Towards a just, equitable, humane and sustainable society

அறிவியல் கண்காட்சி – 2018

0
No votes yet
0
Post a comment

அறிவியல் கண்காட்சி – 2018

ச. தேவி, அ.தொ.ப.திருவாண்டார்கோவில்

அறிவியல் உலகம் பரந்து விரிந்தது. அத்தகைய அறிவியல் அறிவைப் பயன்படுத்தி எம்பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர்கள் சேர்ந்து நடத்திய அறிவியல் கண்காட்சி எம்பள்ளியில் 04.09.18 செவ்வாய் அன்று இனிதே நடந்தேறியது.

திட்டமிடல்

எச்செயலும் செவ்வனே நடைபெற திட்டமிடல் அவசியமானது. பள்ளியின் தலைமையாசிரியரும், ஆசிரியர்களும் கலந்து ஆலோசித்து என்னென்ன தலைப்புகள், எவ்வகையான காட்சிப் பொருள்கள், மாணவர்கள் கூறும் விளக்கங்கள், அவற்றை முன்நிறுத்தும் விளக்கப்படங்கள் எவையவை என்பதை ஆராய்ந்து அழகுற வரிசைப்படுத்தினோம். அறிவியல் என்பது அனைத்துப் பாடங்களையும் உள்ளடக்கியது என்பதற்கேற்ப தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் எனத் தனித்தனியாக கண்காட்சி அமைக்கப்பெற்றது. இந்தக் கண்காட்சி பாடங்கள் அனைத்தும் வாழ்க்கைக்காக என்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதற்கும், பல பாடங்களுக்கிடையே உள்ள தொடர்பைப் புரிந்துகொள்வதற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டோம்.

மதிப்பிற்குரிய  பள்ளித்  துணை ஆய்வாளர் (வட்டம்-5) திரு.எஸ்.பக்கிரிசாமி அவர்கள் இனிதே விழாவினைத் துவக்கி வைத்தார்.

ஆரம்பமே ஆனந்தம்

கண்காட்சியின் ஆரம்பமே தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் அரங்காக அமைந்திருந்தது. சிறுவர் சிறுமியர் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான, புடவை, வேட்டி அணிந்து வந்தோரை இன்முகத்துடன் வரவேற்றது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

அரங்கில் நுழைந்தவுடன் தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், காவடி, சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு ஆகியவற்றையும் ஆதிகால வீட்டிலுள்ள கருவிகளான அம்மி, உரல், ஆட்டுக்கல்,  உலக்கை, முறம் ஆகியவற்றையும் மறந்துவிட்ட விளையாட்டுகளான தாயம், நொண்டி, பல்லாங்குழி ஆகிவற்றையும் செய்து காட்டியும் காட்சிப்படுத்தியும் மாணவ மாணவிகள் நம்மைப் பழங்காலத்திற்கே அழைத்துச் சென்றனர்.          

தமிழ்மொழிக் கண்காட்சி

“கற்றது கைம்மண்ணளவு. கல்லாதது உலகளவு” என்பதற்கேற்ப 99 வகையான பூக்களோடு (படங்கள்) வரவேற்றாள் ஐந்தாம் வகுப்பு மாணவி தேவிப்பிரியா. படங்களோடு அவற்றின் பெயர்களையும் அவள் அழகுற கூறியது அனைவரின் விழிகளையும் அகல விரியச் செய்தது.

அதனைத் தொடர்ந்து ஐவகை நிலங்கள், அறுசுவைகள், போர்க்கருவிகள், திருக்குறளின் பெருமைகள், வழங்கும் தமிழ், தமிழ்ப் புலவர்கள் மற்றும் நூல்கள் என அரங்கு அழகுற அமைந்திருந்தது. இறுதியாகச் சிலப்பதிகாரத்தின் காவியத் தலைவியான கண்ணகி வேடமிட்டிருந்த அருளரசி என்ற மாணவி கண்ணகியின் வீர வசனத்தை ஆவேசமாகப் பேசியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

அறிவியல் கண்காட்சி

தமிழின் இனிமையைச் சுவைத்த பிறகு அறிவியல் அரங்கு அனைவரையும் அன்புடன் வரவேற்றது. கல்வாழை வீட்டில் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதையும் விரிவாகவும், அழகாகவும் எடுத்துரைத்தார் நான்காம் வகுப்பு மாணவன் அகிலன்.

அதனைத் தொடர்ந்து Sterling engine, Musical instruments, Indoor, outdoor games, Automatic street light, Sound alarm, Persistence of vision, Shapes, Angles, Hydraulic list, Egg, balloon experiment – என முதல் அரங்கு பிரம்மாண்டமாக அமைந்திருந்தது.

இரண்டாம் அரங்கில் Dengue awareness, Types of soil, Water purifier, Flags of nation, Tongue and teeth, Types of sounds, Life cycle of cockroach, Volcano என அமைத்திருந்தனர்.

அடுத்த 3 மற்றும் 4 வது அரங்கில் Layers of atmosphere, Afforestation, Deforestation, Junk food/healthy food, Fruits and vegetables, Leaf skeleton, Feathers of birds, Solar system, Rainbow roses, Global warming, 7 wonders, Art of grafts, Solar system, Solar and lunar eclipse, Honey comb and Phases of moon என அமைத்திருந்தனர். ஒவ்வொரு மாதிரியையும் முன்நிறுத்தி மாணவர்கள் அழகுற விளக்கங்களை ஆங்கிலத்தில் எடுத்துரைத்தவிதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இருட்டு அறையில் projector மூலம் படத்தை ஒளிபரப்பி மாணவர்கள் அதற்கான விளக்கத்தை அளித்தனர். Bubbles (சோப்புக் குமிழ்கள்) உருவாகும் விதத்தையும் அதன் செய்முறையையும் மாணவர்கள் அழகுற செய்துகாட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

ஆங்கிலம்

Phonetics, Singular and plural, Noun and verb, Opposites என ஆங்கிலத்திலும் பெருமை சேர்த்தனர் மாணவர்கள்.

முடிவுரை

கற்ற அறிவைக் கண்காட்சியில் வெளிப்படுத்திய மாணவ மாணவியரின் திறமைகளைக் கண்காட்சியில் கண்டுகளித்த அனைவரும் வெகுவாகப் பாராட்டினர். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்த இக்கண்காட்சி அனைவரின் நெஞ்சிலும் நீங்கா இடம் பெற்றது என்றால் அது மிகையாகாது.

Subject: 
EVS

Term: Term 2

0
No votes yet
0
Post a comment