்சி எடுப்பதில் வல்லவர்களாக இருந்தனர்.

மூன்று வயதுக்குழந்தைகளிடம் என் அனுபவம் தந்த புரிதல்:

  • மிகுந்த சுய சிந்தனை கொண்டவர்கள், சுதந்திரமாக செயல்படுபவர்கள். பெரும்பாலும் தன்னைப்பற்றியும் தன் தேவைகளைப் பற்றியும் மட்டுமே யோசிப்பவர்களாக இருக்கின்றனர்.
  • விரல் அசைவுகள் அவர்களுடைய முழுமையான கட்டுப்பாட்டை பெறவில்லை.
  • சீக்கிரம்சோர்ந்துவிடுகின்றனர்.
  • தனியாக விளையாடுகிறார்கள், விளையாட்டில் தலமையேற்க விரும்புகின்றனர். கூட்டாக விளையாடக் கற்றுக் கொள்கின்றனர்.
  • மற்றவர்களைக் கவனிக்கின்ரனர். பின் அதை செய்ய முயற்சிக்கின்றனர். குறிப்பாக பெரிய குழந்தைகளின் மீது கவனம் செல்கிறது.
  • செய்ததையும் தனக்கு செய்யத்தெரியும் என்பதையும் பொதுவில் திரும்பத்திரும்ப செய்கின்றனர்.
  • கற்றுக்கொள்ளும் ஆர்வம் நிறைய இருக்கிறது. குறைந்த வேகத்துடன் செயல்படுகின்றனர்.
  • காத்திருத்தல் பிடிக்கவில்லை.
  • விளையாட்டுகள் அவர்கள் வயதிற்கேற்ப சுருக்கமாக, எளிமையானதாக, மகிழ்ச்சிதரக்கூடியதாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு உடல் உறுப்புகளையும் மனதில்வத்து அவற்றின் பலம், அதை அவர்கள் புரிந்து கொல்ளும் திறன் ஆகியவற்றை அடிப்படையாக்க் கொண்டு செயல்படவைத்தல் அவசியம். கைவிரல்களுக்கு ஏற்ற பயிற்சிகள் அவசியம்.
  • கூச்சல் போட்டு, ஓடி ஆடி – சுறுசுறுப்பாக இயங்க வைத்தல் நல்லது.
  • ஒரே மாதிரி ராகம் கொண்ட பாடல்கள் அவர்களை ஈர்க்கிறது.

அவர்கள் செய்வதை ரசிக்கவும், அறிவியல் பூர்வமாக விஷயங்களைப் புரிந்து செயல்படுதல், செயல்திட்டங்கள்,  எதிர்பார்ப்பற்ற இயல்பான செயல்பாடுகள்…குழந்தைகளை வளர்த்தெடுப்பதோடு நம்மையும் அவர்களையும் மகிழ்வித்து வேலையை அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது.

Grade: 
1

Subject: 
EVS

Term: Term 1