Towards a just, equitable, humane and sustainable society

Reading Maps- வரைபடங்களை வாசிக்கக் கற்றல்

வரைபடங்களை வாசிக்கக் கற்றல்

ஹேமசரஸ்வதி, அரசு தொடக்கப்பள்ளி, பொறையூர்பேட்

முன்னுரை:

வரைபடம் என்பது பூமியையோ, பூமியின் ஒரு பகுதியையோ, அளவுகோலின் உதவியோடு, தட்டையான காகிதத்தில் வரையப்படுவதாகும். வரைபடம், புவியியலோடு தொடர்புடையது மட்டுமன்று. நம் அன்றாட வாழ்க்கைக்கும் பயன்படும் ஒன்று. எண்ணற்ற தகவல்களை வழங்குவதிலும் மன எல்லைகளை விரிவடையச் செய்வதிலும் அவை பெரும்பங்கு வகிக்கின்றன. உலகின் பல்வேறு இடங்களுக்குப் பயணிப்பது மற்றும் புதிய இடங்களைக் கண்டறியும் இன்பத்தை வெறும் வரைபடங்களைக் காண்பதன் மூலம் கூடப் பெற முடியும்.

எனவே, மாணவர்களுக்கு வரைபடம் குறித்த அடிப்படையான திறன்களைக் கற்பித்தல் மிகவும் அவசியமாகிறது. வரைபடம் வாசிக்கக் கற்றல் என்பது, கற்பனையோடு கூடிய/ உருவமற்ற ஒரு செயல்பாடு ஆகும். ஆகவே, வரைபடங்கள் குறித்தத் திறன்களை மிகவும் தெளிவாகவும், திண்ணமாகவும், நிதானமாகவும் அறிமுகப்படுத்த வேண்டும்.

பின்வரும் பகுதியை முன் தொடக்க மற்றும் தொடக்க நிலை வகுப்புகளில் வரைபடம் வாசித்தலை எளிமைப்படுத்துவதற்கான வழிகாட்டியாகக் கொள்ளலாம்.

துணைக்கருவிகள்

பணித்தாள் – 1

பணித்தாள் – 2

படிநிலைகள்

படிநிலை – 1 (வகுப்பு 2)

“இட அமைவு (location) குறித்த கருத்தை அறிமுகப்படுத்துதல்”

வரைபடம் கற்றலின் முதல் படிநிலையே, இட அமைவு குறித்தப் புரிதலை உருவாக்குவதே ஆகும். இதன் முதல்படியாக மாணவர்களிடம், அவரவர் இடதுபுறம் மற்றும் வலதுபுறம் அமர்ந்துள்ள நண்பர்களின் பெயர்களைக் கூறச்செய்தல் ஆகும். இச்செயல்பாட்டினை, வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஈடுபடுமாறு வலியுறுத்துதல் மிகவும் முக்கியமானது.

2-ம் வகுப்பு மாணவர்களுக்கு, இடது-வலது என்பது சிறிது குழப்படையச் செய்வதே, இருப்பினும், இக்கருத்தினை நன்கு வலியுறுத்துதல் பின்வரும் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தொடர்பணியாக , மாணவர்களை நடைப்பயணம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லலாம். அந்த நடைப்பயணத்தில் அவரவர் இடதுபுறம் மற்றும் வலதுபுறத்தில் பார்த்தப் பொருட்களைப் பட்டியலிடுமாறு கூறலாம்.

நடைபயணத்தின்போது, அவர்கள் பார்த்தப் பொருட்களைத் தொலைவில் உள்ளவை/ அருகில் உள்ளவை என வகைப்படுத்துதல் வேண்டும். இக்கருத்தினை வலியுறுத்த சூரியன், சந்திரன், விண்மீன் போன்றவற்றைப் பற்றிக் கூறி தொலைவு என்பதை தெளிவுபடுத்த வேண்டும்/ உணர்த்த வேண்டும்.

இடது வலது: தொலைவு/அருகில் போன்ற சொற்களை நன்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் இடஅமைவு என்னும் கருத்தைக் கற்பிக்க / வலுப்படுத்த ஏதுவாக இருக்கும்.

வகுப்பறைக்குச் சென்றபின், நடைபயணத்தின்போது பாதையின் இடது மற்றும் வலதுபுறத்தில் அவரவர் பார்த்த இடங்களை (மரம், வீடு, கோவில், மைதானம்) காகிதத்தில் படமாக வரையச் செய்தல் வேண்டும்.

மாணவர்களால் அவ்வாறு வரைய இயலவில்லை என்றால், இணைப்பு-1 ல் உள்ள படத்தைக் காண்பித்து நடைபாதையில் பார்த்தவற்றை வரையச் செய்யலாம்.

படிநிலை – 2 (வகுப்பு 3)

சுருக்கப்படம் (Sketch) வரையும் முறைகளை அறிமுகப்படுத்துதல்.

எடுத்துக்காட்டு:

பள்ளி வகுப்பறை மற்றும் மைதானம் / சுற்றுப்புறத்தைக் சின்னங்கள் (அ) குறியீடுகள் கொண்டு வண்ணமயமான சுருக்கப்படமாக வரையச் செய்தல்.

சுருக்கப்படம் வரைய கற்பிப்பதற்கு முன் சுருக்கப்படத்தில் அடையாளங்கள் மற்றும் குறியீடுகளின் முக்கியத்துவத்தை ஆசிரியர் விளக்கிக் கூறுதல் வேண்டும்.

பெயர் குறிப்பிடப்படாமலேயே குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் மூலம் பல்வேறு பொருட்களைச் சரியாக உணர்த்தலாம் என்பதை நாம் மாணவர்களுக்கு உணர்த்தலாம். நாம் அன்றாடம் காணும் சாலையோரக்  குறியீடுகளில் சில எடுத்துக்காட்டுகள் - முறையான வாகன நிறுத்தத்தின்  அருகே ‘P’ என்ற குறியீடாகவும், வாகனங்களை நிறுத்தக்கூடாது  என்பதற்கு ‘P’ என்ற எழுத்தின் குறுக்கே  கோடிட்டக் குறியீடு.

மேலும், சில பொருட்களை நாம் ஓவியம் மற்றும் சின்னங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம். அத்தகைய ஓவியங்கள் குறியீடுகள்  ‘சின்னங்கள்’  எனப்படும்.

இவ்வாறு ஓவியம் மூலமாகவே புரிந்து கொள்ளக்கூடிய, சில பொருட்களைக் (மரம், பூ, புல், வீடு) கரும்பலகையின் ஒரு மூலையில் எந்த ஓவியம் எப்பொருளைக் குறிக்கிறது என்ற அட்டவணை ( index ) வரைந்து வைத்தால் உதவியாக இருக்கும்.

மாணவர்களையும், வகுப்பறையின் சுருக்கப்படம் ஒன்றை வரையுமாறு பணிக்கலாம்.

அவரவர் விருப்பப்படி சின்னங்கள் மற்றும் குறியீடுகள் தேர்வுசெய்து வரைந்து கொள்ளும்படி சொல்லலாம். வண்ணங்களையும் மாணவர் விருப்பத்திற்கே விட்டுவிடுவது நல்ல பலனைத் தரும்.

ஒருமுறை, மாணவர்கள் அவரவர்  வகுப்பறையை வரையக் கற்றுக்கொண்டார்கள் எனில், அவர்களை வெளிப்புறச் சூழலுக்கு அழைத்துச் செல்லலாம். (பள்ளி மைதானம் / சுற்றுப்புறம்).

பள்ளி மைதானத்தின் ஒருபகுதியை வரையறுத்துக்கொடுத்துச், சுருக்கப்படம் வரையுமாறு கூறலாம். அவற்றிற்கேற்ற அடையாளங்கள் மற்றும் குறியீடுகள் இடுமாறு வலியுறுத்தலாம்.

மேற்கூறியபடி, மைதானத்தின் சுருக்கப்படம் வரையும்போது, வண்ணங்கள் மற்றும் அடையாளங்களின் தேர்வை வழக்கம்போல் மாணவர் தம் விருப்பத்திற்கே விட்டுவிட வேண்டும்.

இந்தச் சுருக்கப்படத்தின் அளவு மற்றும் விகிதத் தன்மை குறித்து ஆசிரியர் அதிகம் கவலையோ, கவனமோ கொள்ளத் தேவையில்லை.

படிநிலை – 3 (வகுப்பு 4)

முதன்மையான நான்கு திசைகளை (direction )  அறிமுகப்படுத்துதல்.

திசைகள் (வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு) என்பவை, வரைபடங்களோடு மிக நெருங்கிய தொடர்பு உடையவை. வரைபடத்தில் வழி மற்றும் இடங்களைக் கண்டறிய திசைகள் மிகவும் உதவியாக இருக்கும்.

திசைகளைக் கற்பிக்க, சில எளிய மற்றும் தெளிவான வழியைக் கையாளுதல் அவசியம், மாணவர்களைக் காலை வேளையில் பள்ளி மைதானத்திற்கு அழைத்துச் சென்று வரிசையில் நிற்க வைத்து, அவர்களது இரு கைகளையும் நன்றாக இருபுறமும் நீட்டுமாறு கூறலாம். அவர்கள் சூரியனைப் பார்த்தவாறு நிற்க வேண்டும்.

அவ்வாறு நிற்கும்போது, சூரியன் இருக்கும் திசை கிழக்கு எனவும், இடப்புறம் உள்ள திசையை வடக்கு எனவும், அவர்களின் பின்புறம் மேற்கு எனவும் கற்பிக்கலாம்.

கைகளை நன்கு நீட்டிய நிலையிலேயே , மாணவர்தம் இடதுபுறம் உள்ள இடங்களை / பொருட்களைப் பட்டியலிடச் செய்யலாம். பட்டியல் இட்டபின் அப்பொருட்கள் வடக்கு திசையில் உள்ளன எனக் கூறலாம்.

இதேபோல், வலப்புறம் காணப்படும் பொருட்களைப் பட்டியலிடச்செய்து, அவை அனைத்தும் பள்ளிக்குத் தெற்கே உள்ளன என அறிவுறுத்தலாம்.

இச்செயல்பாட்டினை, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கற்பிக்கவும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மாணவர்கள், சிறிது சிறிதாக இடது- வலது, வடக்கு – தெற்கு எனும் புதிய கருத்தினை அறிந்து கொள்ளுதல் மிகுந்த பலனைத் தரும்.

மாணவர்கள், நான்கு முக்கிய திசைகளைக் கற்றப்பின், அவற்றின் உதவியோடு வகுப்பறையின் சுருக்கப்படம் ஒன்றை வரையச்செய்தல்.

அவ்வாறு வரையும்போது படத்தின் வடக்குப் புறத்தைக் குறிக்கும் வகையில் அம்புக்குறி ஒன்றை இடுதல் அவசியம் எனக் கூறுதல்.

வகுப்பறையை மையமாக வைத்துத் திசைகளை அறிமுகப்படுத்திய பின்னர், வெளிப்புறச் சூழலுக்கு அழைத்துச் சென்று, இக்கருத்தினை மேலும் வலுப்படுத்தலாம்.

மாணவர்கள் வரைந்த சுருக்கப்படத்திற்கு ஏற்ற தலைப்பு ஒன்றையும் வைக்கச் சொல்லலாம்.

இறுதியாக, மாணவர்கள் அன்றாடம் அவரவர் வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் பாதையை, அங்கு காணும் முக்கிய இடங்களையும் சுருக்கப்படமாக வரைந்து வருமாறு பணித்தல் மாணவர்களுக்கு இன்னும் தெளிவு அளிக்கும்.

இவ்வாறு குறிப்பிட்ட அளவுகோல் / விகிதம் இன்றி எளிமையாக வரையப்படுவது சுருக்கப்படம் எனப்படும்.

படிநிலை – 4 (வகுப்பு 5)

அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை உதவியோடு உலக வரைபடத்தில் இடங்களை/ ஊர்களைக் குறிக்கக் கற்றல்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை குறித்து நன்கு தெரிந்திருக்கும். ஆகையால், ஆசிரியர், வரைபடப்புத்தகம் ஒன்றினைப் பயன்படுத்தி, கற்றலை எளிமையாக்கலாம்.

மாணவர் தம் வரைபடப்புத்தகம் எடுத்து, அதில் இந்தியா- மாநிலங்கள் உள்ள பக்கத்தை எடுக்கச் சொல்லுதல்.

வரைபடத்தில் குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் கோடுகளை உற்றுநோக்கச் செய்தல். கடகரேகைகளையும் கவனிக்கச் சொல்லுதல்.

இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களின் அட்சரேகை, தீர்க்கரேகை எண்களைக் கொண்டு நகரங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்கச் செய்தல்.

புதுதில்லி – 28 ‘ N     77’ E

மும்பை    - 18 ‘N   72’ E

சென்னை – 13 ‘N    80’E

கொல்கத்தா – 22  ‘N  88’E

இப்பொழுது, ஆசிரியரே  அட்சரேகை, தீர்க்கரேகை எண்களைக் குறிப்பிட்டு நகரங்களைக் கண்டுபிடிக்கச் செய்யலாம்.

வரைபடப்புத்தகத்தின் பின்புறத்தில் நகரங்களின் பெயர்கள் மற்றும் அவை அமைந்துள்ள ரேகை எண்களையும் வைத்துச்  சரிபார்க்கச் செய்தல்.

மதிப்பீடு:

இணைக்கப்பட்ட பணித்தாள்களை நான்காம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களை மதிப்பீடு செய்ய பயன்படுத்தலாம். பணித்தாள் – 1 & 2 மற்றும் இணைப்பு-1 ஆகியவற்றை கீழ்க்காணும் இணைப்பில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Source: Translated from Teachers of India authored by Mahuya Sen Gupta http://www.teachersofindia.org/en/lesson-plan/map-reading

Grade: 
3
4
5

Subject: 
EVS

Term: Term 2